நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ்!

சூடோமோனாஸ் pseudomomos

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மண் மூலம் பரவும், வேரழுகல், வாடல் நோய், நாற்றழுகல் நோய், குண்டாந்தடி வீக்கவேர் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

இலை மூலம் பரவும் குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கும்.

மேலும், பயிர்களைத் தாக்கும் மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

நெல்லில் இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கும்.

வாழையில் வேரைக் குடையும் நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு, சுருள் நூற்புழு மற்றும் காய்கறிகளில் வேர்முடிச்சு நூற்புழுவால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.

மற்ற உயிர் எதிர்க் காரணிகளான பேசில்லஸ் சப்டில்லிஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றுடன் சேர்ந்து நன்கு செயல்படுவதால், இதை அவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பயிர்களில் நோய்களைக் கட்டுப்படுத்தும் திறன் கூடும்.

ஆக்ஸின், ஜிப்ரலின் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளைச் சுரந்து பயிர்களின் வளர்ச்சியைக் கூட்டும்.

விதை நேர்த்தி: நெல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது 10 மில்லி சூடோமோனாஸ் வீதம் கலந்து, தேவையான நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து நீரை வடிக்க வேண்டும். வடித்த நீரை நாற்றங்காலில் ஊற்ற வேண்டும்.

விதை நேர்த்தி: பிற பயிர்கள்: ஒரு கிலோ விதைக்கு, பத்து கிராம் அல்லது 10 மில்லி சூடோமோனாஸ் வீதம் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நாற்றுகளை நனைத்தல்: 2.5 கிலோ அல்லது ஒரு லிட்டர் சூடோமோனாசை, 25 ச.மீ. நாற்றங்கால் நீரில் கலந்து, ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை, அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நெடுநேரம் ஊற வைத்தால் அதன் செயல் திறன் கூடும்.

மண்ணில் இடுதல்: எக்டருக்கு, 2.5 கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து, 50 கிலோ எரு அல்லது மண்புழு உரத்தில் கலந்து, விதைக்கு முன் அல்லது விதைத்த பின், நிலம் ஈரமாக இருக்கும் போது இட வேண்டும்.

தெளிப்பு முறை: ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அல்லது 5 மி.லி. சூடோமோனாஸ் வீதம் கலந்து, நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து, பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

வாழைக்கன்று நேர்த்தி: வாழைக் கன்றுகளை, களிமண் கலவையில் நனைத்த பிறகு, கிழங்குக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் தெளித்து நடவு வேண்டும்.

வாழைத்தாரில் தெளித்தல்: ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அல்லது 5 மி.லி. சூடோமோனாஸ் வீதம் கலந்து, கடைசி வாழைத்தார் வெளிவந்த பிறகு தெளிக்க வேண்டும். இப்படி, மாதம் ஒருமுறை என, அறுவடை வரை தெளிக்க வேண்டும்.

சூடோமோனாஸ் கலவையை மற்ற பூசண மற்றும் பூச்சிக் கொல்லியில் கலத்தல் கூடாது.

இந்தக் கலவையை, தயாரித்த நான்கு மாதங்களில் பயன்படுத்த வேண்டும். இதை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம்.


சூடோமோனாஸ் Narayanan e1645014878842

ப.நாராயணன், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!