தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!

தமிழ்நாடு tn 1
அங்கக வேளாண்மை

லக இலக்கியங்களில் எந்த மனிதரையும் விட, உழவருக்கே மிகச் சிறந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளின் மிகச் சிறந்த கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், உழவர்களை மிக உயர்வாகப் பாராட்டுகின்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ஐரோப்பிய இலக்கியத்தில், ஹோமரும் ஹெசியோடும், உழவர்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் வெகுவாகப் பாராட்டிக் கொண்டாடி உள்ளனர்.

பல்வேறு தலைமுறையினரால் போற்றப்பட்ட இலக்கியப் படைப்புகளில் செல்வாக்கு மிக்கதும், தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதுமான திருக்குறளிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, வேளாண்மையின் முக்கியம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. வளர்ச்சி, மேம்பாடு என்னும் பெயரில், வேளாண் தொழிலில் இருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், வாழ்வாதாரத்துக்காக வேளாண்மையை நோக்கித் திரும்புவோம் என்னும் உண்மையைத் திருக்குறள் வலியுறுத்துகிறது. அய்யன் திருவள்ளுவர், வேளாண்மை மற்றும் அங்கக வேளாண்மையின் முக்கியத்தை எடுத்தியம்புகிறார்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும். ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இடாமலே அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும். இதன் மூலம், இயற்கை வேளாண்மையின் முக்கியத்தையும் பயன்களையும் முன்னிலைப்படுத்தி உள்ளார்.

பண்டைய இந்திய வேளாண்மை

பராசர முனிவர் கி.மு.400 இல், வேளாண் பயிர் சாகுபடி குறித்து எழுதியுள்ளார். அதில், வேளாண் நடைமுறைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி உள்ளார். இவ்வரிசையே, வேளாண்மையை அறிமுகம் செய்யும் விதமான நூல்களில் இன்றும் பின்பற்றப்படுகின்றன. கி.மு.200 இல், தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்னும் நூல் எழுதப்பட்டது.

அதில், வேளாண்மையின் அம்சங்கள் குறித்த விளக்கங்களில், வேளாண் நிலங்கள் நான்கு வகைகளாக, அதாவது, மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த பகுதி முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த பகுதி நெய்தல் எனவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதைப்போல, பருவ காலங்கள், இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பிரிவுகளாகக் காட்டப்பட்டு உள்ளன.

கால வரிசை

குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மை மேம்பட்டிருந்தது. சாகுபடியின் தொடக்கக் காலத்தில் இருந்து இன்று வரை இதில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தெற்குச் சீனம், ஆப்பிரிக்காவின் சஹேல், நியூ கினியா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் வேளாண்மையில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்பட்டது.

பாசனம், பயிர்ச் சுழற்சி முறை, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற, வேளாண் நடைமுறைகள் நெடுங்காலத்துக்கு முன்பே உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவை, கடந்த நூற்றாண்டில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

முக்கியத் திருப்பு முனைகள்

1800 ஆம் ஆண்டில், இரசாயன உரங்களின் பயன்பாடு தொடங்கியது. மேலும், 1900 ஆம் ஆண்டில், கால்நடைகள், கோழி, மீன் மற்றும் பயிர்களின் உற்பத்தியைத் தொழிலாக மேற்கொள்ளும், நவீன விவசாயத்தின் ஒரு வடிவமான தொழில்சார் வேளாண்மை தொடங்கியது.

தாவர வளர்ச்சியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் முக்கியக் காரணிகள் என அறியப்பட்டதால், செயற்கை உரங்கள் உற்பத்திக்கு வழிவகுத்து, மகசூலைப் பெருக்கும் விவசாய முறைகள் உருவாகின.

1939 ஆம் ஆண்டில் பால் முல்லரால் கண்டுபிடிக்கப்பட்ட டி.டி.ட்டி. என்னும் டைகுளோரோ- டைபெனைல்- ட்ரைகுளோரோ ஈத்தேன், அதன் செயல் திறனுக்காக, உலகில் மிகவும் பரவலாகப் பயன்படும் பூச்சிக்கொல்லியாக மாறியது.

1940 ஆம் ஆண்டுகளில், உற்பத்தியாளர்கள் செயற்கைப் பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் உற்பத்தி செய்யத் தொடங்கினர். அவற்றின் பயன்பாடுகளால், 1940 மற்றும் 1950 ஆம் ஆண்டுகள், பூச்சிக்கொல்லிகளின் சகாப்தத்துக்கான தொடக்கமாக இருந்தன.

பசுமைப் புரட்சியும் அதன் தாக்கமும்

1940 க்கும் 1960 க்கும் இடைப்பட்ட காலத்தில், பசுமைப் புரட்சியானது விவசாயத்தை மாற்றியமைத்தது. சில பகுதிகளில் வேளாண் உற்பத்தியைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்த இப்புரட்சி வழி வகுத்தது. பெரும் சமூக, சூழலியல் தாக்கங்களை ஏற்படுத்தியது. தீவிர சாகுபடியில் விளைந்த பொருள்களில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் (Pesticide Residues) காணப்பட்டன.

எஞ்சிய இரசாயனங்கள், உணவுச் சங்கிலியில் ஊடுருவி உயிரி உருப்பெருக்கம் அடைந்து (Bio magnification) சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மனித குலத்துக்கும் விலங்குகளுக்கும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வழிவகுத்தன.

காலப்போக்கில், பலன் உயர்வு குறைவு விதியின் விளைவுகள் (Law of Diminishing Marginal Returns) வேளாண்மையில் உணரப்பட்டன. செயற்கை நைட்ரஜன் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு மாறிய நிலைக்கு மாற்றாக, 1900 ஆம் ஆண்டில், இயற்கை வேளாண்மை நீடித்த நிலையான வேளாண்மை முறை என்னும் நம்பிக்கையின் அடிப்படையில், பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், அதை மேம்படுத்துவதில் உலகளவில் ஈடுபட்டனர்.

1972 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள விவசாயிகளைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, இயற்கை வேளாண்மை இயக்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பை (International Federation Organic Agriculture Movements) உருவாக்கி, சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தின. இது, அங்கக வேளாண்மைக்கான தேவையை ஏற்படுத்தி, அங்கக வேளாண்மைக்கு மாறுவதை ஊக்கப்படுத்தியது.

இயற்கை வேளாண்மை, அங்கக வேளாண்மைக்கான வேறுபாடு

அங்கக வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்பன, இருவேறு வேளாண் சூழலியல் நடைமுறைகள் ஆகும். இயற்கை வேளாண்மை, அங்கக வேளாண்மை என்னும் பெயர்கள், இந்தியாவில் விவசாயிகளாலும், பிறராலும், சில நேரங்களில் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப் படுகின்றன.

இயற்கை வேளாண்மையில், இயற்கை இடுபொருள்களை வெளியில் இருந்து வாங்குவதை விட, பண்ணை அல்லது பண்ணைக்கு அருகில் தயாரிக்கப்படும் இடுபொருள்களின் பயன்பாடு வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அங்கக வேளாண்மையில், பண்ணைக்கு வெளியில் இருந்து வாங்கப்படும் உயிர் உரங்கள் (Biofertilizers) போன்ற இடுபொருள்களும் பயன்படுத்தப் படுகின்றன.

வாய்ப்புகள்- உசிதங்கள்

உலகின் அங்கக உணவுச் சந்தை விரைவாக வளர்ந்து வருவதுடன், அங்கக விளை பொருள்களுக்கான உலகளாவிய தேவை, தொடர்ந்து கூடி வருகிறது. ஏழு வகையான வேளாண் சுற்றுச்சூழல் மண்டலங்களைக் கொண்டு, பல்வேறு பயிர்கள், இரகங்களைப் பயிரிடுவதற்கு ஏற்றதாகத் தமிழ்நாடு இருக்கிறது.

இதனால், இந்தியா உள்ளிட்ட உலகின் பெரிய அளவிலான அங்ககச் சந்தையின் தேவையை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகள், மானாவாரி விவசாயப் பகுதிகள் ஆகியன, அங்கக முறையில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகளையும் தாக்கத்தையும் அளிக்கின்றன.

அங்கக வேளாண்மையின் தற்போதைய நிலை

உலகளாவிய நிலை: உலகளவில் 1.5 சத வேளாண் நிலங்களில், அதாவது, 72.3 மில்லியன் எக்டரில் அங்கக வேளாண்மை நடந்து வருகிறது. மொத்த விளைநிலத்தில் அதிகப் பரப்பில் அங்கக சாகுபடியை மேற்கொள்ளும் நாடுகளாக, ஆஸ்திரேலியா (35.7 மில்லியன் எக்டர்), அர்ஜென்டினா (3.7 மில்லியன் எக்டர்), ஸ்பெயின் (2.4 மில்லியன் எக்டர்) ஆகியன உள்ளன.

பல நாடுகளில் அங்கக சாகுபடிப் பரப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் கூடியுள்ளன. இந்தியா 0.36 எக்டர் பரப்பைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து கஜகஸ்தான், 2019 ஐ விட, 0.1 மில்லியன் எக்டரை அதிகமாகப் பதிவு செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், உலகில் சுமார் 3.1 மில்லியன் அங்கக விவசாயிகள் இருந்தனர். இவர்களில் 51 சதம் விவசாயிகள் ஆசியாவில் உள்ளனர். அதைத் தொடர்ந்து, ஆப்பிரிக்காவில் 27% பேர்கள், இலத்தீன் அமெரிக்காவில் 7% பேர்கள் உள்ளனர். அதிக அங்கக விவசாயிகளைக் கொண்ட நாடுகளாக, 13,66,226 பேர்களைக் கொண்ட இந்தியாவும், 2,10,353 பேர்களைக் கொண்ட உகாண்டாவும் உள்ளன.

அங்கக உற்பத்திப் பொருள்களுக்கான மிகப்பெரிய சந்தை அமெரிக்கா ஆகும். இங்கு உலகளவில் 42% பொருள்கள் விற்பனையாகின்றன. ஐரோப்பாவில் 39% பொருள்களும், சீனாவில் 8.0% பொருள்களும் சந்தைப்படுத்தப் படுகின்றன. அதிக அங்ககச் சந்தைக்கான நாடுகளாக டென்மார்க் (12.1%), சுவிட்சர்லாந்து (10.4%), ஆஸ்திரியா (9.3%) உள்ளன.

இந்தியாவின் நிலை

அங்ககச் சான்றளிப்புச் செயல்முறையின் கீழ், வனப்பகுதி சாகுபடி இல்லாமல், 2.66 மில்லியன் எக்டர் பரப்புடன், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தப் பரப்பில், 1.49 மில்லியன் எக்டர் முழுமையாகச் சான்றளிக்கப்பட்ட நிலையிலும், 1.17 மில்லியன் எக்டர் அங்கக சாகுபடிக்கு மாறுதலின் கீழும் உள்ளன.

மாநில அளவில், மத்திய பிரதேசம் அங்ககச் சான்றிதழின் கீழ், அதிகப் பரப்பைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மராட்டியம், இராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

2020-2021 ஆம் ஆண்டில், இந்தியா, 3.48 மில்லியன் மெட்ரிக் டன் அங்ககப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இவற்றில், எண்ணெய் வித்துகள், தானியங்கள், சிறுதானியங்கள், பருத்தி, பயறு வகைகள், வாசனை மற்றும் மூலிகைத் தாவரங்கள் அடங்கும்.

ஏற்றுமதி மதிப்பில், பதப்படுத்திய உணவுப் பொருள்கள் 45.87% என முதலிடத்திலும், 13.25% என, எண்ணெய் வித்துகள் இரண்டாம் இடத்திலும், 7.61% என, தானியங்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தமிழ்நாட்டின் நிலை

31,629 எக்டர் அங்கக சாகுபடிப் பரப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு, தேசியளவில் 14 ஆம் இடத்தில் உள்ளது. இதில், 14,086 எக்டர், அங்ககச் சான்றளிப்புக்குக் கீழும், 17,542 எக்டர், அங்கக சாகுபடி மாறுதலின் கீழும் உள்ளன. இங்கே, தருமபுரி மாவட்டம் அதிகப் பரப்புடன் முதலிடத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

அங்கக விளைபொருள்கள் மற்றும் காடுகளில் இருந்து சேகரிக்கப்படும் பொருள்கள் என, 24,826 மெட்ரிக் அங்கக உற்பத்திப் பொருள்களுடன், தமிழ்நாடு 11 ஆம் இடத்தில் உள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில், 4,223 மெட்ரிக் டன் அங்ககப் பொருள்களை ஏற்றுமதி செய்து, 108 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

அங்கக வேளாண்மையின் நன்மைகள்

+ மண்ணின் கட்டமைப்பையும், அதன் நயத்தையும் மேம்படுத்துவதன் மூலம், மண்வளத்தை உயர்த்திப் பாதுகாக்கிறது.

+ பண்ணையில் உள்ள வளங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். பண்ணைக்கு வெளியே உள்ள வளங்களைப் பயன்படுத்துதல் தவிர்க்கப்படும் அல்லது குறைக்கப்படும்.

+ இயற்கைச் சூழலியல் அமைப்புடன் மனிதன் ஒருமித்து வாழ உதவுகிறது.

+ பயிர் உற்பத்திக்கும், கால்நடை வளர்ப்புக்கும் இடையே இணக்கமான சமநிலையை உருவாக்குகிறது.

+ இது, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற சாகுபடி முறையாகும்.

+ விவசாயத்தில் தற்சார்பையும், நிலைத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.

+ நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவு கிடைக்கச் செய்கிறது.

வேளாண்மையில் உள்ள சவால்கள்

+ இரசாயனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி சாகுபடி செய்வதால் மண்வளம் குறைகிறது.

+ இந்த இரசாயனங்கள் காரணமாக, நிலம், நீர், காற்றுப் போன்றவற்றில், சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது.

+ புதிய பூச்சிகள், நோய்களின் தோற்றம், பயிர் இழப்புக்கு வழிவகுக்கிறது.

+ சாகுபடிச் செலவு கூடுவதால், வருமானம் குறைந்து, இறுதியில் விவசாயிகள் கடனில் தள்ளப்படுகின்றனர்.

+ பூச்சிக்கொல்லி எச்சங்களின் அளவு கூடுவதால், விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் குறைகின்றன.

அங்கக வேளாண்மைக் கொள்கைக்கான தேவை

உலகளவில் காணப்படும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு முக்கியக் காரணம், வேளாண் இரசாயனங்களின் எச்சங்கள் என அறியப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகளின் எச்சம், உணவுச் சங்கிலியில் நுழைந்து, மக்களுக்கும் விலங்குகளுக்கும் பல்வேறு உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. வேதிப்பொருள்கள் இல்லாத, நல்ல உணவை வழங்குவது புது யுகத்தின் தேவையாகும்.

உலகச் சுகாதார நிறுவனம், ஒற்றை நலம் (One Health) என்னும் கருத்தை அறிவித்து ஊக்கப்படுத்தி வருவதால், மண் நலத்தைக் காப்பதில் அங்கக வேளாண்மை அவசியமாகிறது. உலகளாவிய தேவை, விரிந்து வரும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்ப, அங்கக விளை பொருள்களை உற்பத்தி செய்து வழங்கத் தேவையான பெருந்திறனைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான உணவை வழங்கும் முறைக்கான தேவை, அங்கக வேளாண் கொள்கையை உருவாக்குவதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அங்கக வேளாண் கொள்கையானது, தமிழ்நாட்டில் இரசாயனமற்ற அங்கக வேளாண்மையை உறுதி செய்யவும், தரத்தை உயர்த்தவும், மக்களுக்குப் பாதுகாப்பான உணவை வழங்கவும் உதவும்.

நோக்கங்கள்

அங்கக வேளாண் கொள்கையானது, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகிய முக்கியப் பிரிவுகளின் கீழ், பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.

+ மண்வளம், வேளான் சூழலியல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலைத்திருக்கச் செய்தல்.

+ பாதுகாப்பான, நலமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல்,

+ அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், அங்கக வேளாண் நடைமுறைகளை விரிவாக்கம் செய்தல்.

+ அங்ககச் சான்றளிப்பு முறைகள், நச்சுத்தன்மைப் பகுப்பாய்வு நெறிமுறைகளை (Pesticide Residue analysis) வலுப்படுத்துதல்.

+ பண்ணையில் அல்லது பண்ணைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் தொழுவுரம், மண்புழு உரம் போன்ற இடுபொருள்களை ஊக்கப்படுத்துதல்.

+ சந்தை ஆலோசனைகள், சான்றிதழ் ஆலோசனைகளை வழங்குதல்.

+ ஏற்றுமதியை ஊக்கப்படுத்துதல், விவசாயிகளின் வருவாயைப் பெருக்குதல்.

+ அங்கக வேளாண்மையை, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சேர்த்தல்.

கொள்கை உத்திகள்

+ அங்கக உத்திகள் மூலமும், வளங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், வேளாண் நிலைத்தன்மையை உறுதி செய்தல்.

+ அங்கக வேளாண்மையால், கலப்புப் பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகியன ஊக்கப்படுத்தப்படும். ஒருங்கிணைந்த அங்கக வேளாண்மை முறையைப் பரவலாக்கி, பருவம் சார்ந்த மாற்றுப்பயிர் சாகுபடி முறை பின்பற்றப்படும்.

+ மண்வளம், உற்பத்தி ஆகியவற்றில் நிலைத்தன்மையைப் பெறுவதற்கு, கலப்பு, பல்லடுக்கு, ஊடுபயிர், பயறுவகைப் பயிர்களைக் கொண்டு, பயிர்ச் சுழற்சியை மேற்கொள்தல் ஆகிய சாகுபடி முறைகள் வலியுறுத்தப்படும்.

+ பசுந்தாள் உரப்பயிர்கள், நிலப்போர்வைப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படும். மானாவாரி சாகுபடி, தோட்டக்கலைப் பயிர்கள், நிரந்தர வேளாண்மை, வேளான் காடுகள், பண்ணைக் காடுகள், பால் பண்ணை, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற, அங்கக அடிப்படையிலான அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்து, பண்ணைக்குள் வளங்களை மறுசுழற்சி செய்வது ஊக்கப்படுத்தப்படும்.

+ சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள் போன்ற, சத்துமிக்க பயிர்களை சாகுபடி செய்தல் ஊக்குவிக்கப்படும்.

+ இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை வாங்கும் செலவைக் குறைக்க, பண்ணையில் உள்ள பொருள்களைக் கொண்டு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம் போன்றவற்றை, சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம், பண்ணை அளவில் தயாரிப்பது ஊக்கப்படுத்தப்படும்.

+ பாரம்பரிய விதைகள், அங்கக உத்திகள் ஆகியவற்றின் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உதவி செய்யும் அங்கக விவசாயிகளை ஊக்கப்படுத்த, ஊக்கத்தொகை வழங்கப்படும். அங்கக விவசாயிகளுக்கு, உயிர் உரங்கள், உயிரி இடுபொருள்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படும்.

+ அங்கக வேளாண்மையை ஆதரிக்கும் வகையில், பயிர்க்கடன் வழங்க ஊக்குவிக்கப்படும்.

+ எதிர்பாரா நிகழ்வுகள், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிரிழப்பு, சேதங்களுக்குப் பயிர்க் காப்பீடு மூலம் உதவி வழங்கப்படும்.

+ உயிர் உரங்கள் (Biofertilizizers) உயிரிப் பூச்சிக்கொல்லிகள் (Biofesticides) உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் (Bio control Agents) ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்படும்.

+ திறன் வாய்ந்த மேலாண்மை முறைகள் மூலம், மண்வளம், நீராதாரங்களைப் பாதுகாக்க ஊக்கம் தரப்படும்.

+ சூரிய ஆற்றல், சாண எரிவாயு போன்ற, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை, அங்ககப் பண்ணைகளில் பயன்படுத்த ஊக்கம் தரப்படும்.

+ அனைத்து முக்கியப் பயிர்களின் பாரம்பரிய இரகங்களைப் பாதுகாப்பதன் மூலம், மாநிலத்தின் பல்லுயிர்ப் பெருக்கம் (Biodiversity) பாதுகாக்கப்படும். பாரம்பரிய மாடுகள், ஆடுகள், கோழியினங்கள் பாதுகாக்கப்படும்.

+ பண்ணைக்கு வெளியே தயாரிக்கப்படும் இடுபொருள்களின் தரத்தை ஆய்வு செய்யும் முறைகள் வலுப்படுத்தப்படும்.

அங்ககச் சான்றளிப்பை வலுப்படுத்துதல்

+ பங்களிப்பு உறுதித் திட்டம் (PGS), தேசிய அங்கக உற்பத்தித் திட்டம் (NPOP) ஆகியவற்றின் கீழ், சான்றிதழைப் பெறுவதற்கான வழிகாட்டுதலை, அங்ககச் சான்றளிப்பு அமைப்பு, விவசாயிகளுக்கு வழங்கும். உள்நாட்டுத் தேவையைச் சரி செய்ய, பங்களிப்பு உறுதித் திட்டம் ஊக்கப்படுத்தப்படும்.

+ சான்றிதழ் நடைமுறையை எளிதாக்க, ஒற்றைச் சாளர முறை கொண்டு வரப்படும். விவசாயிகளின் பதிவு, சான்றளிப்பு, விரிவான தரவுத் தளத்தைப் பராமரித்தல் ஆகியவற்றை, இணையதளம் மூலம் மேற்கொள்வது ஊக்கப்படுத்தப்படும்.

+ தரப் பரிசோதனைகள், சான்றளிப்பு ஆகியவற்றுக்கான தர நிலைகள் ஏற்படுத்தப்படும்.

+ அங்ககச் சான்றளிப்புப் பணியை வேகப்படுத்த, போதிய தொழில் நுட்பப் பணியாளர்களைக் கொண்டு, மாவட்ட அளவில் சான்றளிப்பு அமைப்பு பலப்படுத்தப்படும்.

+ சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கிகார வாரியத்தின் (NABL) தர நிலைகள் அங்கிகாரத்தின்படி, மாநிலத்தில் அங்கக உற்பத்திப் பொருள்களின் தரத்தைச் சோதிப்பதற்கு, எஞ்சிய பூச்சிக்கொல்லிப் பகுப்பு ஆய்வகங்களை (Pesticide Residue Analysis Laboratories) நிறுவுதல் ஊக்குவிக்கப்படும்.

+ கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பசுமைக்குடில் சாகுபடி ஆகியவற்றின் உற்பத்திப் பொருள்களுக்கும், தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையின் (TNOCD) சான்றளிப்பு வழங்கப்படும்.

குழு அணுகுமுறைக்கு முன்னுரிமை

+ விழிப்புணர்வுப் பயிற்சி, வழிகாட்டுதல் ஆகியவற்றில், சுய உதவிக் குழுக்கள் (SHGs), உழவர் ஆர்வலர் குழுக்கள் (FIGs), உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs), உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPCs), விவசாயிகள் கூட்டமைப்புகள், இணைப்பு விவசாயிகள் அடங்கிய, குழு அணுகுமுறை ஊக்குவிக்கப்படும்.

+ மாநிலத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள மானாவாரி விவசாயக் குழுக்களை, அங்கக வேளாண்மைக் குழுக்களாக மேம்படுத்த, கவனம் செலுத்தப்படும்.

+ ஆர்வமுள்ள உழவர் ஆர்வலர் குழுக்கள் (FIGs), உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் (FPG) கண்டறியப்பட்டு, கிராம அளவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த, அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்.

+ பயிர்களைத் திட்டமிடல், பண்ணை அளவிலான இடுபொருள்கள் உற்பத்தி, அங்கக விளைபொருள்களைச் சேகரித்தல், தரம் பிரித்தல், பதப்படுத்துதல், சிப்பமிடல், போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் ஆகிய பொறுப்புகள், குழுக்களிடம் ஒப்படைக்கப்படும்.

+ அங்கக உழவர்களுக்கு உரிய விலை, அதிக வருவாய் ஆகியன கிடைப்பதற்காக, குழுக்களுக்குள் கூட்டுச் சந்தைப்படுத்தலும் ஊக்குவிக்கப்படும்.

+ குழுக்களுக்குள் தயாரிக்கப்பட்ட பண்ணை இடுபொருள்கள், விதைகள், நடவுப் பொருள்கள், உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன், குழுக்களுக்குள் அங்கக இடுபொருள்களைப் பகிர்ந்து கொள்வது ஊக்குவிக்கப்படும்.

+ புவியியல் தகவல் அமைப்பு (GIS) மற்றும் தொலையுணர்வு (Remote Sensing) அடிப்படையிலான கிராமப் புவிசார் குறியீடு போன்ற, நவீனத் தொழில் நுட்பங்கள் வாயிலாக, குழு அடிப்படையிலான வேளாண் மேலாண்மை அமைப்பு பலப்படுத்தப்படும்.

+ தனியார் நிறுவனங்கள், தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை (TANSEDA), தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (TANHODA) மூலம், பாரம்பரிய அங்கக விதைகள், இடுபொருள்கள், நடவுப் பொருள்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தல் ஊக்குவிக்கப்படும்.

+ ஏற்றுமதி நோக்கத்தில் குழுக்கள் மூலம் விநியோகத் தொடர்கள் ஏற்படுத்தப்படும். வாய்ப்புள்ள மாவட்டங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் உட்பட, பயிர் அடிப்படையிலான குழுக்கள் உருவாக்கப்படும்.

+ அங்கக வேளாண் குழுக்களை ஒருங்கிணைத்து, அங்கக வேளாண் மண்டலங்கள் அமைக்கப்படும். கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களுக்கு, அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்படும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

+ தானிய வங்கி, உயிர் உரம், பண்ணைக்கழிவு உரக்கூடங்கள், பயிர்க் கழிவுகளைத் துகள்களாக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம், தீவன வங்கி போன்ற பொதுவான வளங்கள் மற்றும் உடைமைகளை, வட்டார அளவில் உருவாக்கி மேம்படுத்த, திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும்.

அங்கக வேளாண்மையைப் பற்றிய ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி

+ அனைத்து முக்கியப் பயிர்களுக்கான அங்கக வேளாண் உத்திகளை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள், வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களால் மேற்கொள்ளப்படும். இத்துடன், நீடித்த, நிலையான, கூடுதல் வருவாயை ஈட்டும் வகையிலான, முக்கிய அங்கக வேளாண்மைத் தொகுதிகள் உருவாக்கப்படும்.

+ பல்வேறு பாரம்பரிய அங்கக மேலாண்மை நடைமுறைகளை, அறிவியல் நோக்கில் சரிபார்த்தல், அங்கக வேளாண்மையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய உள்நாட்டுத் தொழில் நுட்பத் தகவல்களை (Indigenous Traditional Knowledge) ஆவணப்படுத்துதல் ஆகிய பணிகள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் மேற்கொள்ளப்படும்.

+ தாவர இனப்பெருக்கத் தொழில் நுட்பங்கள் மூலம், அங்கக சாகுபடிக்கு ஏற்ற, புதிய இரகங்கள் குறித்து, வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

+ வேளாண்மை அறிவியல் நிலையங்கள் (KVK), ஏனைய முகமைகள், இணைப்பு விவசாயிகள் மூலமும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA) கீழும், ஒருங்கிணைந்த அங்கக வேளாண்மைக்கான வயல்வெளிப் பள்ளிகள் நடத்தப்படும்.

+ அங்கக வேளாண்மையை ஆதரிப்பதற்காக, உயிர் உரங்கள், மண்புழு உரம், உயிரி பூச்சிக்கொல்லிகள், உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் ஆகியவற்றின் பண்ணை அளவிலான உற்பத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட அங்ககப் பொருள்களின் உற்பத்தி, ஒருங்கிணைந்த வேளாண்மை ஆகியன குறித்த சான்றிதழ் படிப்பு, பயிற்சி போன்ற மனிதவள மேம்பாட்டுப் பயிற்சிகள், உழவர்களுக்கு அளிக்கப்படும்.

+ அங்ககப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு, புகழ் பெற்ற முன்னோடி நிறுவனங்கள் மூலம், ஆற்றல் மேம்பாடு, பட்டறிவுப் பயணம், திறன் வளர்ப்புப் பயிற்சி ஆகியன வழங்கப்படும்.

+ குழந்தைகளிடம் அங்கக வேளாண்மை, பல்லுயிர்ப் பாதுகாப்புக் குறித்த ஆர்வத்தை உருவாக்கவும், அவர்களின் வீடுகளிலும் அதை அவர்கள் தொடரவும், தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில், அங்ககக் காய்கறித் தோட்டங்கள், பழத்தோட்டங்களை அமைப்பதற்கான முறை உருவாக்கப்படும். இதற்கென, அரசு நிறுவனங்கள் மூலம், தேவையான உதவித் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தப்படும்.

+ வாய்ப்புள்ள வேளாண்மைக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் வளாகங்களில், விதை வங்கிகள், விதைப் பண்ணைகளைப் பராமரிப்பதன் மூலம், தரமான விதைகளை உற்பத்தி செய்து, அருகிலுள்ள பகுதிகளில் பயன்படுத்த வகை செய்யப்படும்.

அங்கக வேளாண்மையை மேம்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துதல்

+ வேளாண்மை, தோட்டக்கலை, அங்ககச் சான்றளிப்பு ஆகிய துறைகளில் உள்ள அங்ககப் பிரிவுகளைத் திறம்பட இணைத்து அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

+ அங்கக வேளாண்மையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ற பகுதிகளைக் கண்டறிய, அனைத்து மாவட்டங்களிலும், அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். உற்பத்திப் பொருள் அடிப்படையிலான குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

+ அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக, பெண்கள் மற்றும் பழங்குடி மக்களைச் சென்றடையும் வகையில், அங்கக வேளாண்மை குறித்த, துண்டுப் பிரசுரங்கள், ஆய்வு முடிவுகள், சிறந்த நடைமுறைகள், வெற்றிக் கதைகள், காணொலிப் படங்கள், சுவரொட்டிகள், ஏனைய விழிப்புணர்வுப் பொருள்கள் ஆகியன தயாரிக்கப்படும்.

+ அங்கக வேளாண்மையின் நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க, வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் ஆகியன பயன்படுத்தப்படும்.

+ ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட கால இடைவெளியில், அங்கக உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும்.

+ அங்கக வேளாண்மையை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், பொது தனியார் கூட்டாண்மை முறை (Public Private Partnership) செயல்படுத்தப்படும்.

+ நகர்ப்புறங்களில் முற்றிலும் அங்கக வழியிலான வேளாண்மை, மாடித்தோட்டம், சத்துத் தோட்டம் ஆகியவற்றுக்கு ஊக்கம் தந்து, பொது மக்களிடம் எடுத்துச் செல்லப்படும்.

+ அங்கக வேளாண்மை ஆர்வலர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள், அங்கக வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

+ அனைத்துப் பயிர்களின் பாரம்பரிய நாட்டு விதைகளைப் பாதுகாக்க, மாநில அளவில் மரபணு வங்கி நிறுவப்படும்.

+ அங்கக வேளாண் நடைமுறைகள், சான்றளிப்பு, சந்தைப்படுத்தல் ஆகியன குறித்து, அங்கக விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்கு என, அங்கக வேளாண்மை உதவி மையம் உருவாக்கப்படும்.

+ முற்போக்கான, முன்னணி விவசாயிகளின் அனுபவங்களை ஆவணப்படுத்தி, பொது ஊடகங்கள் மூலம் பரப்பப்படும்.

+ வட்டார அளவில், மாதிரி அங்ககப் பண்ணைகளை உருவாக்கி, அரசு மற்றும் தனியார் பண்ணைகளில் பராமரிக்கப்படும்.

+ அங்கக இடுபொருள் உற்பத்தியாளர்கள், உணவுப் பதனாளர்கள், அங்ககப் பொருள் வணிகர்கள் ஆகியோருக்கு, வங்கிகள், நபார்டு போன்ற நிறுவனங்கள் மூலம் நிதியுதவி அளிக்கப்படும்.

+ சிறந்த அங்கக விவசாயிகளின் வெற்றிக் கதைகள், பத்திரிகை மற்றும் பருவ இதழ்களில் வெளியிடப்படும்.

+ வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமையை, பிற மாநில -மத்திய திட்டங்களுடன் இணைத்து, ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

+ அங்ககச் சான்றளிப்புத் துறையின் இணையதளமும், தொடர்புடைய பிற இணைய தளங்களும் வலுவூட்டப்படும்.

+ அங்கக விளைபொருள்களைத் தீவிரமாகக் கண்காணித்தல் மற்றும் முறைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதிக வாய்ப்புள்ள பயிர்கள், அதிக மாவட்டங்களில் கவனம் செலுத்துதல்

+ குறிப்பிட்ட மாவட்டத்தில் அதிகளவில் விளையும் குறிப்பிட்ட வேளாண் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் மீது, தொகுப்பு அணுகுமுறையில் கவனம் செலுத்தப்படும்.

+ குறிப்பிட்ட பயிர்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகளை அடையாளம் கண்டு, அவர்கள் அங்கக வேளாண்மைக்கு ஊக்கப்படுத்தப் படுவர்.

+ குறிப்பிட்ட அங்கக வேளாண் பொருளின் உயர்ந்த விளைச்சலில், சீரான தரத்தை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

+ இயல்பாகவே அங்கக சாகுபடி நிகழும் பகுதிகள், மானாவாரிப் பகுதிகள் மீது கவனம் செலுத்த ஏதுவாக, முதற் கட்டமாக, வாய்ப்புகள், நிலப்பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சில மாவட்டங்கள் தேர்வு செய்யப்படும். மீதமுள்ள மாவட்டங்கள் படிப்படியாகத் தேர்வு செய்யப்படும்.

சந்தை இணைப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குதல்

+ இணையதளம் மற்றும் நேரடி அமைப்புகள் வாயிலாக, உரிய நேரத்தில் சந்தை நுண்ணறிவை வழங்குவதன் மூலம், விவசாயிகள் அதிகப் பயன்களைப் பெறுவார்கள்.

+ சிறப்பாகவும், நம்பகமாகவும் அங்கக உற்பத்திப் பொருள்களைச் சேகரிப்போரை ஊக்கப்படுத்துவதன் மூலம், சந்தை வாய்ப்புகள், விவசாயிகளின் பண்ணை அளவில் கிடைக்கும்.

+ அங்ககப் பொருள்கள் மீதான ஏற்றுமதிக் கொள்கைகள், நடைமுறைகள் குறித்து, உழவர்கள் மற்றும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

+ மதிப்புக் கூட்டுதல் மையங்கள், பதப்படுத்துதல் மையங்களுடன், அங்ககத் தொகுப்புகளை இணைப்பது ஊக்கப்படுத்தப்படும்.

+ மாநில அளவிலான அங்ககக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.

+ மாநகரங்கள் மற்றும் நகரங்களில், அங்ககப் பொருள்கள் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு வாய்ப்புள்ள திட்டங்களுக்கு, நபார்டு வங்கி போன்ற, பொது நிதியுதவி முகமைகள் மூலம், கடன் பெற வழிவகை செய்யப்படும்.

+ மின் வணிகம், இணையதளம்/ வலை விவரப் பக்கம், தேசிய மின்னணு வேளாண் சந்தை (eNAM), கைப்பேசிச் செயலிகள்- சந்தைத் தளங்கள், இணையவழிச் சந்தை போன்ற விளம்பர, ஊக்க நடவடிக்கை மூலம், அங்ககத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் வாய்ப்புகளும், ஆதரவு அமைப்பும் உருவாக்கப்படும்.

+ நுகர்வோர் தேவைக்கு ஏற்ப, சிறந்த மாதிரிகளைப் பெரியளவில் ஏற்றுச் செயல்படுத்தப்படும். பின்னோக்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்பு உத்திகள், விநியோகத் தொடரில் இணைக்கப்படும்.

+ மாநிலப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில், வாய்ப்புள்ள அங்ககத் திட்டங்களைப் பரப்புவதற்கான உள் வளர் மையங்கள் (Incubation Centres) நிறுவப்படும்.

+ அங்ககப் பொருள்களின் மூலத்தை அறிதல் (Traeability), அவற்றைச் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில், மேம்பட்ட நிலைப்பதிவு (Block Chain), மின்னணுப் பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களை (Artificial Intelligence) உருவாக்கிப் பயன்படுத்தப்படும்.

குழுக்களை அமைத்தல்

உயர்நிலைக் குழு: அங்கக வேளாண்மைக் கொள்கை, அதன் நிலை ஆகியன குறித்துச் சீராய்வு செய்வதற்காக, அரசு தலைமைச் செயலர் தலைமையில், அரசு அலுவலர்கள், பிற நிறுவனங்களின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

வழிகாட்டுதல் குழு: அங்கக வேளாண்மைக் கொள்கையைச் செயல்படுத்துவது மற்றும் திட்டங்களை இறுதி செய்வதைக் கண்காணிக்க, வேளாண்மை- உழவர் நலத்துறையின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தலைமையில், வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்.

மாவட்ட அளவிலான குழு: மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் அலுவலர்களைக் கொண்ட, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்படும்.

நிதிச்சுமை/ பொறுப்பு

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம், கதர் மற்றும் துணிநூல் போன்ற துறைகளுடன் தொடர்புள்ள மத்திய, மாநில அரசுத் திட்டங்களை இணைத்து, ஒருங்கிணைந்த அணுகுமுறையில் இக்கொள்கை செயல்படுத்தப்படும்.

அங்கக வேளாண்மைக் கொள்கைக்கான கால வரம்பு

இக்கொள்கை, இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து செயலுக்கு வரும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இக்கொள்கை சீராய்வு செய்யப்படும்.


வேளாண்மை – உழவர் நலத்துறை, தமிழ்நாடு அரசு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!