மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

கொத்தமல்லி Pachai Boomi Coriander

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018

ணமூட்டும் தன்மை வாய்ந்தது கொத்தமல்லி. உணவுகளில் மணம் மற்றும் சுவைக்காகப் பயன்படுகிறது. தழைக்காகவும், விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கொரியானட்ரம் சடைவம் என்பதாகும். எபிஏசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில் கொத்தமல்லி அதிகப் பரப்பில் பயிராகிறது. உலக நாடுகளில் மொராக்கோ, இரஷ்யா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா, கௌடிமாலா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகியவற்றில் சாகுபடியாகிறது. இந்தியாவில் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், இராஜஸ்தான், குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகுதியாகச் சாகுபடியில் உள்ளது.  

தமிழ்நாட்டில், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மானாவாரியாக அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. கொத்தமல்லி விதை உற்பத்தித் திறன் எக்டருக்கு 458-590 கிலோவாக உயர்ந்துள்ளது. இறவைக் காலங்களில் கூடாரங்களை அமைத்து, கொத்தமல்லித் தழைகளை உற்பத்தி செய்து கூடுதல் இலாபம் பெறலாம்.

தட்பவெப்பம் மற்றும் மண்வளம்

அதிக வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிர் கொத்தமல்லி. எனவே, மானாவாரியிலும் நல்ல மகசூலைக் கொடுக்கும். பூக்கள் மற்றும் காய்கள் பிடிக்கும் நேரத்தில் வறட்சி ஏற்பட்டால் அதிக விதைகளை மகசூலாகப் பெறலாம். ஆனால் அதிக மழையோ அல்லது அதிக வெப்பமோ அமைந்தால் விதை மகசூல் குறைவதுடன் பூச்சித் தாக்குதலும் உண்டாகும். இது அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும். கறுப்பு வண்டல் மற்றும் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் மண்ணிலும் நன்றாக விளையும். புஞ்சையின் வளத்தைக் கூட்ட, முந்தைய பயிர்க் கழிவுகள் அல்லது புங்கன் தழைகளை ஏக்கருக்கு ஒரு டன் இட்டு மட்கச் செய்ய வேண்டும். இத்துடன் பயறு வகைகளைச் சுழற்சி முறையில் பயிரிட்டு, மண்ணில் தழைச்சத்தைக் கூட்டுவதன் மூலம் மண்வளத்தை அதிகப்படுத்தலாம்.

இரகங்கள்

கோ 1: இந்த இரகம் 110 நாட்களில் விளையும். செடிகள் உயரமாக வளரும்; நிறையப் பூக்கள் உண்டாகும். தழைக்காகவும் விதைக்காகவும் பயன்படுத்தலாம்.

கோ 2: இந்த இரகம் கூடுதல் மகசூலைத் தரும். இதைத் தழைக்காகவும் விதைக்காகவும் பயிரிடலாம். வறட்சியைத் தாங்கி வளரும். 0.3% எண்ணெய் கிடைக்கும். 90-110 நாட்களில் வளர்ந்து எக்டருக்கு 700 கிலோ விதைகளைத் தரும்.

கோ 3: இதுவும் கூடுதல் மகசூலைத் தரும். தழைக்காகவும் விதைக்காகவும் பயிரிடலாம். விதை தரமாகவும், எண்ணெய் 0.38-0.41 சதமும் கிடைக்கும். 103 நாட்களில் எக்டருக்கு 640 கிலோ விதைகளைக் கொடுக்கும்.

கோ (சி.ஆர்) 4: இதை மானாவாரியிலும் இறவையிலும் பயிரிடலாம். விதை சிறிதாகவும் நீள்வட்டமாகவும் இருக்கும். அழுகல் நோய்க்கு எதிர்ப்புள்ளது. 0.45% எண்ணைய் கிடைக்கும். தமிழ்நாடு முழுதும் பயிரிடலாம். 65-70 நாட்களில் விளைந்து எக்டருக்கு 600 கிலோ விதைகளைத் தரும்.

குஜராத் கொத்தமல்லி: இது உள்ளூர் இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது. இந்தச் செடிகளில் கிளைகள் நிறைய உருவாவதால் கூடுதலாக மகசூல் கிடைக்கும். விதைகள் பருமனாக இருக்கும். இறவையில் எக்டருக்கு 1,100 கிலோ விதைகளைத் தரும். இதன் வயது 110-115 நாட்களாகும்.

இராஜேந்திர சுவாதி: இது இராஜஸ்தானைச் சேர்ந்த உயர் விளைச்சல் இரகம். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏற்றது. விதை சிறிதாக இருக்கும். 110 நாட்களில் விளைந்து விடும். இறவையில் எக்டருக்கு 1200-1400 கிலோ விதைகளைத் தரும்.

ஆர்.சி.ஆர் 41: இது இராஜஸ்தானைச் சேர்ந்த யுடி என்னும் வகையில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. செடிகள் உயரமாக இருக்கும். இறவைச் சாகுபடிக்கு ஏற்றது. 130-140 நாட்களில் விளைந்து எக்டருக்கு 1,200 கிலோ விதைகளைத் தரும்.

சுவாதி: இது குறுகிய கால இரகம். பருவமழை தாமதமாகப் பெய்தாலும் பயிரிட ஏற்றது.

விதை நேர்த்தி

கொத்தமல்லி விதைகளின் முளைப்புத் திறன், மகசூல், தரம் போன்றவற்றை விதைநேர்த்தி மூலம் மேம்படுத்தலாம். முளைப்புத் திறனைக் கூட்ட, தரையில் விதைகளைத் தேய்த்து அல்லது காலால் மிதித்து இரண்டாகப் பிரிக்க வேண்டும். பிறகு, 12-24 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும். அடுத்து, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து, விதை நேர்த்தி செய்து சாக்குப் பையில் சுமார் எட்டு மணி நேரம் வைக்க வேண்டும். கடைசியாக ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன் 200 கிராம் அசோஸ்பயிரில்லத்தைக் கலந்து விதைக்க வேண்டும்.

நிலத் தயாரிப்பு

கோடையிலும் தென்மேற்குப் பருவக் காலத்திலும் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும். எக்டருக்கு 10 டன் மட்கிய தொழுவுரத்தை இட்டு உழ வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்தை இடவேண்டும். இரசாயன உரங்களை அடியுரமாக இட வேண்டும். மேலும், வேப்பம் புண்ணாக்கு 400 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ,  சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 2.5 கிலோ, அசோஸ்பயிரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றைக் கலந்து ஊட்டமேற்றி அடியுரமாக இட வேண்டும்.

பருவம் மற்றும் விதைப்பு

மானாவாரியில் கொத்தமல்லியைச் சாகுபடி செய்ய, அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரம் ஏற்றதாகும். வரிசை இடைவெளி 22-30 செ.மீ., செடிக்குச் செடி இடைவெளி 15 செ.மீ. இருக்க வேண்டும். கை விதைப்பாக எக்டருக்கு 12-15 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் முளைப்பு வந்ததும், இரண்டு செடிகள் உள்ளவாறு செடிகளைக் களைக்க வேண்டும்.

பாசனம் 

விதைப்பின் போதும், விதைத்த மூன்று நாட்களுக்குப் பின்பு உயிர் நீரும் அவசியம். அதன் பின்பு 3-4 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம். மானாவாரியாகப் பயிரிட்டால் பாசனம் தேவையில்லை.

பயிர்களைக் களைதல்

மானாவாரிக் கொத்தமல்லியில் விதைகள் முளைத்து 25-30 நாட்களில் பயிர்களைக் களைக்க வேண்டும். இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்து நிறையக் காய்களைக் காய்க்கும். களைத்து எடுத்த செடிகளைத் தழைக்காக விற்கலாம்.

களை நிர்வாகம்

கொத்தமல்லி முளைத்து 25-30 நாட்களில் பயிரைக் களைக்கும் போதும், பின்னர் 50-60 நாளிலும் கைக்களை எடுத்தல் வேண்டும். மேலும், 750 மில்லி புளுகுளோரலின் என்னும் களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து விதைகளை விதைப்பதற்கு முன் மண்ணில் ஈரம் இருக்கும் போது தெளித்து முப்பது நாட்களுக்குக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஊடுபயிர்

கொத்தமல்லியுடன் ஓமம், கொண்டைக்கடலை, அவுரி, நித்திய கல்யாணி போன்ற மருந்துச் செடிகளைப் பயிரிட்டுக் கூடுதல் இலாபம் பெறலாம். மானாவாரியில் ஊடுபயிர் அவசியமில்லை.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சி மேலாண்மை: சாறு உறிஞ்சும் பூச்சிகள்: அசுவினி, இலைப்பேன், பச்சை வண்டு, வெள்ளை ஈ, இலைச் சிலந்தி ஆகியன கொத்தமல்லியைத் தாக்கும். இந்தச் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க, மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை எக்டருக்கு 16 வீதம் ஆங்காங்கே வைக்க வேண்டும். தாக்குதலின் தொடக்கத்தில், தாக்கப்பட்ட செடிகளைப் பூச்சிகளோடு எடுத்து அழிக்க வேண்டும். வேப்பெண்ணெய் 2.0 சதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5.0 சதம் மற்றும் அதனுடன் காதி சோப்பைக் கலந்து (1 கிராம் சோப்பு, 1 லிட்டர் நீர்) தெளிக்க வேண்டும். பயிர்கள் முளைத்த 25-30 நாட்களில் பயிர்களைக் களைதல் அவசியம்.

இலை தின்னிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்: புரோட்டீனியா புழுப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க, எக்டருக்கு 12 வீதம் இனக்கவர்ச்சிப் பொறிகளை ஆங்காங்கே வைக்க வேண்டும். புழுக்கள் குறைவாக இருந்தால், கைகளால் சேகரித்து அழிக்க வேண்டும்.

நோய் மேலாண்மை

கொத்தமல்லிச் செடிகளைத் தாக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கவை சாம்பல் நோய், வாடல் நோய் ஆகும்.

கட்டுப்படுத்துதல்: வாடல் நோய்: இந்நோய் தாக்காத பயிர்களிலிருந்து எடுக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்த வேண்டும். கோடையுழவு அவசியம். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். நோயுற்ற செடிகளில் 0.5 சத சூடோமோனாஸ் புளுரோசன்ஸ்  கரைசலைத் தெளிக்கலாம். தொடர்ச்சியாகக் கொத்தமல்லியைப் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இலைப்பொடி நோய்: இது ஒரு கொடிய நோயாகும். இந்நோய் வந்ததும் விரைவில் அனைத்துச் செடிகளையும் தாக்கி அழித்து விடும். இதைக் கட்டுப்படுத்த, கராத்தேன் 0.2 சதம் அல்லது சல்பர் 0.2 சதம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 1 சதம் அளவில் தெளிக்க வேண்டும்.

விதையழுகல் நோய்: இந்த நோய் கெல்மிந்தோஸ்போரியம் ஆல்டநேந்திரா புசேரியம் என்னும் பூசணத்தால் உண்டாகிறது. இது, விதைகளை மட்டும் தாக்கி அழுகச் செய்யும். இதைக் கட்டுப்படுத்த, கார்பென்டாசிம் 0.1 சதம், அதாவது, 1 கிராம் மருந்துக்கு 1 லிட்டர் நீர் வீதம் கலந்து, செடிகளில் விதை உண்டான 20 நாட்களில் தெளிக்கலாம்.

அறுவடை

தழைக்காகச் சாகுபடி செய்தால், 30-40 நாட்களிலும், விதைக்காக என்றால், இரகத்தைப் பொறுத்து 70-140 நாட்களிலும் அறுவடை செய்யலாம். விதைகள் நன்கு வளர்ந்து பச்சை நிறம் பழுப்பு நிறமாக மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். இல்லையெனில் விதைகள் வெடித்தோ அல்லது செடிகளை அறுவடை செய்யும் போதோ உதிர்ந்து விடும். அறுவடை செய்த செடிகளை 2-3 நாட்கள் காய வைக்க வேண்டும். பின்பு செடிகளைக் காலால் மிதித்து விதைகளைப் பிரித்து எடுக்கலாம். இந்த விதைகளைச் சுத்தம் செய்து சாக்குப் பைகளில் இட்டுப் பாதுகாக்க வேண்டும். மானாவாரியில் எக்டருக்கு 400-500 கிலோவும், இறவையில் 600-1,200 கிலோவும் மகசூலாகக் கிடைக்கும்.


PACHAI BOOMI DR.C.RAJA MANICKAM

முனைவர் சி.இராஜமாணிக்கம்,

வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம்-623503.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!