பயறு வகைகளில் தரப் பாதுகாப்பு!

பயறு பயறு வகைகள்

யறு வகைகளின் தூய்மையும் தரமும், வணிகர்கள் மற்றும் நுகர்வோரை மகிழ்விக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், சட்டப்படி பொருள்கள் தரமாக இருந்தால் தான் நல்ல விலையும், மக்களிடம் நம்பிக்கையும், எளிதில் விற்பதற்கான சூழலும் அமையும்.

மேலும், இயற்பியல், வேதியியல் பண்புகள் மாறாமல், நுண்ணுயிர்த் தாக்கமின்றி இருக்க வேண்டும்.

பொருள்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு என, சில அமைப்புகள் குறிப்பிட்ட வரைமுறை மற்றும் நிபந்தனைகளை வகுத்து உள்ளன.

உலகத்தர நிர்ணய அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, கோடக்ஸ் ஆகியன முக்கிய அமைப்புகள் ஆகும்.

உற்பத்தி மற்றும் விற்பனையைக் கருத்தில் கொண்டு, பருப்புகளில் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் அனைத்து உணவு சார்ந்த உற்பத்தி, சிறு தொழில்கள் மற்றும் சந்தை நிறுவனங்களுக்கு, இந்திய உணவுத் தரப் பாதுகாப்பு அமைப்பு, ஒரு சில நிபந்தனை மற்றும் வரைமுறைகளை வகுத்து உள்ளது.

இந்த அமைப்பு, சில காரணிகளைக் கொண்டு, பருப்பு வகையின் தரத்தை வரையறை செய்கிறது. அதாவது, பயறானது, நன்கு முதிர்ந்து, காய்ந்து இருக்க வேண்டும்.

சுத்தமாகவும், நிறமும் வடிவமும் ஒரே அளவிலும் இருக்க வேண்டும்.

சாப்பிடும் வகையிலும், பிற பொருள்களாக மாற்றும் வகையிலும் இருக்க வேண்டும்.

பூச்சி மற்றும் விலங்குகள் கழிவு, நுண்ணுயிர்கள், கண்ணாடி, இரும்பு மற்றும் நிறப்பூச்சு ஆகியன இருக்கக் கூடாது.

உடலுக்குத் தீமை தரும் வேதிப்பொருள் எதுவும் கலந்திருக்கக் கூடாது. பருப்பு, அதற்குரிய மணம், நிறம் மற்றும் குணத்துடன் இருக்க வேண்டும்.

உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அஃப்லோ டாக்ஸின், 10 மி.கி./கி.கி.க்குக் குறைவாக இருக்க வேண்டும். பயறின் ஈரப்பதம் 12-14 சதம் இருக்க வேண்டும்.

பருப்பின் தரம்

புதிய உத்திகளைப் புகுத்தினாலும், ஒரு சில பொருள்கள் பருப்புகளில் கலந்து வருகின்றன.

இந்தப் பொருள்கள் குறிப்பிட்ட அளவில் இருந்தால், பருப்பின் தரம் உண்ணத் தக்கதாகக் கொள்ளப்படும்.

அதாவது, முதிராத, சுருங்கிய பருப்புகள் 3 சதம், உடைந்த பருப்புகள் 2 சதம், நோயினால் தாக்குண்ட பருப்புகள் 3 சதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

பயறு வகைகளில் கலப்படம் செய்வது நடந்து வருகிறது. இதனால், மனித உடல் நலம் பாதிக்கப்படும்.

கலப்படத்தை எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக, அக்மார்க், ஒருசில தர வரைமுறைகளை வகுத்து உள்ளது.

மேலும், பருப்பு சார்ந்த உணவுப் பொருள்களை அவற்றுக்கு உரிய கலன்களில் அடைத்து விற்கும் போது பெயரிடுவது முக்கியம்.

ஒரு பொருளின் பெயரிடலில், பொருள்களைப் பற்றிய தகவல்கள், அளவுகள், அங்கிகரிக்கப்பட்ட மற்றும் சான்றிதழ் அமைப்பின் சின்னம், விலை மற்றும் காலக்கெடு,

தயாரிக்கப்பட்ட தேதி, இடம் மற்றும் தகவல் முகவரி, பொருள்களைச் சேமிக்கும் முறை, சேர்க்கப்பட்ட பொருள்களின் அளவுகள்,

அடங்கியுள்ள சத்துகள், இறக்குமதி செய்த பொருள்களைச் சேர்த்திருந்தால் அவற்றின் முகவரி ஆகிய தகவல்கள் இருக்க வேண்டும்.

மேலும், இந்திய அரசின் ஒரு சில அமைப்புகள், உணவு மற்றும் பருப்புப் பொருள்களில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையில், ஒரு சில சட்டங்களை உருவாக்கி உள்ளன.

உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டம் (1954), நிறை மற்றும் அளவு நிர்ணயச் சட்டம் (1976), நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (1984) முதலியன, கலப்படக் கார்களைக் கடும் தண்டனைக்கு உள்ளாக்கு கின்றன.

நன்மைகள்

பயறு வகைகளில் புரதம் மிகுந்து உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.

மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பயறு வகைகள், மெதுவாகச் செரிப்பதால், நீரிழிவு மற்றும் உடல் கனத்தவர்களுக்கு ஏற்ற உணவாகும்.

இவற்றிலுள்ள நார்ச்சத்து, உடலிலுள்ள நச்சு மற்றும் கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும்.

இரும்புச்சத்து உடலுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல, இரத்தச் சோகையைத் தடுக்க உதவும்.

முளைக் கட்டிய பயறு வகைகளில் பி, சி வைட்டமின்கள் நிறைந்து உள்ளன. இந்தப் பயறு வகைகள் குழந்தை மற்றும் தாய்மார்களின் இணை உணவில் சேர்க்கப்படும்.

மருத்துவக் குணங்கள்

மசூர் பருப்பு: கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். இதயத்தை வலுப்படுத்தும். இரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்தும்.

புரதம் மிகுந்தும், கொழுப்பும் உப்பும் குறைந்தும் இருக்கும். எளிதில் செரிக்கும். எடையைக் குறைக்க உதவும். புற்றுநோயை எதிர்க்கும். மூளை சிறப்பாக இயங்க உதவும்.

கொண்டைக்கடலை: கொழுப்பை, சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். சல்பைட் நச்சை நீக்கும். நோயெதிர்ப்பு சக்தியை, முடி வளர்ச்சியைக் கூட்டும்.

செரியாமை மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்தும். குளுக்கோஸ் பயன்பாடு மேம்பட உதவும்.

பாசிப்பயறு: இதய நோய்கள் வராமல் காக்கும். சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி, கே மற்றும் நார்ச்சத்து, போலேட் நிறைந்தது.

நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகப்படுத்தும். புற்றுநோயை எதிர்க்கும். குறைவான கொழுப்பு, எடைக் குறைப்புக்கு உதவும்.

கொள்ளு: மலச்சிக்கலைத் தடுக்கும். எலும்பை வலுப்படுத்தும். கால்சியம், பொட்டாசியம், புரதம் நிறைந்தது. சோடியம் மற்றும் கொழுப்புக் குறைவாக இருக்கும்.

குறைந்த நேரத்தில் செரிக்கும். நீரிழிவு மற்றும் எடையைக் குறைக்க உதவும். ஆஸ்துமா, குடற்புண் மற்றும் சளியைக் கட்டுப்படுத்தும். இதய நோயைத் தடுக்கும்.

சோயாபீன்ஸ்: பாலுக்கு ஈடான புரதம் உள்ளது. கால்சியம் நிறைந்தது. புற்றுநோயைத் தடுக்கும். கெட்ட கொழுப்புக் குறைவாக, நல்ல கொழுப்பு அதிகமாகக் கொண்டது. இரும்புச்சத்து நிறைந்தது.

துவரம் பருப்பு: இரும்புச்சத்து, நார்சத்து, புரதச்சத்து நிறைந்தது. இரத்தத்தில் சர்க்கரை திடீரென மிகுவதைத் தடுக்கும். செல்களைப் பாதுகாக்கும். புற்று மற்றும் இதய நோயைக் கட்டுப்படுத்தும்.


பயறு DR.L.SENTHAMARAI SELVI

முனைவர் லெ.செந்தாமரைச் செல்வி, முனைவர் க.ஹேமலதா, உணவியல் மற்றும் சத்தியல் துறை, சமுதாய அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி வளாகம், மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!