கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!

Sugercane plant

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021

நுண்ணுயிர் உரங்கள் மண்வளத்தை மேம்படுத்தி கரிமச் சிதைவுக்கும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்க்கவும், உரங்களிலும் மண்ணிலும் கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தைக் கரைத்துத் தரவும், எளிதில் மட்காத பயிர்க் கழிவுகளை மட்கச் செய்து, கரிம மற்றும் தழைச்சத்து விகிதத்தைக் குறைத்துப் பயிருக்குத் தரவும் பயன்படுகின்றன.

மண்வளமானது, அதன் இரசாயன குணம், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வகையைச் சார்ந்தே அமையும். மண்ணில் இயற்கையாக நடைபெறும் கரிம, நைட்ரஜன், மணிச்சத்து, இரும்புச் சத்து மற்றும் ஏனைய வளங்களின் சுழற்சியில் நுண்ணுயிர்களின் பங்கு பெரிதாகும். ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் எரு மற்றும் நுண்ணுயிர்களை இட்டு வளர்த்த நிலங்கள் எப்போதும் நுண்ணூட்டக் குறையின்றி இருக்கும்.

செயற்கை உரங்களை முற்றிலும் தவிர்க்க முடியாத காலத்தில், தீவிர சாகுபடி முறைகளில் இரசாயன உரங்களின் பயனை அதிகரிக்கும் வகையில், நுண்ணுயிர் உரங்கள் இடப்படுகின்றன.

தழைச்சத்தை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள்

கரும்பில் தழைச்சத்தை நிலைநிறுத்த, அசோஸ்பைரில்லம், குளுக்கன் அசிட்டோபேக்டர் ஆகிய இருவகை நுண்ணுயிர் உரங்கள் பயன்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் காற்றிலுள்ள நைட்ரஜனை ஈர்த்து அம்மோனியம் மற்றும் நைட்ரேட்டாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன. இந்த இருவகை உயிரிகளிலும் நைட்ரோஜீனேஸ் என்னும் நொதி உள்ளது.

இந்த நொதி தனிம நிலையில் ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்துள்ள நைட்ரஜன் பிணைப்பைப் பிளந்து பயனுள்ள நிலைக்கு மாற்றுகிறது. இதில், அசோஸ்பைரில்லம் வேர்சூழ் மண்டல பாக்டீரியாவாகும். இது, புல்வகைப் பயிர்களின் வேர்களில் அதிகமாக இருக்கும். மேலும், அதனுடன் இணைந்து வாழக்கூடிய பாக்டீரியாவாகும். இவை யாவும் வேர்களுடன் இணைந்து வேரின் மேற்பரப்பில் வாழ்கின்றன.

குளுக்கான் அசிட்டோபேக்டர் நுண்ணுயிரி, கரும்பின் இலை, தண்டு மற்றும் வேர்ப் பகுதியில் அதிகமாக இருக்கும். இந்த பாக்டீரியா, சர்க்கரைச் சத்து அதிகமுள்ள பயிர்களில் இருக்கும். இது, 30% வரை சர்க்கரை மற்றும் கார அமிலத்தைத் தாங்கி வளரும்.

காற்றில் தழைச்சத்து 78% உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு மேலேயுள்ள காற்று மண்டலத்தில் சுமார் 30 ஆயிரம் டன் நைட்ரஜன் இருக்கிறது. ஆனால், மண்ணில் மிகவும் குறைந்த அளவில், அதாவது, <0.05% தான் உள்ளது. இந்நிலையில் இயற்கையின் கொடையான நைட்ரஜனைத் தழைச்சத்தாக மாற்றிப் பயிர்களின் வேரிலும் மண்ணிலும் நிலை நிறுத்தி, சத்தாகத் தரும் ஆற்றலை இவ்வகை பாக்டீரியாக்கள் கொண்டுள்ளன.

கரும்பைப் பயிரிடும் போது, ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லத்தை இட்டால், கரும்பு மகசூல் கூடுவதுடன், பயிருக்கு இட வேண்டிய நைட்ரஜன் இரசாயன உரத்தில் 25 சதத்தைக் குறைத்தே இடலாம்.

மணிச்சத்தைக் கரைக்கும் பாஸ்போ பாக்டீரியா

பாஸ்பரஸ் சத்தை இடும் போது, பயிர் எடுத்துக் கொண்டது போக மீதமிருப்பது, மண்ணில் கரையாத நிலையில் தங்குகிறது. மேலும். பாஸ்பரஸ் அயனி இரும்பு அயனியுடன் சேர்ந்து, கரையாத நிலைக்குப் போய் விடுகிறது. இதனால், பயிரால் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில், நாம் அளிக்கும் உரம் வீணாகி விடுகிறது.

இந்நிலையில், பாஸ்போபாக்டீரியா, இதைக் கரைத்துப் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும் விதத்தில் மாற்றித் தருகிறது. மண்ணிலும், வேர்சூழ் மண்டலத்திலும் அதிகமாக இருக்கும் இந்த பாக்டீரியாக்கள், மண்ணில் தனித்து வாழ்ந்து, சிட்ரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், மேலிக் அமிலம், லாக்டிக் அமிலம், டார்டாரிக் அமிலம் போன்ற அங்கக அமிலங்களைச் சுரக்கும். இவை, கரையாமல் இருக்கும் பாஸ்பரசைக் கரைத்துப் பயிருக்குக் கிட்டும் நிலைக்கு மாற்றித் தரும்.

பாஸ்போபாக்டீரியா நுண்ணுரத்தை, தழைச்சத்தைத் தரும் உயிர் உரங்களில் கலந்தும் இடலாம். இதில், பேசில்லஸ் மெகத்தீரியம் பாஸ்போடியம், சூடோமோனாஸ் ஆகிய பாக்டீரியாக்கள் கரும்பின் வேர்ப் பகுதியில் அதிகமாகப் பெருகும். நான்கு கிலோ பாஸ்போபாக்டீரியாவை 50 கிலோ மட்கிய தொழுவுரத்தில் கலந்து, கரும்பை நடுமுன், நடவுக்காலில் சீராக இட்டால், ஏக்கருக்கு 4 டன் கரும்பு அதிகமாகக் கிடைக்கும் என்பது வயல்வெளி ஆய்வில் கிடைத்த உண்மையாகும்.

மணிச்சத்தைக் கிரகித்துப் பயிருக்குத் தரும் மைக்கோரைசா

நட்ட 30 நாட்களுக்குள் மணிச்சத்து நுண்ணுயிர் உரங்களை, நேரிடையாக நிலத்தில் இட வேண்டும். இவ்வகையில், மண்ணில் பரவலாக இருக்கும் மணிச்சத்தைக் கிரகித்துப் பயிர்களின் வேருக்குத் தரும் திறன், மைக்கோரைசா என்னும் உட்பூசணத்துக்கு உள்ளது. இது பூசண வகை நுண்ணுயிராகும். குளோமஸ் மோசே, குளோமஸ் பேசிகுளோடஸ் போன்ற வேர் உட்பூசணங்கள் அதிகளவில் பயன்படுகின்றன.

இந்தப் பூசண உரங்கள், கரும்பு வளர்ச்சி, மணிச்சத்துச் சேமிப்பு, நோய்த் தாக்கத்தைக் குறைத்தல், வறட்சியைத் தாங்கும் திறனை அளித்தல் போன்ற பலன்களைத் தருகின்றன. கரும்பை விரைவாக வளர வைத்து மகசூலை 10% கூடச் செய்கின்றன. மைக்கோரைசாவை இட்டால், 15-20% மணிச்சத்தின் தேவையைக் குறைக்கலாம். இந்தப் பூசணம் ஒருமுறை மண்ணில் பரவி விட்டால், பயிரின் வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைத்து நிற்கும். 

உயிர் உரங்களை இடும் முறைகள்

பாக்டீரிய வகையைச் சார்ந்த அனைத்து உயிர் உரங்களும், புதிய துகள் வடிவில் அதிகளவு நுண்ணுயிர்களுடன் வெளியிடப்பட உள்ளன. இதைப் போல வேர் உட்பூசணமும் அதிக வித்துகளுடன் புதிய துகள் வடிவில் வெளியிடப்பட உள்ளது. இந்த உரங்களைப் பல்வேறு பயிர்களுக்கும் இட்டு ஆய்வு செய்ததில், கரிம ஊடகத்தில் தயாரிக்கப்படும் உரங்களை விடச் சிறந்து விளங்குவது கண்டறியப்பட்டது.

அசோஸ்பைரில்லம் போன்ற தழைச்சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள், சர்க்கரைச் சத்து மிகுந்த பயிர்களில் திறன்படச் செயல்படாது. எனவே தான் குளுக்கான் அசிட்டோபாக்டரை மட்டும் கரும்புக்கு இடச் சொல்கிறோம். கூடுதலாக, பாஸ்போபாக்டீரியா மற்றும் சிலிக்கா பாக்டீரியாக்களை இடலாம்.

கரணை நேர்த்தி

எக்டருக்கு 2 கிலோ உயிர் உரம் வீதம் எடுத்து நெகிழிப் பீப்பாயில் உள்ள நீரில் கலக்க வேண்டும். பிறகு, இந்தக் கலவையில் நடவுக் கரணைகளை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி நட வேண்டும்.

நேரடியாக மண்ணில் இடுதல்

எக்டருக்கு 2 கிலோ உயிர் உரம் வீதம் எடுத்து, 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். அடுத்து, 30, 60 மற்றும் 90 நாளில் இதே முறையை கையாள வேண்டும்.

குளுக்கான் அசிட்டோபாக்டர், பாஸ்போபாக்டீரியா, சிலிக்கா பாக்டீரியா உயிர் உரங்களை, கரும்புக் கரணை நேர்த்திக்கு எக்டருக்கு 2 கிலோ வீதம் பயன்படுத்தலாம். மேலும், நட்டு 30, 60 மற்றும் 90 நாளில் இவற்றை நேரடியாக மண்ணிலும் இடலாம்.

வேர் உட்பூசண உரத்தை எக்டருக்கு 50 கிலோ வீதம் எடுத்து 100 கிலோ தொழுவுரத்தில் கலந்து, கரும்பு நடவுக்கு முன் நிலத்தில் சீராகத் தூவ வேண்டும். இதே முறையை 30 மற்றும் 60 நாளில் செய்ய வேண்டும்.  

எருவுடன் நுண்ணுயிரி உரம் கலந்து இட்ட பயிர் எகிறி விளையும் என்பது புதுமொழி. உரம் உதவுவதைப் போல் ஊரார் உதவ மாட்டார் என்பது பழமொழி. எனவே, எருவுடன் நுண்ணுயிர் உரத்தைக் கலந்து பயிருக்கு இடும் போது, சமச்சீர் சத்துகளுடன்; வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், பயிர்க் கழிவுகள் சிதைவுற ஏற்ற நொதிகளும் கிடைப்பதால் மண்வளம் காக்கப்படும்.


கரும்பில் Gayathri

முனைவர் கு.காயத்ரி,

முனைவர் மு.சண்முகநாதன், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்-607001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!