பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

பயிர் Green gram 6 e1611890891753

விவசாயத்தில் மகசூல் இழப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு பூச்சிகள், புழுக்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாக உள்ளது.

இவ்வகையில், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

பச்சைக் காய்த் துளைப்பான்

அறிகுறிகள்: தொடக்க நிலையில் இலைகள் உதிரும். புழுக்கள், காய்க்குள் தலையை விட்டு, உடலை வெளியே வைத்திருக்கும். காயைச் சுற்றி வட்ட வட்டமாகத் துளைகள் இருக்கும்.

பூச்சியின் விவரம்: முட்டைகள் வட்டமாக, பால் வெள்ளை நிறத்தில், தனித் தனியாக இருக்கும். புழுக்கள் பச்சை நிறம் முதல் பழுப்பு நிறம் என, மாறி மாறித் தோன்றும்.

பச்சை கலந்த அடர் பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை வரிகளுடன், அடர் மற்றும் மங்கிய வளையங்களுடன் இருக்கும்.

கூட்டுப் புழுக்கள், பழுப்பு நிறத்தில், மண், இலை, காய், பயிர்க் குப்பைகளில் காணப்படும். தாய்ப்பூச்சி மங்கிய பழுப்புக் கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும்.

முன் இறக்கைகள் சாம்பல் நிறம், மங்கிய பழுப்பு நிறம் என, V வடிவக் குறியுடன் இருக்கும். பின் இறக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்தில் அகலமான கறுப்பு வெளி விளிம்புடன் இருக்கும்.

கட்டுப்படுத்தல்: எக்டருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகளை வைக்க வேண்டும்.

வளர்ந்த புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை, எக்டருக்கு 1.5×10 12 கிருமிகள் மற்றும் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி ஒட்டும் திரவம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும், எக்டருக்கு 625 மி.லி. டைகுளோர் வாஸ், 25 கிலோ குயினால் பாஸ் 4 சதத்தூள், 25 கிலோ கார்பரில் 5 சதத்தூள்,

1.250 லிட்டர் பாசலோன் இ.சி. ஆகியவற்றில் ஒன்றை 625 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

750 மி.லி. டிரை அசோபாசைத் தெளித்தால், அதற்குப் பிறகு 31 லிட்டர் வேப்பங் கொட்டைக் கரைசலை இருமுறை தெளிக்க வேண்டும்.

புள்ளிக்காய்ப் புழு

அறிகுறிகள்: மொட்டுகள், பூக்கள், காய்களில் துளைக் குழிகள் இருக்கு ம். தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பூச்சிகளில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வலையைப் பின்னியிருக்கும்.

பூச்சியின் விவரம்: புழுக்கள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிறத் தலையுடன் இருக்கும். இரண்டு இணை அடர் புள்ளிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னால் இருக்கும்.

தாய்ப் பூச்சியின் முன் இறக்கைகள் லேசான பழுப்பு நிறத்தில் வெண் குறிகளுடன் இருக்கும். பின் இறக்கைகள் வெள்ளை நிறத்தில் பழுப்புநிறக் குறிகளுடன் பக்கவாட்டில் இருக்கும்.

கட்டுப்பாடு: ஒரு பயிரில் ஐந்து புழுக்கள் இருந்தால், அது பொருளாதாரச் சேத நிலையாகும். இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 625 மி.லி. பாசலோன் 0.07% மருந்தைத் தெளிக்க வேண்டும்.

முள்ளுக் காய்த் துளைப்பான்

அறிகுறிகள்: பூக்கள் மற்றும் இளம் காய்களில் தொங்கிக் கொண்டு இருக்கும். முதிர்ந்த காய்களில் இப்புழு நுழைந்த இடத்தில் பழுப்புப் புள்ளி காணப்படும்.

பூச்சியின் விவரம்: இப்புழு, தொடக்கத்தில் பச்சை நிறத்திலும், பிறகு ரோஜா நிறத்திலும் இருக்கும்.

முன் மார்புக் கண்டத்தில் ஐந்து கரும் புள்ளிகள் இருக்கும். தாய்ப்பூச்சி பழுப்புக் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.

முன் மார்புக் கண்டம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன் இறக்கையின் விளிம்பு வரை வெள்ளை வரிகள் இருக்கும்.

கட்டுப்பாடு: நன்மை தரும் பூச்சிகளான டேற்றாஸ் டைகஸ், ப்ரெகான் ஹெபெடோர், பநேரோடோமா, பிஹென் தேகாசிசெல்லா போன்றவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

பயிரில் பத்து சதத் தாக்கம் இருந்தால் அது, பொருளாதாரச் சேதநிலை ஆகும்.

இந்தப் புழுக்களின் தாக்குதல் இருக்கும் பகுதிகளில் 2-3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஆழமாகக் கோடையுழவு செய்ய வேண்டும்.

தொடக்கத்தில் குறுகிய கால இரகத்தை விதைக்க வேண்டும்.

பயிர்கள் நெருக்கமாக இருக்கக் கூடாது. உயரமான சோளத்தைப் பறவைக் குடிலாக வளர்க்க வேண்டும்.

வளர்ந்த புழுக்கள் மற்றும் தாய்ப் பூச்சிகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். 50 மீட்டர் இடைவெளியில் எக்டருக்கு 5 மயக்கப் பொறிகளை வைக்க வேண்டும்.

அதைப் போல, எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகளை அமைக்க வேண்டும். அந்துப் பூச்சியை அழிக்க, ஐந்து ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வீதம் வைக்க வேண்டும்.

எக்டருக்கு 1.5 இலட்சம் டிரைக்கோ கிரம்மா ச்லிஒனிச் வீதம் வாரத்துக்கு நான்கு முறை வெளியிட வேண்டும்.

பச்சைக் கண்ணாடி இறக்கை நாவாய்ப் பூச்சி, வேட்டையாடும் கெட்ட நாற்றமுள்ள நாவாய்ப் பூச்சி, சிலந்தி, எறும்புகள் போன்றவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

எக்டருக்கு 0.1 சத டீபால், என்.பி.வி 250 எல்.இ., 0.5 சதம் வெல்லம் ஆகியவற்றைக் கலந்து, 10-15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை இட வேண்டும்.

புழுக்கள் தொடக்க நிலையில் இருக்கும் போது, என்.பி.வி. கரைசலைத் தெளிக்க வேண்டும்.

ஐந்து சத வேப்பங் கொட்டைச் சாற்றை இருமுறை தெளித்து விட்டு, அதைத் தொடர்ந்து, 0.05 சத டிரையா சோபாசைத் தெளிக்க வேண்டும்.

எக்டருக்கு 25 கிலோ குயினால் பாஸ் 4டி அல்லது கார்பரில் 5டி பூச்சிக் கொல்லியைத் தெளிக்கலாம். எக்டருக்கு ஒரு லிட்டர் குயினால் பாஸ் 25 இ.சி. வீதம் தெளிக்கலாம்.

நீல வண்ணத்துப் பூச்சி

அறிகுறிகள்: மொட்டுகள், பூக்கள் மற்றும் இளம் காய்களில் உள்ள துளைக் குழிகளில், நத்தைப்புழு இருப்பதைப் போலவே தெரியும்.

தாக்கப்பட்ட இடங்களில் தேன் சுரப்பும், எறும்பு நடமாட்டமும் இருக்கும்.

பூச்சியின் விவரம்: புழுக்கள் தட்டையாக, வட்டமாக, மங்கிய பச்சை நிறத்தில், சொரசொரப்பான தோலுடன் இருக்கும்.

தாய்ப்பூச்சி சாம்பல் கலந்த நீல நிறத்தில் தெளிவாக இருக்கும். இறக்கைகளின் பின்புறம் எண்ணற்ற வரிகளுடன் பழுப்பு நிறப் புள்ளிகள் இருக்கும்.

கட்டுப்பாடு: அடர்த்தியாக மற்றும் நெருக்கமாக நடக்கூடாது. முன்கூட்டி அல்லது தாமதமாக விதைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எக்டருக்கு 220 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் 5% எஸ்.ஜி. அல்லது 333 மி.லி. இன்டோக் ஸ்கார்ப் 15.8% எஸ்.சி. அல்லது 5 சத வேப்ப விதைச் சாற்றை இரண்டு முறையும்,

அதைத் தொடர்ந்து 0.05 சத ட்ரை அசோபோஸ் அல்லது 2 சத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும். தெளிப்புக்கு 500 லிட்டர் நீரைப் பயன்படுத்த வேண்டும்.

புல் நீல வண்ணத்துப் பூச்சி

அறிகுறிகள்: மொட்டுகள், பூக்கள் மற்றும் இளம் காய்களில் உள்ள துளைக் குழிகளில், நத்தைப்புழு இருப்பதைப் போலவே காணப்படும்.

காய்களில் புழுக்கள் நுழைந்த இடத்தில், அவற்றின் கழிவு இருக்கும். புழுக்கள் மங்கிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவப்பு வரியுடன், சிறிய கருநிற ரோமங்களுடன் இருக்கும்.

தாய்ப்பூச்சி நீல நிறத்தில், அளவான வடிவில், பின் இறக்கையில் ஐந்து கரும் புள்ளிகள் மற்றும் உள் விளிம்பில் 2 கரும் புள்ளிகளுடன் இருக்கும்.

கட்டுப்பாடு: பயிரில் 10 சதப் பாதிப்பு இருந்தால், அது பொருளாதாரச் சேத நிலை ஆகும். இந்நிலையில், எக்டருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து, பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம்.

ஐம்பது பறவைத் தாங்கிகளை அமைக்கலாம். வளர்ந்த புழுக்களைச் சேகரித்து அழிக்கலாம்.

பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை, எக்டருக்கு 1.5×10 12 கிருமிகள் மற்றும் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி ஒட்டும் திரவம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

மேலும், எக்டருக்கு 625 மி.லி. டைகுளோர் வாசைத் தெளிக்கலாம். அல்லது 25 கிலோ குயினால் பாஸ் 4 சதத்தூள் அல்லது 25 கிலோ கார்பரில் 5 சதத் தூளைத் தூவலாம்.

அல்லது 750 மி.லி. டிரை அசோபாசைத் தெளித்த பிறகு, 31 லிட்டர் வேப்பங் கொட்டைக் கரைசலை இரண்டு முறை தெளிக்கலாம்.

அல்லது 1.25 லிட்டர் பாசலோன் 35 இ.சி. மருந்தைத் தெளிக்கலாம். தெளிப்புக்கு 625 லிட்டர் நீரைப் பயன்படுத்த வேண்டும்.

முன்கூட்டிய நடவடிக்கையாக, 2-3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கோடையுழவை ஆழமாக உழ வேண்டும்.

பீன்ஸ் அசுவினி

அறிகுறிகள்: இலைகள், மஞ்சாக்காம்பு, இளம் காய்களைச் சுற்றி அடர் நிறத்தில் அசுவினிகள் கூட்டமாக இருக்கும்.

தேன் சுரப்புடன், எறும்புகள் நடமாட்டமும் இருக்கும். இளம் பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி, அடர் நிறத்தில், வயிற்றுப் பகுதியில், இரண்டு குழாய் போன்ற அமைப்பில் இருக்கும்.

கட்டுப்பாடு: எக்டருக்கு 220 கிராம் இமாமெக்டின் பென்சோயேட் 5% எஸ்.ஜி. அல்லது 333 மி.லி. இன்டோக் சாகார்ப் 15.8% எஸ்.சி. அல்லது 5 சத வேப்பங் கொட்டைக் கரைசலை இருமுறை தொடர்ந்து தெளிக்க வேண்டும்.

அடுத்து, 0.05 சத டிரை அசோபாஸ் அல்லது 2 சத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும். தெளிப்புக்கு 500 லிட்டர் நீரைப் பயன்படுத்த வேண்டும்.

இலைத் தத்துப்பூச்சி

அறிகுறிகள்: இலைகள் பல நிறங்களில் மாறும். மஞ்சள் நிறத்தில் இருக்கும். பச்சை நிறப் பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் இருக்கும். தாய்ப்பூச்சி நீளமாக, பச்சை நிறத்தில், கூர்மையாக இருக்கும்.

கட்டுப்பாடு: எக்டருக்கு 750 மி.லி. மீத்தைல் டெமட்டான் வீதம் எடுத்து, 700- 1,000 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

காய் நாவாய்ப்பூச்சி

அறிகுறிகள்: காய்களில் கரும் புள்ளிகள் இருக்கும். இளம் பச்சைக் காய்கள் உதிரும். காய்கள் மோசமாக வளர்ந்திருக்கும். காய்களில் இருக்கும் பருப்புகள் தரமற்று இருக்கும்.

பூச்சி, கரும் பழுப்பு நிறத்தில், அரை வட்டமாக இருக்கும். இளம் பூச்சிகள் அடர் பழுப்பு நிற எறும்புகளைப் போலத் தெரியும்.

கட்டுப்பாடு: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. டைமித்தோயேட் 30% இ.சி. அல்லது 500 மிலி. மீத்தைல் டெமட்டான் 25% இ.சி.

அல்லது 100-125 மி.லி. இமிடா குளோபிரிட் 17.8% எஸ்.எல். அல்லது 100 கிராம் தைய மீத்தாக்சம் 25% WG மருந்தை நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வெள்ளை ஈ

அறிகுறிகள்: இலைகள் பல நிறங்களில் மாறும். மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது, மஞ்சள் பல்வண்ண நச்சுயிரி நோயைப் பரப்பும் கிருமியாகும்.

தாய்ப்பூச்சி சிறியதாக, மஞ்சள் உடல், வெள்ளை இறக்கைகள், உடலைச் சுற்றிலும் மெழுகைப் போன்ற பொடியுடன் காணப்படும்.

இளம் பூச்சிகள் மற்றும் கூட்டுப் புழுக்கள், கறுப்பு நிறத்தில் வட்டமாக அல்லது கோள வடிவில் இருக்கும். கூட்டுப் புழுக்கள், விளிம்பில் நிறைய ரோமங்களுடன் இருக்கும்.

கட்டுப்பாடு: எண்ணெய் மற்றும் நீர் கலந்த பாத்திரம் அல்லது எண்ணெய்யில் தோய்த்த துணியை, செடியின் கீழே வைத்து, செடியை உலுக்க வேண்டும்.

எக்டருக்கு 500 மிலி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 500 மிலி. டைமெத்தயோயேட் 30 இ.சி. அல்லது 250 மிலி. பாஸ்போ மிடான் 85 WSC மருந்தைத் தெளிக்க வேண்டும்.

பூ வண்டு

அறிகுறிகள்: தாய்ப்பூச்சி, மொட்டு, பூக்களைத் தீவிரமாக உண்ணும். பூச்சியின் முட்டைகள் இள மஞ்சள் நிறத்தில், உருண்டையாக இருக்கும்.

புழுக்கள் வெள்ளையாக இருக்கும். தாய்ப்பூச்சி கறுப்பு நிறத்தில், வட்ட வடிவ ஆரஞ்சு நிறப் புள்ளியுடன் இருக்கும். இரண்டு வலை வடிவ ஆரஞ்சு வளையங்கள் இறக்கைகளின் குறுக்கே காணப்படும்.

கட்டுப்பாடு: கையால் அல்லது வலையால் பூச்சிகளைச் சேகரித்து, ம.எண்ணெய் கலந்த நீரில் வைத்து அழிக்க வேண்டும்.


பயிர் DR.T.SENTHILKUMAR 1

முனைவர் த.செந்தில்குமார், முனைவர் கே.நெல்சன் நவமணிராஜ், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை – 622 303.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!