சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!

சிவ shivakundala tree

சிவகுண்டல மரத்தின் காய்கள் சிவனின் கழுத்தில் தொங்கும் குண்டலம் போல இருப்பதால் இப்பெயரைப் பெற்றுள்ளது. இந்தக் காய்கள் சுரைக்காயைப் போல நீண்டிருப்பதால் இம்மரத்தை, மரச்சுரைக்காய் மரம் என்றும் அழைப்பர். இம்மரம் பிக்னோனியேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது, ஆப்பிரிக்க நாட்டைத் தாயகமாகக் கொண்டது.

இம்மரம், வெப்ப மண்டலப் பகுதிகளில், குறிப்பாக, ஆற்றோரங்களில் செழிப்பாக வளரும். இம்மரம் மண்ணரிப்பைத் தடுக்க கூடியதாகவும் உள்ளதால், கடலோரப் பகுதிகளில் நடுவதற்கு உகந்த மரமாக விளங்குகிறது. இம்மரம், 60-70 உயரம் வரை வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். பூக்கள் பெரியளவில் பழுப்பு நிறத்தில், மரத்தின் கிளைகளில் இருந்து வரும் கொடி போன்ற அமைப்பில் கொத்தாகக் காணப்படும்.

ஒருவித மணத்தைக் கொண்டிருக்கும் இந்தப் பூக்கள், இரவு நேரத்தில் மலரும். இந்த வாசத்தால் கவரப்படும் வௌவால்கள், பறவைகள், பூச்சிகள் இந்தப் பூக்களில் உள்ள மகரந்தத்தூளை மற்ற பூச்சிகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் இனவிருத்திக்கு உதவும். 5-6 வயதுள்ள மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். மார்ச் முதல் மே மதம் வரை பூக்கள் பூக்கும். இந்தப் பூக்களில் இருந்து உருவாகும் காய்கள், பிஞ்சாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், முற்றிய நிலையில் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

இந்தக் காய்கள் அதிகபட்சம் மூன்றடி நீளத்தில், சுரக்காயைப் போன்ற அமைப்பில் மரத்தில் தொங்கும். இவை, நல்ல சதைப்பற்றும் எடையும் கொண்டிருக்கும். சதைப் பகுதியில் விதைகள் காணப்படும்.

சிவகுண்டல மரம் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. இம்மரத்தின் பட்டை, வேர், இலை, காய், விதை என, அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. இம்மரத்தின் பிறப்பிடம் நம் நாடல்ல என்பதால், இதன் பயன்கள் நமக்கு அதிகமாகத் தெரியவில்லை. ஆனால், ஆப்பிரிக்க மக்கள் இம்மரத்தைப் புனித மரமாக, செழிப்பைத் தரும் மரமாகக் கருதி, போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.

இம்மரத்தின் இலைகளில் இருந்து உருவாக்கப்படும் டானிக், இரத்தச்சோகை, கைகால் குடைச்சல், மூட்டுவலி முதலியவற்றுக்கு அருமருந்தாகும். இந்த இலைகள், காட்டில் வாழும் யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற வன விலங்குகளுக்கு உணவாகும். இந்த இலை, காய், பட்டை, வேர் மூலம் தயாராகும் டானிக், செரிமானச் சிக்கலைச் சரி செய்யவும் மற்றும் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இம்மரப் பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வாயைக் கொப்பளித்தால் பல்வலி சரியாகும்.

முற்றாத காய்களில் விஷத்தன்மை இருக்கும். எனவே, இதன் பழங்களைத் தான் பதப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். பழுத்த பழங்களை உண்ணும் போது சில சமயம் நாக்கில் கொப்புளங்கள் ஏற்படும். இது, இரத்தப்போக்கு, சீதப்போக்குப் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவும்.

பால்வினை நோய்கள், முக்கியமாக, சிபிலிஸ் என்னும் நோய்க்கு அருமையான மருந்தாகும். இதற்குக் காரணம், இதில், பாக்டீரியா, பூசணம், வைரஸ் போன்ற கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் பொருள்கள் நிறைந்து இருப்பதே ஆகும்.

மேலும், இந்தப் பழங்கள் குடலைச் சுத்திகரிக்கும் பேதி மருந்தாகப் பயன்படுகிறது. தேவையான அளவில் சத்துகள், புரதங்கள், கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள விதைகள், வறட்சிக் காலத்தில் உணவாகப் பயன்படுகிறது. பழுத்துக் கீழே விழும் பழங்கள் விரைவில் கெட்டு விடுவதால், அவை கீழே விழுவதற்கு முன், மரத்தில் இருந்து பறித்துப் பயன்படுத்த வேண்டும்.

இந்தப் பழங்களில் இருக்கும் மருத்துவ குணமிக்க வேதிப் பொருள்கள் மூலம், முகக் களிம்புகள் மற்றும் திரவங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க மக்கள் இந்தப் பழத்தை, தசை மற்றும் தளர்ந்த மார்பகங்களை இறுக்கமாக்க மேற்பூச்சாகப் பூசுவர். சருமப் பொலிவுக்காக முகத்திலும் பூசுவர்.

மேலும், இந்தப் பழங்களை வேக வைத்துச் சிவப்பு நிறச் சாயமும், வேர்களில் இருந்து மஞ்சள் நிறச் சாயமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மரத்தின் காற்றைச் சுவாசித்தால், குழந்தைப் பேறின்மைக் குறைபாடு சரியாகும் எனக் கூறப்படுகிறது. இம்மரம், படகுகள் செய்யவும், பலகைகள், வேலித் தூண்கள் செய்யவும் பயன்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இருந்து பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டு, வன விலங்குகளுக்கு உணவாக அமைந்து, மரப்பொருள்களைத் தயாரிக்கவும் பயன்படும் இம்மரத்தை வளர்க்க, முற்றிய பழங்களில் உள்ள விதைகளை எடுத்து, மிதமான சாணைத்தாளில் தேய்த்தும், வெந்நீரில் வைத்தும் எடுத்து, நாற்று வளர்ப்புப் பை அல்லது தொட்டியில் ஒரு அங்குல ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

பிறகு, இந்தப் பை அல்லது தொட்டியை, மிதமான வெய்யில் படும் இடத்தில் வைத்துப் பராமரித்து, செடி 2-3 அடி உயரம் வளர்ந்ததும் வசதியான இடத்தில் நடலாம்.


Pachai boomi Shanmuganathan

முனைவர் மு.சண்முகநாதன், முனைவர் சே.நக்கீரன், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை – 622 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!