புறா வளர்ப்பு!

புறா HP 623106187115c5d93a98b4197ff8c74b

புறா, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை. இது, கொலம்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 310 இனங்கள் உள்ளன. புறா சமாதானத்தின் அடையாளம் ஆகும்.

பரவல் மற்றும் வாழ்விடம்

புறாக்கள் உலகெங்கும் பரவலாக இருந்தாலும், சஹாராப் பாலைவனம், ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளில் இவை வாழ்வதில்லை.

வெப்ப மண்டலக் காடுகளில் அதிகளவில் வசிக்கின்றன.

மேலும், சவானாக்கள் என்னும் வெப்பப் புல்வெளிகள், பிற புல்வெளிகள், சில பாலை வனங்கள், மிதவெப்ப மற்றும் சதுப்புநிலக் காடுகள்,

வட்டப் பவளத் திட்டுகளில் உள்ள சரளை மற்றும் மலட்டு நிலங்களிலும் வசிக்கின்றன.

புறாக்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோன்ட் புறா 2-4 கிலோ எடையில் பெரிதாக இருக்கும்.

ஜெனஸ் கொலம்பினா என்னும் புறா 22 கிராம் எடையில் மிகச் சிறியதாக இருக்கும்.

உடலமைப்பும் உறுப்புகளும்

புறாக்கள் பறக்கும் திறனுடையவை. அதற்கேற்ற வகையில், இறகுகள், அலகு மற்றும் கால்களைப் பெற்றுள்ளன.

புறாக்கள் கதிர் வடிவத்தில் இருக்கும். இதன் அளவு 20-25 செ.மீ. ஆகும். புறாக்கள் 8-9 அங்குலம் உயரம் வளரும்.

உடலில், தலை, கழுத்து, நடுவுடல், வால் ஆகிய பகுதிகள் உண்டு. தலை உருண்டையாக இருக்கும்.

இதன் முன்புறத்தில் கூரிய அலகு இருக்கும். அலகின் மேற்புறத்தில் ராம்போதீக்கா என்னும் தடித்த உறை இருக்கும்.

மேல் அலகின் அடியில் இரு நாசித் துளைகள் இருக்கும். அவற்றைச் சுற்றி அலகுப்பூ என்னும் பருத்த தோல் இருக்கும்.

சற்றுப் பெரியளவில் இரண்டு கண்கள் இருக்கும். இவற்றின் மேலும் கீழும் இமைகளும், சிமிட்டு மென்தகடு என்னும் மென்படலமும் இருக்கும். கண்களின் பின்புறம் இரு செவிகள் இருக்கும்.

புறாவின் கழுத்து நீளமாக இருக்கும். நடுவுடலில் இரு இறக்கைகளும் கால்களும் இருக்கும்.

உடலின் பின்புறம் கழிவாயும் வாலும் இருக்கும். இந்த வாலில் கோது என்னும் எண்ணெய்ச் சுரப்பிகள் இருக்கும்.

இங்கே சுரக்கும் எண்ணெய், அலகால் இறகுகளை நீவிவிட்டுப் பாதுகாக்க உதவும்.

இறகுகள்

புறாக்களின் உடலில், இறக்கை இறகுகள், உருவ இறகுகள், இழை இறகுகள் என மூவகை இறகுகள் உண்டு.

இறக்கையில் 23 இறக்கை இறகுகள் இருக்கும். இவற்றில், மேல் கையில் இணைந்துள்ள 11 இறகுகள் முதனிலை இறகுகள் எனப்படும்.

நடுக்கையில் இணைந்துள்ள 12 இறகுகள் இரண்டாம் நிலை இறகுகள் எனப்படும். வாலில் 12 இறகுகள் உண்டு. இவை விசிறியைப் போல இருக்கும்.

சற்றுச் சிறிதாக, மென்மையாக இருக்கும் உருவ இறகுகள், உடல் வெப்பத்தைப் பாதுகாக்கும். இழை இறகுகள் மிகவும் மென்மையாக இருக்கும்.

பழக்க வழக்கங்கள்

உணவு: இது, தானிய வகைகளை உண்ணும் பயறுண்ணிப் பறவையாகும். விதைகள், பழங்கள் மற்றும் இலைகளைச் சாப்பிடும்.

விதை மற்றும் தானியங்கள் தான் முக்கிய உணவு. பறவை இனங்களில் புறா மட்டும் தான் தன் அலகால் நீரை உறிஞ்சிக் குடிக்கும் என்பார்கள்.

நிலப் புறாக்கள், புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உண்ணும்.

பவளத்திட்டுப் பழந்தின்னிப் புறாக்கள் ஊர்வனவற்றை உண்ணும். ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளை உண்ணும்.

புறாக்கள், தங்கள் குஞ்சுகளுக்கு உணவைக் கொண்டு சென்று ஊட்டும்.

அப்போது, தமது உடலில் சுரக்கும் செரிமான நீரையும் கலந்து ஊட்டும். இது, புறாப்பால் எனப்படும்.

பிறந்து 6-8 வாரங்கள் நிறைந்த புறாக் குஞ்சுகள், கூட்டை விட்டுப் பறந்து விடும்.

கூடு: புறாக்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் தான் வாழும்.

பொந்துகள், கல் இடுக்குகள் போன்ற உயரமான, குறுகலான இடங்களில் இலை தழைகள், புற்களை வைத்தும், மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்தும் கூடுகளைக் கட்டும்.

ஒரே இடத்தில் தனித்தனி இணையாக, சுமார் நூறு இணைகள் வரை, கூடுகளைக் கட்டி வாழும்.

ஒரு பெண் புறா இரண்டு முட்டைகளை இடும். இந்த முட்டைகளை ஆணும் பெண்ணும் மாறி மாறி அடை காக்கும். 18 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.

இவற்றை இரண்டு புறாக்களும் இணைந்து பாதுகாக்கும். மற்ற பறவைகளைக் கூட்டுக்கு அருகில் விடாது.

குஞ்சுகள் 7-27 நாட்களில் கூட்டை விட்டு வெளியே வரும். புறா எச்சம் அமிலத் தன்மை மிக்கது.

கி.மு. 4500 ஆம் ஆண்டிலிருந்தே புறா, வீட்டுப் பறவையாக விளங்குகிறது. மனிதன் பிடித்து வளர்த்த முதல் பறவையும் இது தான்.

புறாக்கள் தங்களின் கூடுகளில் இருந்து ஒரு மைல் தொலைவை, வாழ்க்கை எல்லையாக வகுத்துக் கொள்ளும்.

ஆனால், உணவுக்காகப் பத்து மைலைக் கடந்தும் போகும். மணிக்கு 25-35 மைல் வேகத்தில் பறக்கும்.

வகைகள்

புறாக்களில் பல வகைகள் உண்டு. இவை, வெள்ளை, சாம்பல், கறுப்பு, பழுப்பு போன்ற நிறங்களில் மற்றும் இவற்றின் கலப்பில் இருக்கும்.

ஆண் புறா, தன் தலையை ஆட்டி ஆட்டி, குர்குர் என்னும் ஒலியை எழுப்பி, தன் பெண் புறாவை அழைக்கும். இதன் மூலம், ஆண், பெண் புறாக்களை அடையாளம் காணலாம்.

அலங்காரப் புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இவற்றை, பறவை ஆர்வலர்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

தூது மற்றும் பந்தயம்

மன்னர்கள் காலத்தில், தகவல் மற்றும் தூது ஓலைகளை அனுப்ப, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட புறாக்கள் பயன்பட்டன.

தமிழ்நாட்டில் இப்போதும் புறாப் பந்தயம் நடக்கிறது. வளர்ப்புப் புறாக்களை வெகு தொலைவில் விட்டு விட்டு, அவை தங்களின் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறார்கள்.

வீட்டுப் புறாக்கள் சிறிய உருவில் சாதுவாக இருக்கும். காட்டுப் புறாக்கள் உருவத்தில் சற்றுப் பெரிதாக இருக்கும்.

மதங்களில் புறாக்கள்

எபிரேய விவிலியத்தில் விலை உயர்ந்த பொருள்களைக் கடவுளுக்குப் படைக்க முடியாத மக்கள், புறாக்களைப் பலியிட்டுப் படைத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

இயேசு உயிர்த்து எழுந்த பிறகு, அவரது பெற்றோர், புறாவைப் பலியிட்டு இறைவனுக்குப் படைத்ததாகக் கூறப்படுகிறது.

நபிகள் நாயகத்துக்கு உதவிய காரணத்தால், இசுலாமிய மதத்திலும் புறாக்கள் மிகவும் மதிக்கப் படுகின்றன.

இந்து மதத்தில், புறாக்களுக்கு உணவளித்தல் புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.

குறியீடாகப் புறாக்கள்

இசுரேலிய கடவுள் அசெரா, உரோமானிய கடவுள் வீனஸ், போர்சுனேட்டா, போன்பேசிய கடவுள் தனித் ஆகியோரின் குறியீடாகப் புறாக்கள் விளங்கின.

கிறித்தவத்தில் புறாக்களின் அலகில் தாங்கப்பட்ட ஆலிவ் இலைக் கொத்துகள் சமாதானக் குறியீடாகக் கருதப்படுகின்றன.

மனிதர்களும் புறாவும்

இராணுவம்: முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் புறாக்களைப் பயன்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக, ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்சு, செருமனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில், போரின் போது புறாக்கள் பரவலாகப் பயன்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற 32 புறாக்கள், டிக்கின் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

உணவு: ஒரு புறா 300-350 கிராம் இருக்கும். அனைத்துப் புறாக்களையும் உண்ணலாம். புறாவின் மார்பு இறைச்சி ருசியாக இருக்கும்.

பழங்காலம் முதலே மத்திய கிழக்கு, உரோம், மத்திய ஐரோப்பா ஆகிய நாடுகளில் காட்டுப் புறாக்களும் வீட்டுப் புறாக்களும் உணவாகப் பயன்படுகின்றன.

யூதர்கள், அசாமியர்கள், அரேபியர்களின் உணவில் புறா இறைச்சி இடம் பெறுகிறது. ஆசியர்களில், இந்தோனேசியரும், சீனரும் புறாக்களை உண்கின்றனர்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா, உதவிப் பேராசிரியர், கால்நடை உற்பத்தி மேலாண்மைத்துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!