மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழமரங்கள் வளர்ப்பும்!

மானாவாரி Mangotreer

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.

ம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 144 மில்லியன் எக்டர் பரப்பு மானாவாரியாக உள்ளது. இதில், 66.2 மில்லியன் எக்டர் பரப்பு, களிமண்- கரிசல் மண் நிலங்களாகும்.

இந்த மண் குறைந்தளவு நீரை மட்டுமே உறிஞ்சுவதால், பெய்யும் மழைநீரில் பெரும்பகுதி வழிந்தோடி வீணாகிறது. இப்பகுதி சாகுபடி மழைநீரையே நம்பி இருப்பதால், ஓராண்டில் கிடைக்கும் 700-1,000 மி.மீ. மழைநீர், அந்த மழைக்காலமான 2-3 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. இதர மாதங்களில் வறட்சியாகி விடுகிறது. எனவே, கிடைக்கும் மழைநீரைக் கொண்டு மானாவாரியில் சிறப்பாகச் சாகுபடி செய்வது ஒரு கலையாகும்.

இஸ்ரேலில் ஓராண்டில் 100 மில்லி மழை கிடைக்கும் இடங்களில் கூட, நுணுக்கங்களைப் பயன்படுத்தி, பேரி, பாதாம், மாதுளை போன்ற பழமரங்களை வளர்க்கிறார்கள். இராஐஸ்தானில் 350 மில்லி மழையுள்ள வறண்ட பகுதியில் சீமை இலந்தை, கொடுக்காய்ப்புளி, புளி, சீத்தா போன்ற மரங்களை நன்கு வளர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஓராண்டில் 700-1,000 மில்லி மழை பெய்வதால், மானாவாரியில் பழ மரங்களை நன்கு வளர்க்கலாம். இந்தியாவில் 25 இலட்சம் எக்டரில் பழ மரங்கள் உள்ளன. இதில், சுமார் 11 இலட்சம் எக்டரில் மாமரங்கள் உள்ளன. பொதுவாகப் பழமரங்கள் மானாவாரியில் தான் வளர்க்கப் படுகின்றன.

மானாவாரி நிலத்தின் தன்மைகள்

மானாவாரி நிலங்கள் மேடு பள்ளம், ஓடை உடைப்புடன் இருக்கும். இதனால், மேல்மண் முழுவதும் மழைநீரால் அடித்துச் செல்லப்படுவதால், இந்நிலங்கள் சத்துகள் குறைந்தும், நல்ல மண்கண்டம் இன்றியும் இருக்கும். உப்புச் சத்துகள் தேங்குமிடங்கள் களர் உவர் நிலங்களாக மாறிவிடும்.

மரங்கள், செடி கொடிகளை மனிதனும், புல் பூண்டுகளை ஆடு மாடுகளும் அழிப்பதால், மானாவாரி நிலங்கள், வெய்யில், மழை, காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய நிலங்களிலும் பழ மரங்களை நன்கு வளர்க்கலாம்.

தரிசு நிலங்களில் பழமரங்கள்

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தென்மேற்குப் பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் கிடைக்கும். அதாவது, ஆனி முதல் கார்த்திகை வரை பரவலாக மழை பெய்யும். இப்பகுதிகளில் ஓரளவு வறட்சியைத் தாங்கும் பழமரங்கள் நன்றாக வளரும்.

ஆனால், தென் மாவட்டங்களில் பெரியகுளம், இராஐபாளையம், தென்காசி ஆகிய பகுதிகளில், ஆனி ஆடியில் சாரல் அடிப்பதால் பழமரங்கள் செழித்து வளர்கின்றன. மற்ற பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகையில் பெய்து முடிந்து விடுவதால், ஏனைய மாதங்கள் வறட்சியாக இருக்கும். இந்தப் பகுதிகளில் வறட்சியை நன்கு தாங்கும் பழமரங்களை வளர்க்கலாம்.

சீமை இலந்தை, களர் உவர் நிலத்திலும் வறட்சியைத் தாங்கி நன்கு வளரும். சப்போட்டா, சீத்தா, நாவல், நெல்லி, மேற்கு இந்திய செர்ரி மரங்கள் ஓரளவு வறட்சியிலும், ஓரளவு களர் உவர் நிலத்திலும் வளரும்.

மாதுளை, மா முதலியன வறட்சியைத் தாங்கினாலும், போதிய மழை இருந்தால் தான் மகசூல் நன்றாக இருக்கும். கடும் வறட்சியில் பிஞ்சுகள் நிறையளவில் உதிர்ந்து விடும்.

வறட்சியைத் தாங்கும் பழமரங்கள் கோடையில் இலைகளை உதிர்த்து விடும். அடுத்து மழை பெய்ததும் துளிர்த்து, மொட்டுகள் அரும்பி, பூ, பிஞ்சு, காய், கனியென, மழைக்காலம் முடிந்து அடிமண் ஈரம் காய்வதற்குள் மகசூலை முடித்து விடும்.

ஆழமாக வேர்விட்டு நீரை உறிஞ்சும் சப்போட்டாவின் இலைகள் பருமனாகவும், பளபளக்கும் பிசினுடனும் இருப்பதால், இலைகள் உதிரா விட்டாலும் வறட்சியால் இந்த மரங்கள் பாதிக்கப்படுவது இல்லை.

கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்றவை, இரண்டு பருவங்களில் மழை பெய்யும் இடங்களில் நன்றாக வளரும். வறட்சியில் பாசனம் செய்தால் நல்ல மகசூலைப் பெற முடியும். இந்த மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் ஏற்றது.

சரிவான நிலங்களில் மழைநீர்ச் சேமிப்பு

சமத்தளம் மற்றும் பிறைவடிவ வரப்புகளை அமைத்தல்: மலைப் பகுதிகளில் மிகவும் சரிவான நிலங்களில் தகுந்த இடைவெளியில், சரிவுக்குக் குறுக்காக இரண்டு மீட்டர் அகலத்தில் பெஞ்ச் போன்ற சமத்தளங்களை அமைத்து, குழிகளை வெட்டி கன்றுகளை நடலாம்.

இந்த பெஞ்ச் அமைப்பு, சரிவுக்குச் சற்றுக் கீழ் நோக்கி இருக்க வேண்டும். கீழ் நோக்கிய பகுதியில் ஒரு அடி அகலத்தில் வாய்க்காலைத் தோண்டி விட்டால், தேவைக்கு அதிகமான மழைநீர் அவ்வழியே சென்று விடும்.

பிறைவட்ட வரப்புகளை அமைத்தல்: லேசான சரிவாக இருந்தால், சரிவின் குறுக்கே, பிறைவட்ட வரப்புகளை அமைக்க வேண்டும். நடப்போகும் பழப் பயிர்களுக்கு ஏற்ப, இந்த வரப்புகள் 6-15 மீட்டர் விட்டத்தில் இருக்கும்.

உதாரணமாக, மாதுளை போன்ற சிறிய பழமரங்களுக்கு 6 மீட்டர் விட்டம் போதும். இப்பிறை வட்டத்தின் நடுவில் குழியை எடுத்துக் கன்றை நட வேண்டும். இந்தக் குழியை, பழக்கன்றுக்கு மேல்பக்கம் சரிவுக்குக் குறுக்கே செவ்வகமாக எடுக்க வேண்டும். மழையின் போது, குழியில் தேங்கும் மழைநீர் இந்தக் கன்றுகளுக்குப் பயன்படும்.

சம உயரச் சுவரை அமைத்தல்: சரிவு மிகுந்தும், மண்கண்டம் மிகவும் குறைந்தும் இருக்கும் மலைப் பகுதியில், அந்தப் பகுதியிலேயே கிடைக்கும் கற்களை, சரிவுக்குக் குறுக்கே அடுக்கிச் சுவரை எழுப்பி, நீரின் வேகத்தைக் குறைக்கலாம். இதனால், இதற்குக் கீழேயுள்ள நிலங்களுக்குச் செல்லும் மழைநீரின் வேகம் குறையும், மண்ணரிப்பும் தடுக்கப்படும்.

சம ஆழ வாய்க்கால் அமைத்தல்: இது, மிகவும் சரிவான மலைப் பகுதியில், மண்கண்டம் நிறைந்த இடங்களில் அமைக்கப்படும். நீண்ட வாய்க்காலை அமைத்து, அதில் பாதியளவில் மண்ணையிட்டு மரங்களை வளர்க்கலாம். மழைநீர் இந்தச் சரிவுப் பள்ளத்தில் தேங்கி, வேகமின்றிச் செல்வதால் மண்ணரிப்பு நிகழாது.

கரிசலில் மழைநீர்ச் சேமிப்பு

தாவர அரண் அமைத்தல்: கரிசலில் மழை பெய்யும் போது, நீர் ஓடும் திசைக்குக் குறுக்கே 50 மீட்டர் இடைவெளியில் வரப்புகளைக் கனமாக அமைக்க வேண்டும். வெட்டிவேரை நட்டு விட்டால் அந்த வரப்புகள் அழியாமல் இருக்கும்.

கரிசலில் வெட்டிவேர், மிகவும் அடர்த்தியாக, ஆழமாக வளரும். பருத்த சல்லி வேர்கள் அடர்ந்து படர்ந்து வலுவாக வேரூன்றி, மண்ணரிப்பு மற்றும் ஓடைகள் உருவாவதைத் தடுக்கும். பெருமழை பெய்யும் போது சில இடங்களில் சிறிய உடைப்புகள் ஏற்படலாம்.

கோடையுழவு: பழமரக் கன்றுகளை நடுவதற்கு முன், சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். கோடையில் நாட்டுக் கலப்பையால் உழுதால், மழைநீர் எளிதாக நிலத்துக்குள் இறங்கும்.

வட்ட வரப்புகளை அமைத்தல்

வரப்புகள் அமைத்தல்: மர வரிசைகளுக்கு நடுவில் வரப்புகளை அமைத்தால், மழைநீர் தேங்கி, பூமிக்குள் இறங்கும். இதனால், நிலத்தடி நீர் கூடி, பழ மரங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். மண்ணரிப்பு இல்லாமல் நிலவளமும் காக்கப்படும்.

புதிய முறையில் மழைநீர்ச் சேமிப்பு

இது, ஒவ்வொரு மரத்துக்கும் 5 சத சரிவில் நீர்ப்பிடிப்புப் பரப்பை அமைக்கும் முறையாகும். உதாரணமாக, கரிசலில் சீமை இலந்தைச் செடிகளை ஒரு வரிசையில் 8 மீட்டர் இடைவெளியில் நட்டுவிட்டு, இரு பக்கமும் மரத்தை நோக்கிச் சரிவை அமைக்க வேண்டும்.

இதற்கு இரண்டு வரிசை மரங்களுக்கு இடையே பெரிய வரப்பை எடுத்து, மரத்தை நோக்கி மண்ணை இழுத்துச் சீரான சரிவை அமைக்க வேண்டும். மரத்திலிருந்து பத்தடியில் வரப்பு உள்ளதாக வைத்துக் கொண்டால், அந்த வரப்பை அரையடி உயரத்தில் இருந்து, மரத்தை நோக்கிச் சரிவாக அமைக்க வேண்டும்.

இப்படி அமைத்து விட்டால், பெய்யும் மழை நீரில் பெரும்பகுதி, 8க்கு 8 மீட்டர் இடைவெளியில், அதாவது, 64 சதுர மீட்டர் பரப்பில் தேங்கிப் பயனளிக்கும். கரிசல் நிலத்துக்கு இந்தப் பரப்பு போதும்.

செம்மண் மற்றும் மணல் கலந்த நிலங்களில், அதிக இடைவெளியில் கன்றுகளை நட்டு 5 சதவீதச் சரிவுகளை இருபுறமும் அமைக்க வேண்டும். மா, புளி, நாவல், நெல்லி போன்ற மரங்களுக்கு அதிக இடைவெளியும் அதிக நீர்ப்பிடிப்புப் பகுதியும் தேவை.

மழை குறைவாக பெய்யும் பகுதிகளில், இடைவெளியை மிக அதிகமாகக் கொடுக்கிறார்கள். ஆண்டுக்கு வெறும் 350 மி.மீ. மழை பெய்யும் இராஐஸ்தானில், இம்முறையில் பழமரங்களைச் சிறப்பாக வளர்க்கிறார்கள்.

இப்படி, இருபுறமும் சரிவுகளை அமைப்பதால் ஒரு எக்டரில் 3,000 க.மீ. நீர் நிலத்தில் தங்குகிறது. இப்படி அமைக்கா விட்டால், வெறும் 500 க.மீ. நீர் மட்டுமே தங்கும். ஐந்தடி ஆழம் வரையில் மண் ஈரம் இருப்பின், மானாவாரிப் பழமரங்கள் 2-3 மாத வறட்சியைக் கூடத் தாங்கும்.

மண்ணின் ஈரம் காத்தல்

காற்றுத் தடுப்பான்: இது, மண்ணிலுள்ள ஈரத்தைக் காக்கும் மற்றொரு முக்கியத் தொழில் நுட்பமாகும். எவ்வளவு தான் மண்ணில் ஈரம் இருந்தாலும், அனல் காற்றில் ஆவியாகி விடும். காற்றின் வேகத்தைத் தடுத்தாலே நிலத்து நீர் வீணாவதைக் குறைக்க முடியும்.

காற்று வீசும் வேகத்தைப் பொறுத்து, 100-200 மீட்டர் இடைவெளியில் காற்று வீசும் திசைக்குக் குறுக்கே, உயரமாக வளரும் யூக்கலிப்டஸ் அல்லது சவுக்கு மரங்களை நட வேண்டும். இந்த வரிசைக்கு 10 அடி தள்ளி, பனை மரங்களை வரிசையாக, நெருக்கமாக வளர்க்கலாம். பனை மரங்களால் துணை வருமானமும் கிடைக்கும்.

நிலப்போர்வை: மரத்தைச் சுற்றிப் பாத்திகளில் பயிர்க் கழிவுகளை நிலப் போர்வையாக இட்டால், மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கலாம். இந்த நிலப் போர்வை, களைகளைக் கட்டுப்படுத்தி மண்ணரிப்பையும் தடுக்கும்.

மேலும், இக்கழிவுகள் நாளடைவில் உரமாக மாறி மரங்களுக்குக் கிடைக்கும். மட்கிய தென்னை நார்க்கழிவு, மரத்தூள், காய்ந்த சருகுகள், மாடுகள் கழித்த தட்டைகள் போன்றவற்றை, மரங்களைச் சுற்றிப் பரப்ப வேண்டும்.

தென்னை நார்க்கழிவு அதன் அளவைப் போல், ஐந்து மடங்கு நீரை உறிஞ்சி மண் ஈரத்தைக் காக்கும். கோடையில் மழை பெய்து பத்து நாட்கள் கழித்துக்கூட, தென்னை நார்க்கழிவை விலக்கிப் பார்த்தால் மேல் மண்ணில் ஈரம் இருப்பதைக் காணலாம்.

நடவு முறை

மானாவாரியில் பழமரங்களுக்கு அதிக இடைவெளியைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், மரத்தின் வேர்கள் பல அடிகள் வரையில் பரவியிருக்கும். எனவே, நெருக்கமாக நட்டால் மரங்களுக்குப் போதிய நீரும், சத்தும் கிடைக்காது.

இயற்கை உரமிடுதல்

மானாவாரிப் பழமரங்களுக்கு இரசாயன உரங்களை விட, தொழுவுரத்தைத் தான் நிறைய இட வேண்டும். இதனால் இளகும் மண், அதிக மழைநீரைத் ஈர்த்து வைக்கும். மழைக்காலத்தில் மரங்களுக்கு இடையே ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.

அறுவடைக்குப் பின் இந்த ஊடுபயிர்த் தழைகளை மரங்களைச் சுற்றிப் பரப்பி நிலப் போர்வையாக்கி, மண்ணின் ஈரத்தைக் காக்கலாம். இவை நாளடைவில் மட்கி, நல்ல அங்கக உரமாகி மண்வளத்தைக் கூட்டும்.

நீராவியைத் தடுத்தல்

பழமரங்களின் இலைத் துளைகள் வழியே நீர் ஆவியாவதால், இலைகள் வாடும். கயோலின் என்னும் சுண்ணாம்புக் கரைசலை, 100 லிட்டர் நீருக்கு 5 கிலோ வீதம் கரைத்து இலைகளில் தெளித்தால், நீர் ஆவியாதல் குறைந்து, இலைகள் வாடாமல் இருக்கும். சுண்ணாம்புக் கரைசலையும் இந்த அளவில் தெளிக்கலாம்.

பினைல் பாதரச அமிலத்தைத் தெளித்தும் நீர் ஆவியாதலைக் குறைக்கலாம். பல்வேறு பிளாஸ்டிக் கரைசல்கள், கரையும் மெழுகுக் கரைசல்களைத் தெளித்து, இலைகளின் மேல் மெல்லிய கண்ணாடிப் படலத்தை ஏற்படுத்தலாம். எனினும், இவற்றைச் செய்ய நிறையச் செலவாவதால், நடைமுறைக்கு ஒத்து வருவதில்லை.

பொட்டாஷின் பயன்

சாம்பல் சத்தனாது வறட்சியைத் தாங்கும் திறனைப் பயிர்களுக்குத் தருகிறது. நிலத்தில் சாம்பல் சத்து நிறைய இருந்தாலும், மழைக்காலத்தில் மேலுரமாகக் கொஞ்சம் இட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மழைக்காலம் முடிந்து வறட்சி தொடங்கியதும், மாதம் ஒருமுறை ஒரு சதப் பொட்டாஷ் கரைசலை, இலைகள் நன்றாக நனையும்படி தெளித்தால், மரங்கள் வறட்சியைத் தாங்கி வளர்ந்து, சுவையான பழங்களைக் கொடுக்கும்.

தெளிப்பதற்கு முதல் நாளே பொட்டாசை நீரில் கலந்து வைத்து மறுநாள் வடிகட்டித் தெளிக்க வேண்டும். ஒரு வாளிக் கரைசலுக்கு 10 மில்லி சோப்புக் கரைசல் வீதம் கலந்து தெளித்தால், இலைகளில் கரைசல் நன்றாகப் பரவும்.

மானாவாரிக் கரிசலில் மா, சப்போட்டா, சீமை இலந்தை, கொய்யா, மாதுளை, சீதா, நெல்லி, நாவல் போன்ற பழமரங்கள் நன்கு வளரும். ஆகவே, இதுவரையில் கூறிய முறைகளில் மழைநீர் நிர்வாகம் செய்தால், தரிசு நிலத்திலும் பழமரங்களை வளர்த்து நிறைய வருமானத்தை ஈட்டலாம்.


மானாவாரி DR A SOLAIMALAI scaled e1716092849698

முனைவர் அ.சோலைமலை, முனைவர் சு.இருளாண்டி, முனைவர் ஜே.இராஜாங்கம், தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம் – 625 604. முனைவர் சு.சண்முகப் பாக்கியம், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன் – 622 303.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!