மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

மீன் fish waste

மீன் பதன ஆலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருள்களான, தோல், செதில், ஓடு, குடல், மற்ற உடல் பாகங்களில் பல்வேறு சத்துகள் உள்ளன.

மீன், நண்டு மற்றும் இறால் பதன ஆலைகளில் இருந்து முறையே 30-60 சத, 75-85 சத, 40-80 சதக் கழிவுகள் கிடைக்கின்றன.

கடல் மீன்களில் இருந்து 50 சதக் கழிவு கிடைக்கிறது. இந்தக் கழிவுகளை ஆலைகளுக்கு அருகிலேயே கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

இதைத் தடுக்க வேண்டுமெனில், இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் முறைகளைக் கண்டறிய வேண்டும்.

இந்தக் கருத்தை முன் வைத்து மீன் கழிவைக் கொண்டு உரம் தயாரிக்கும் ஆராய்ச்சி, கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்றது. அதில், இக்கழிவின் பல்வேறு இயற்பியல், வேதியியல் பண்புகள் கண்டறியப்பட்டன.

மரத்தூள் மூலம் உரமாக்குதல்

இந்தியாவில் 408 மீன் பதன ஆலைகள் உள்ளன. அவற்றில் 15 ஆலைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.

இவற்றின் மூலம் ஆண்டுக்கு 6,298 டன் கழிவுகள் கிடைக்கின்றன. இவற்றை எளிய முறையில் உரமாக மாற்றலாம்.

முதலில், மீனின் குடல், தலை, செவிள், தோல் போன்ற 120 கிலோ கழிவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, இத்துடன் 640 கிலோ மரத்தூள் மற்றும் 240 கிலோ மாட்டுச் சாணத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

இந்தக் கலவையில், கார்பன் நைட்ரஜன் விகிதம் 30:1 என இருக்க வேண்டும். இதை ஒரு மீட்டர் உயரக் குவியலாகக் குவிக்க வேண்டும்.

இதிலிருந்து கிடைக்கும் வெப்பம், அதிவேக மற்றும் தெர்மோஃபிலிக் முறையில் உரம் தயாரிக்க ஏதுவாக உள்ளது.

இந்தக் கலவையின் ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். இதற்கு மேல் இருந்தால், அதிலுள்ள சத்துகளின் அளவு குறையும்.

இந்தக் குவியலில் கைப்பிடி எடுத்துப் பிழியும் போது, அதிலிருந்து நீர் அதிகமாக வெளியேறினால் ஈரப்பதம் 60 சதத்துக்கு மேல் இருக்கும் என அறியலாம். நீர்க் குறைவாக வந்தால் ஈரப்பதம் 60 சதம் இருக்கும்.

அடுத்து, 250 லிட்டர் நீரில் 30 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் 25 கிலோ பாஸ்பேட்டைக் கலந்து, இந்தக் குவியலில் தெளிக்க வேண்டும்.

பிறகு, இக்குவியலை ஒளி புகாத கறுப்பு பாலிடெட்ரா புளோரோ எத்தலின் விரிப்பால், காற்றுப் புகாமல் இறுக்கமாக மூட வேண்டும்.

இது, சூரிய ஒளியைக் கிரகிக்கவும், நீரிழப்பைத் தடுக்கவும் உதவும்.

முதல் ஐந்து நாட்கள் கழித்துப் பார்த்தால், குவியலின் வெப்பநிலை 50-60 செ.கி வரை இருக்கும்.

பிறகு, இந்த வெப்பநிலை 50 செ.கி.க்குக் குறையும் போது, குவியலை நன்றாகப் பரப்பி விட்டு அவ்வப்போது நீரைத் தெளித்து, இதன் ஈரப்பதத்தை மீண்டும் 60 சதத்துக்கு உயர்த்திக் குவித்து வைக்க வேண்டும்.

இதனால், இந்தக் கழிவு சிதைந்து ஐம்பது நாட்களில் உரமாக மாறும். இதில், கார்பன், நைட்ரஜன் விகிதம் 15 முதல் 20:1 ஆக இருக்கும்.

பயன்கள்

இந்த உரம் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் பயிர் வளர்ப்பில் அதிகமாகப் பயன்படுகிறது.

மீன் வளர்ப்புக் குளங்களில் உள்ள தாவர மிதவைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து மீன் வளர்ப்புக்கு உதவுகிறது.

மீன் கழிவுகளை எரிப்பது மற்றும் வெளியில் கொட்டுவதைத் தவிர்ப்பதால், சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது.

உரமாக மாற்றுவதால், மீன் கழிவுகளை அகற்றும் செலவு, மீன் பதன ஆலைகளுக்குக் குறையும்.

மக்களுக்கு வேலை கிடைக்கிறது. இந்த உரம், உயிரியல் முறையில் மண்ணை மேம்படுத்துகிறது.

மீத்தேன் உற்பத்தி மற்றும் நிலத்தில் கொட்டுவதால் வெளிவரும் நீர்க்கசிவைத் தடுக்கிறது.

நச்சுப் பொருள்கள் நீர் நிலைகளை அடைவதைத் தடுத்து, நிலத்தடி நீரின் தரத்தைக் காக்கிறது.

இயற்கை உரமாகப் பயிருக்குப் பயன்படுவதால், விளைபொருள் வருவாய் உயரும். மட்கும் போது ஏற்படும் வெப்பத்தால், நோய்க் கிருமிகள், களை விதைகள் அழியும்.

மட்கு உரமாக மாற்றும் போது, பல ஆதாரங்களில் இருந்து எண்ணற்ற கழிவுகள் ஒன்றாகக் கலக்கின்றன.

மண் பண்படுகிறது. இரசாயன உரப்பயன் குறைகிறது. காற்றில் கலந்துள்ள தொழிலக அங்ககப் பொருள்கள் 99.6 சதம் வரை குறைகிறது.

குறைகள்

பல்வேறு காரணங்களால் மட்குரத்தின் பயன்பாடு விவசாயத்தில் குறைவாகவே உள்ளது.

எடை மிகுந்து இருப்பதால் போக்குவரத்துச் செலவு கூடுகிறது. சத்து மதிப்பு இரசாயன உரங்களை விடக் குறைவாக உள்ளது. சத்துகளை வெளியிடும் அளவும் குறைகிறது.

ஆகவே, பயிர்களுக்கு வேண்டிய சத்துகளை, குறுகிய காலத்தில் அளிக்க முடியாததால், சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.

நகரக் கழிவுகளில், கடின உலோகங்களும், மட்கு உரத்தில் மாசும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த உரத்தைப் பயிர்களுக்கு இடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மட்கு உரத்தை அதிகமாக, தொடர்ந்து இடும் போது ஏற்படும் உப்பு, சத்து அல்லது கடின உலோகப் படிவானது, நீரின் தரம், பயிர் மற்றும் நிலத்திலுள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி, விலங்கு மற்றும் மனித இனத்தைப் பாதிக்கிறது.


மீன் Dr. S. SHENBAGAVALLI scaled e1710487380347

முனைவர் சா.செண்பகவள்ளி, முனைவர் க.மணிகண்டன், முனைவர் த.பிரபு, வேளாண்மைக் கல்லூரி, கிள்ளிக்குளம், திருநெல்வேலி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!