கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!

பூசண நோய் Pachai boomi Poultry farm

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018

பூசண நோய்கள் நேரடியாகவோ அல்லது தீவனத்தில் நஞ்சை உற்பத்தி செய்தோ கோழிகளைத் தாக்கும். குறிப்பாக, இந்த நோய்கள் இளம் கோழிகளைத் தாக்கி, வளர்ச்சிக் குறைவு, கழிச்சல், மூளைப் பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் பூசண நஞ்சானது, நுண்ணுயிரி, நச்சுயிரி நோய்கள் கோழிகளைத் தாக்குவதற்குக் காரணமாகிறது. இதனால் பண்ணை மிகுந்த பொருளாதார இழப்புக்கு உள்ளாகிறது. இந்தப் பூசணங்கள் அனைத்துப் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும். ஆனாலும், நுண்ணுயிரி, நச்சுயிரியால் ஏற்படும் நோய்களைவிடப் பூசணங்களால் ஏற்படும் நோய்கள் குறைவுதான். இங்கே, கோழிகளைத் தாக்கும் முக்கியப் பூசண நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்

ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் காளான் நோய். கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூசண நோய். டேக்டிலெரியோஸிஸ். க்ரிப்டோகாகோஸிஸ். ஃபேவஸ். ரோடோடுருலோஸிஸ். டோருலோப்ஸிஸ். மியூகார் மைகோஸிஸ். ஹிஸ்டோபிலாஸ்மோஸிஸ். கிரிப்டோகாக்கோஸிஸ்.

இவற்றில் ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் காளான் நோயும், கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூசண நோயும் கோழிகளில் மிகுதியான நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தும். ஹிஸ்டோபிலாஸ்மோஸிஸ் மற்றும் கிரிப்டோகாக்கோஸிஸ் நோய், பறவைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும்.

பூஞ்சை இரண்டு வகையில் நோய்த் தாக்கத்தை உண்டாக்கும். 1.ஊட்டுயிரிக்குள் நுழைந்து நோய் அறிகுறிகள் மற்றும் திசு மாற்றத்தை ஏற்படுத்தும். 2. தீனி மற்றும் தானியங்களைச் சேமித்து வைக்கும் போது நஞ்சை உற்பத்தி செய்யும். பிறகு, அவற்றைக் கோழிகள் உண்ணும் போது நோயை ஏற்படுத்தி எதிர்ப்புச் சக்தியை குறைக்கும். இதனால் உற்பத்திக் குறையும்.

இது பொதுவாகப் பரவலற்ற நோயையே உண்டாக்கும். எனினும், சில சமயங்களில் பெரியளவிலும் நோயை ஏற்படுத்தும். பூஞ்சை நோய்கள் பருவ மாற்றத்தால் பரவும். முக்கியமாகக் கோடையில் கோழிகளை அடைத்து வளர்ப்பதாலும், இலையுதிர்க் காலத்தில் கோழியெச்சத்தில் பூஞ்சை இருப்பதாலும், இதன் தாக்கம் மிகுதியாகிறது.

சுவாச மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் பூஞ்சைக் கிருமியானது, ஒவ்வாமை, திசுமாற்றம், உடல் நலமின்மையை உண்டாக்குவதுடன் இறப்பையும் ஏற்படுத்தும். கருக்கூடு உற்பத்தி செய்யும் பூசணத்தால் கோழிகள் பாதிக்கப்பட்டால் ஒவ்வாமை ஏற்பட்டு உற்பத்தித் திறன் குறையும். பூசணத்தால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்குக் காலம் தாழ்த்தாமல் சரியான சிகிச்சையை அளிக்க வேண்டும்.

ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் காளான் நோய் (அடைக்குஞ்சு நுரையீரல் ஒவ்வாமை)

இந்நோய், ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் ஃப்யுமிகேட்டஸ், ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் ஃப்லேவஸ் ஆகிய பூசணங்களால் ஏற்படும். இது அனைத்து வகைக் கோழிகளிலும் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும். முக்கியமாக, வான்கோழிகள் பெரியளவில் பாதிக்கப்படும். ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் ஃப்யுமிகேட்டஸின் கருக்கூடு, மற்ற ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் துணை வகைகளுடன் ஒப்பிடும்போது மிகச் சிறியதுதான். இந்தக் கருக்கூடு இயற்கையான எதிர்ப்புத்திறனைக் கொண்டது. இது பொதுவாகச் சுற்றுப்புறத்தில் காணப்படும். கிருமித் தாக்கமுள்ள தீவனம், எச்சம் மூலமாக இந்தக் கருக்கூடு கோழிகளின் சுவாசக் குழாயில் சென்று நோயை ஏற்படுத்தும். இந்நோய், வெப்பச்சூழல், ஈரத்தன்மை, குறைந்த காற்றோட்டம், சுத்தமற்ற தீவனச் சேமிப்பு ஆகியவற்றால் வரும்.

அதிக ஈரத்தன்மையும், மித வெப்பநிலையும் ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் நோய்க்கான முக்கியக் காரணிகள். அதனால், வசந்த காலம் மற்றும் இலையுதிர்க் காலத்தில் நீர்ப்பறவைகளில் இதன் தாக்கம் மிகுதியாக இருக்கும். இந்நோய், நுரையீரலில் திசுச்சிதைவு மற்றும் புதுவளர் சிறுமணித் திசுவை ஏற்படுத்தி, இரத்தத்தின் மூலம் உடலில் பரவி அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். இதன் தாக்கமும் இறப்பும் அடைக்குஞ்சுகளில் அதிகமாக இருக்கும்.

இந்நோய் இரண்டு வகையில் ஏற்படும். அதாவது, 1. தீவிர நிலை. 2. நாள்பட்ட நிலை. தீவிர நிலையில் இந்நோய் மூன்று வார அடைக்குஞ்சுகளைத் தாக்கும். கருக்கூட்டை மிகுதியாகச் சுவாசித்தால் இது ஏற்படும். பாதிக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வந்த குஞ்சுகள் சுவாசிக்கும் போது கருக்கூடு உட்சென்று நோயை ஏற்படுத்தும். பொரிப்பகத்திலேயே பாதிக்கப்படும் குஞ்சுகள், கருக்கூட்டை விடுவித்து மற்ற குஞ்சுகளுக்கும் நோயைப் பரப்பும். இதனால் உண்டாகும் பாதிப்பை 24-48 மணி நேரத்துக்குள் அறிய முடியும். 

நாள்பட்ட ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் அவ்வப்போது ஏற்படும். இது, பெரும்பாலும் இனவிருத்திக் கோழிகளை, முக்கியமாக வான்கோழிகளைப் பாதிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும். புரத நொதி, கிளையோடாக்சின், இரண்டாம் நிலை நச்சு வளர்சிதை மாற்ற வினைப்பொருள் போன்ற வீரியமுள்ள நச்சுகளைப் பூஞ்சைகள் சுரப்பதால் சுவாசப்பை ஒவ்வாமை ஏற்படும்.

நோய் அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட கோழிகள் மந்தமாகவும், வளர்ச்சிக் குறைந்தும் காணப்படும்.  முதல் 3-5 நாட்களில் சுவாசக்குழாயில் ஏற்படும் அடைப்பால் மூச்சு விடுவதில் சிக்கல் உண்டாகும். மேலும், இரத்தச்சோகை, காய்ச்சல், கழிச்சல், தசை வலிப்பு போன்ற நோய்க்குறிகளும் காணப்படும். பாதிக்கப்படும் வான்கோழிகள் பார்வையை இழக்கும். மைய நரம்பு மண்டலச் சிக்கலால் கழுத்து பின்னிக் கொள்ளும்.

பிரேதப் பரிசோதனை செய்து பார்த்தால், நுரையீரல் மற்றும் சுவாசப்பை திசுவில், மஞ்சள் நிறத்தில் முள்ளைப் போன்ற புள்ளிகள் காணப்படும். சுவாசப்பை அடர்த்தியாகவும், உள்சிறு மூச்சுக்குழல் சீழ்ப்பிடித்தும் இருக்கும். புதுவளர் சிறுமணித்திசு பல்வேறு உறுப்புகளில் காணப்படும். திசுச்சிதைவுடன் புதுவளர் சிறுமணித்திசு, தோல் ஒவ்வாமை கோழிகளிலும், சரும ஒவ்வாமை புறாக்களிலும் காணப்படும்.

தடுப்பு முறைகள்

மேம்பட்ட சுகாதாரத்தைக் குஞ்சுப் பொரிப்பகத்திலும், அடைக்குஞ்சுகள் இருக்கும் இடத்திலும் பேண வேண்டும். அழுக்குப் படிந்த, உடைந்த, நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட முட்டைகளை குஞ்சுப் பொரிப்பானில் வைக்கக்கூடாது. அடை வைக்கும் அறையில், ஏற்கெனவே உள்ள அடை முட்டைகளை அகற்றிய பிறகு, சரியான மருந்தைப் பயன்படுத்திப் பூசண நீக்கம் செய்ய வேண்டும். ஈரப்பதம் குறைந்த தீவனத்தை அளிக்க வேண்டும். ஆழ்கூளம் உலர்ந்திருக்க வேண்டும். புதிய ஆழ்கூளத்தில் பூசண நீக்கம் செய்ய வேண்டும்.

தீவனத் தட்டுகள் உலர்ந்தும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். நீர் மற்றும்  தீவனத் தட்டுகள் மூலம் வான்கோழிகளில் காளான்கள் பற்றிக் கொள்வதைத் தடுக்க, திரையிடப்பட்ட மற்றும் ஏற்றிய நடைமேடையை அமைக்க வேண்டும். கழிவுநீர் தேங்கக்கூடாது. நல்ல காற்றோட்டம் தேவை. நோயுற்ற கோழிகளைப் பண்ணையிலிருந்து நீக்க வேண்டும். நோயின் தொடக்க நிலையில் மட்டுமே சிகிச்சை பயனளிக்கும். நோய் முற்றிய நிலையில் நுரையீரல் மற்றும் சுவாசப்பை பாதிக்கப்படும். மேலும் சிகிச்சையும் பயனளிக்காது.

சிகிச்சை முறைகள்

ஆம்போடெரிசன்-பி, 5-ஃப்ளுரோசைடோசின், கீடோகோனசோல் போன்ற மருத்துகளால் பூசணங்களை அழிக்க வேண்டும். ஆழ்கூளத்தில் நிஸ்டேட்டின் மற்றும் காப்பர் சல்பேட்டைப் பயன்படுத்தினால் காளான் வளர்ச்சியைக் குறைக்கலாம். பாதிக்கப்பட்ட கோழிகளின் தீவனத்தில், 100 கிலோவுக்கு 60 கிராம் என்னுமளவில் காப்பர் சல்பேட்டைக் கலந்து 6 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். குடிநீராக 1:2000 காப்பர் சல்பேட் நீர்க்கரைசலை அளிக்க வேண்டும். டெட்ராசைக்கிலின் என்னும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 200 மி.கி. வீதம் ஐந்து நாட்களுக்கு அளிக்க வேண்டும்.

கேண்டிடியாஸிஸ் (மொனிலியாஸிஸ், கோழிக்கால் பூசணக்கட்டி நோய்)

இந்நோய் 200 துணை வகைகளைக் கொண்ட கேண்டிடா என்னும் பேரினத்தால் ஏற்படும். இவற்றில், 6 துணை வகைகள் அடுத்தடுத்துத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவை. இவற்றில் கேண்டிடா ஆல்பிகன்ஸ் குறிப்பிடத்தக்க துணை வகையாகும்.

கோழிகள், நீர்ப்பறவைகள், வனப்பறவைகள் ஆகியன இந்நோயால் எளிதில்  பாதிக்கப்படும். சுகாதாரமற்ற சூழல், பலவீன நிலை, உடலின் மேற்பரப்பு மற்றும் ஆழமான நிலையில் நோய் ஏற்படும். முதிர்ந்த கோழிகளை விட, குஞ்சுகளின் செரிமானப் பகுதி மிகவும் பாதிக்கும். பறவைகளில் சுவாசக்குழாய் வழியாகச் சென்று பெருகி, நோயை ஏற்படுத்தும்.

எச்சத்திலிருந்து வரும் கிருமிகளால் பாதித்த தீவனம் மற்றும் நீரால் கேண்டிடா பரவும். கேண்டிடா வகைகள் பொதுவாக வாய், உணவுக்குழாயில் இருக்கும். ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் டி குறைபாடு, சுத்தமின்மை ஆகியவற்றால் இக்கிருமி நோயை உண்டாக்கும். தொடர்ச்சியாக ஆன்ட்டிபயாட்டிக்கைப் பயன்படுத்துவதால் பயனுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து விடும். இதனால் நோய் எதிர்ப்புத் திறன் குறையும்.

மூன்று வாரங்களுக்கு உட்பட்ட கோழிகளில் பாதிப்பு அதிகமாகும். பாதிக்கப்பட்ட கோழிகளில், வளர்ச்சியின்மை, சோர்வு, கழிச்சல், நீர் வறட்சி போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், இறப்பும் நிகழும். நோயுற்ற கோழிகளின் உடலில் அல்லது கோழித்தீனிப் பையில் கடுமையான நோய்க்குறிகள் காணப்படும். சில சமயங்களில், நரம்பு மண்டலம், சிறுநீரகம் அல்லது குடல் பகுதி பாதிக்கும்.

மேல் செரிமான மண்டல உட்சவ்வில் வட்டமான அரிமானப் புண்ணும், மற்ற பகுதியில் வெண்சவ்வுப் படிவும், திசு அழிவும் காணப்படும். கோழியின் செரிமான வயிற்றில், இரைப்பை மற்றும் குடல் பகுதியில் திசு மாற்றம் காணப்படும்.

சிகிச்சை முறைகள்

இக்கிருமி பலவகைப் பறவைகளைப் பாதிப்பதால், கூண்டு, தீவனம் மற்றும் நீர்த் தட்டுகளை உடனே கிருமி நீக்கம் செய்ய வேண்டும். குறித்த நேரக் கிருமி நீக்கமும், சிறந்த மேலாண்மையும் நோய்த்தடுப்புக்கு முக்கியம். மேலும், வைட்டமின் ஏ-யை அளிக்க வேண்டும். வினிகரை நீரில் கலந்து கொடுத்தால் செரிமான மண்டலம் அமிலமாகிப் பூஞ்சையை வளர விடாமல் தடுக்கும். கிலோர்ஹேக்சிடினை நீரில் கலந்து கொடுத்தால் கேண்டிடா வளர்ச்சியைக் கோழிப்பண்ணைகளில் தவிர்க்க முடியும். கடுமையாக நோயுற்ற கோழிகளுக்கு இட்ரகோனசோல், ஆம்போடேரிசின்-பி, நிஸ்டேட்டின், ஃப்ளுகோனசோல் போன்ற மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

தடுப்பு முறைகள்

ஒரு டன் தீவனத்தில் 100 கிலோ நிஸ்டேட்டின் அல்லது 2-3 பவுண்ட் காப்பர் சல்பேட்டைக் கலந்து 7-10 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். 5 பிபிஎம் குளோரினை நீரில் கலந்து கொடுக்க வேண்டும். மேலும், சிறந்த மேலாண்மை, காளான் தடுப்பான்களைத் தீவனத்தில் கலந்து கொடுப்பது, சரியான முறையில் தீவனத்தைச் சேமிப்பது, சுத்தம் செய்வது, ஈரமான ஆழ்கூளத்தை அகற்றுவதன்  மூலம் நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

டேக்டிலெரியோஸிஸ் (பூஞ்சையால் ஏற்படும் மூளை ஒவ்வாமை நோய்)

இந்நோய் டேக்டிலெரியா கேலபோவா என்னும் பூஞ்சையால் ஏற்படும். இது 1-5 வாரக் குஞ்சுகளைப் பாதிக்கும். இப்பூசணக் கருக்கூடு காற்றின் மூலம் பரவுவதைக் குஞ்சுகள் சுவாசிக்கும் போது, சுவாசக்குழாயில் சென்று இரத்தத்தில் கலந்து மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும். நரம்பு மண்டலம் சார்ந்த நோயால் 3-20% இறப்பு ஏற்படும். பின்னிய கழுத்து, தற்காலிக வாதம், பார்வையின்மை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்ட குஞ்சுகளில் காணப்படும். மூளைப் பாதிப்பு, மற்ற நுண்ணுயிரி, நச்சுயிரியால் ஏற்படும் மூளைச்சவ்வு ஒவ்வாமை போன்ற நரம்புப் பாதிப்பு அறிகுறிகளும் காணப்படும். இந்நோய்க்குச் சரியான சிகிச்சை இல்லை. எனவே, குஞ்சுகளைக் கருக்கூடு பாதிப்பிலிருந்து தவிர்க்க, சிறந்த மேலாண்மை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ரோடோடுருலோஸிஸ் (பூசணத்தால் ஏற்படும் தோல் ஒவ்வாமை நோய்)

இந்நோய் ரோடோடுருலோ என்னும் ஓரணு உயிரியால் ஏற்படும். இந்த உயிரி கோழி, புறாக்களின் எச்சத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. இது, இறைச்சிக் கோழிகளில் தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேல் மூச்சுக்குழாயில் மற்றும் கோழித்தீனி சேகரிப்புப் பையில் இருக்கும் ஆஸ்பெர்ஜில்லோஸிஸுடன் ரோடோடுருலோவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தீவனச் சேகரிப்பு பையில் தீனியுடன் விரிவடையும் இவ்வுயிரி, கோழிகளில் திடீர் இறப்பை ஏற்படுத்தும்.

ஃபேவஸ் (வெள்ளைக் கொண்டை நோய்)

இது, மைக்ரோஸ்போரம் கேலினே, ட்ரைக்கோபைட்டான் ஸிமியை, மைக்ரோஸ்போரம் ஜிப்ஸியம் ஆகிய பூஞ்சைகளால் அவ்வப்போது ஏற்படும். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. இப்பூஞ்சையின் கருக்கூடு இடையீடு இல்லாத தோலின் வழியாகச் சென்று இறகின் கீழ்ப்பாகத்தில் வளர்ந்து நோயை உண்டாக்கும். கோழியின் கொண்டை, தாடி மற்றும் காலின் கீழ்ப்பகுதியில் திசு மாற்றத்தை ஏற்படுத்தும். நலமான கோழிகள் நோயுள்ள கோழிகளுடன் சேர்ந்து திரியும் போது இந்நோய் பரவும். எனவே, இதைத் தவிர்க்க, நோயுற்ற கோழிகளுடன் மற்ற கோழிகளைச் சேரவிடக் கூடாது. நோயுற்ற கோழிகளை 0.5% பெண்டோக்ளோரோபினாலில் கரைசலில் நனைத்து எடுக்க வேண்டும்.

டோருலோப்ஸிஸ் நோய்

இந்நோய் டொருலோப்ஸிஸ் க்லாப்ரேட்டா என்னும் பூஞ்சையால் ஏற்படும். இதன் பாதிப்புக் கோழிகளில் அரிதாகக் காணப்படும். முக்கியமாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த கோழிகளையே பாதிக்கும். நோயுற்ற கோழிகள் சோர்வாக, உண்ணாமல், சுருங்கிய இறகுகளுடன் காணப்படும். பிரேதப் பரிசோதனையில், கல்லீரல் பெரிதாகவும், மஞ்சள் முடிச்சுகளுடனும் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த, ஃப்ளூகோனசோல், கீட்டகோனசோல் மருந்துகளால் சிகிச்சையளிக்க வேண்டும்.

மியுகார் மைக்கோஸிஸ்

இந்நோய் பெரியளவில் கோழிகளைத் தாக்குவதில்லை. மியுகார், பெனிஸிலின், ஆஸ்பெர்ஜில்லோஸிஸ் நோய், கிருமிகளால் பாதித்த ஆழ்கூளத்தில் இருந்தே பரவும். இதனால் காற்றறை, மூளை மற்றும் நுரையீரல் பாதிக்கும். சில சமயங்களில் குடல் பகுதி, தோல் மற்றும் உறுப்புகளும் பாதிக்கும். இதனைத் தவிர்க்க, கிருமியால் பாதித்த ஆழ்கூளத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். 33% பொட்டாசியம் ஐயோடைடு கலந்த கரைசலைக் கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

க்ரிப்டோகாகோஸிஸ் (ஓரணு உயிரி மூளை ஒவ்வாமை நோய்)

இது, க்ரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படும். இந்நோய் விலங்கு, பறவை மற்றும் மனிதர்களைப் பாதிக்கும். நோயரும்பும் காலம் ஒரு வாரமாகும். இப்பூஞ்சை கோழியெரு இருக்கும் மண்ணில் வளரும். இது கோழிகளில் நோயை ஏற்படுத்தாது. புறாக்களின் எச்சத்திலிருக்கும் கருக்கூட்டைக் காற்றின் வழியாக மனிதர்கள் சுவாசிக்கும் போது உட்சென்று நோயை உண்டாக்கும். மூளை ஒவ்வாமை, மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, இரத்தச்சோகை, காய்ச்சல், இருமல், கழிச்சல், எடைக்குறைவு, பக்கவாதம், போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்கு உகந்த சிகிச்சை இல்லை. எனவே, சிறந்த மேலாண்மை மூலம் நோய்த் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஹிஸ்டோபிலாஸ்மோஸிஸ்

இது, ஹிஸ்டோபிலாஸ்மோஸிஸ் கேப்ஸுலேட்டம் என்னும் பூஞ்சையால் ஏற்படும். கோழி மற்றும் வான்கோழிகளை ஒப்பிடும்போது வனப்பறவைகளில் இதன் தாக்கம் அதிகம். சிதைந்த பறவை அல்லது வெளவாலின் எச்சம் பட்ட மண், பூஞ்சை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். மனிதர்கள் சுவாசிக்கும் போது காற்றிலிருந்து கருக்கூடு உட்செல்வதால் நோய் உண்டாகும். இதனால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் எவ்வித அறிகுறியும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்போடெரிஸின் அல்லது அசோல் வகை மருந்தால் சிகிச்சை யளிக்க வேண்டும்.

நோய் வருவதற்கு முன்பே தடுக்க வேண்டும். இந்நோய்க்குத் தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே, சிறந்த மேலாண்மை, சுற்றுப்புறச் சுகாதாரம், கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு, சிறந்த நோய்ப் பகுப்பாய்வுச் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளால் பூசண நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.    


பூசண நோய் Sowmiya

பு.வெ.சௌமியா,

ப.சுமிதா, க.ரம்யா, கு.சுகுமார், கால்நடை நுண்ணுயிரியல் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!