எச்.ராஜாவின் இந்த முகம் எத்தனை பேருக்குத் தெரியும்?

PB_H.Raja

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

வித்தியாசமான அரசியல்வாதியாக, தமிழக அரசியலில் தன்னை அடையாளப்படுத்தி இருப்பவர். மனதில் படுவதை ஒளிவு மறைவின்றிப் பொது வெளியில் எடுத்துப் போடுபவர். விளைவுகள் குறித்து ஒருநாளும் கவலைப்படாதவர். எதைச் சொன்னாலும், அதில் செறிவான கருத்துகளும், அவருடைய ஆழ்ந்த அறிவும் இழையோடி இருக்கும். அதனால் தான், அவருடைய கரடுமுரடான பேச்சை எதிர்க்கும் எவரும், அவரின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

இது அவரின் சிறப்பான குணம் என ஒரு சிலர் பாராட்டினாலும், சொந்தக் கட்சிக்குள்ளேயும் அவரை எதிர்ப்பவர்கள் பலர் உண்டு. ஆனாலும், அவருடைய காட்டமான பேச்சை எதிர்க்கும் சொந்தக் கட்சியினர், ஒருநாளும் அவருடைய கருத்துகளை எதிர்த்ததில்லை.

நல்ல வருவாயை ஈட்டித் தரும் பட்டயக் கணக்காளர் படிப்பையும், சட்டப் படிப்பையும் படித்திருந்தாலும், அவற்றைச் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு பொருளீட்டும் பெருநாட்டம் அவரிடம் இல்லை. மக்கள் பணி நாட்டம் மனதில் பூக்க, முழு நேர அரசியல்வாதியாக மணம் பரப்பி வருகிறார் எச்.இராஜா.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் சேவையைத் தொடங்கி, பின் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்து, சீராக உழைத்துப் படிப்படியாக உயர்ந்து, அரசியலில் தனக்கெனத் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். கட்சியின் தேசியச் செயலாளர் பதவி, தன்னைத் தேடி வரும் அளவுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டவர்.

காரைக்குடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். முள்ளுக்கு முள்ளாகவும், மலருக்கு மலராகவும் விளங்கி, தமிழகத்தில் பரபரப்பாக இயங்கி வரும் எச்.இராஜாவின், இன்னொரு முகம் யாரும் அறியாதது.

வெளியே சென்றால் பளபளப்பான அரசியல்வாதி; வீட்டுக்குள் நுழைந்தால், சாதாரண விவசாயி. முதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்து வந்த இவர், இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட பசுக்களைத் தனது தோட்டத்தில் அன்புடன் வளர்த்து வருகிறார்.

இதை அறிந்தபோது, இப்படியும் ஒரு அரசியல்வாதியா என வியப்பு மேலிட்டது. அதனால், பச்சை பூமியின் வி,ஐ.பி. விவசாயம் பகுதியில், எச்.இராஜாவின் விவசாய அனுபவங்களை வெளியிட விரும்பினோம்.

இதற்காக, அவரிடம் பேசினோம். அப்போது, “காரைக்குடிக்கு அருகிலுள்ள கண்டனூர் தான் எனது ஊர். அங்கே தான் எனது தோட்டம் உள்ளது. அதில் தான் மாட்டுப் பண்ணையும் உள்ளது. வாருங்கள் பேசலாம்’’ என்று அழைத்தார்.

அதைத் தொடர்ந்து, காரைக்குடிக்கு அருகிலுள்ள கண்டனூருக்குக் காலை ஆறு மணிக்கே சென்று விட்டோம். அங்கே இருந்தவர்களிடம் எச்.இராஜாவின் தோட்டம் எங்குள்ளது என்று விசாரிக்க, அங்கிருந்த தைலமரத் தோப்புகளைக் காட்டி, அதற்குப் பின்னால் தான் தோட்டம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அந்தத் தைலமரக் காடுகளுக்கு இடையே பல பாதைகள் இருந்தன. அவற்றில் ஒரு பாதை வழியாக அவரது தோட்டத்தை நோக்கி, நாம் சென்று கொண்டிருக்க, அந்த அதிகாலை வேளையில், இன்னோவா கார் ஒன்று நம்மைக் கடந்து சென்றது. அதை, எச்.இராஜா தான் ஓட்டிச் சென்றார். இது வியப்பாகவும், அவரின் எளிமையைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அவரது தோட்டத்தை அடைந்தோம்.

அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், நம்மை யார் என்று விசாரித்து விட்டு, “ஐயா இப்போது தான் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்க, காரில் காரைக்குடிக்குப் போனார். நீங்கள்  வழியில் பார்த்திருக்கலாமே’’ என்றார். “ஆமாம் பார்த்தோம்’’ என்றதும், “ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்’’ என்றார். பொழுது போவதற்காக அவரிடம் பேசினோம்.

எளிமை

“காரை அவரே ஓட்டிச் செல்கிறாரே, டிரைவர் வரவில்லையா?’’ என்று கேட்டோம். அதற்கு அந்தக் காவலர், “வெளியூர் செல்வதற்கு மட்டும் தான் ஐயா டிரைவர் வைத்துக் கொள்வார். மற்றபடி, இங்கே காரைக்குடிக்கோ, கடைக்கோ, எங்கே போனாலும் அவரே தான் காரை ஓட்டிச் செல்வார். பாதுகாப்புக்கு அவருடன் காவலர்கள் செல்வார்கள். மற்றபடி அவரும் சரி, அவரது குடும்பத்தினரும் சரி, அவர்களின் வேலைகள் அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். மிகவும் எளிமையாக இருப்பார்கள்’’ என்றார்.

அப்படியே அவரது தோட்டத்துக்குள் சென்றோம். மலை வேம்பு மரங்கள், கொய்யா மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், காய்கறிச் செடிகள் நிறைந்து, கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அதற்குள் ஓலையில் வேயப்பட்ட பெரிய மாட்டுக்கொட்டகை இருந்தது. அதில் நிறைய மாடுகள், கன்றுகள், காளைகள் இருந்தன. அவற்றில் ஒரு பசு ஈனும் நிலையில் இருக்க, அதை கவனித்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

எச்.ராஜா Pachai boomi VIP Vivasayam H.Raja scaled

முதல் வேலை

அவர், “ஐயா காலையில் எழுந்ததும், நேரே இந்த மாடுகளைப் பார்க்கத் தான் வருவார். மாடுகள், கன்றுகளோடு கொஞ்ச நேரம் இருந்து விட்டுத் தான், அடுத்த வேலைகளைக் கவனிக்கப் போவார். மாடு, கன்று ஈனும் போது அவரே அதன் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வார். ஒரு சில நேரங்களில் பால் கறக்க ஆள் வரவில்லை என்றால், ஐயாவே பால் கறந்துடுவார்’’ என்று சொல்ல, பரபரப்பான அரசியல்வாதி, ஒரு தேசியக் கட்சியின் மூத்த தலைவர், இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என அறிந்த போது, மேலும் நமக்கு வியப்பாக இருந்தது.

அப்போது, எச்.இராஜாவின் கார் மீண்டும் தோட்டத்தை வந்தடைந்தது. காரை நிறுத்தியதும் அதற்குள் இருந்த காவலர்கள் இறங்கினர். அதற்குப் பின், டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கிய இராஜா, காரிலிருந்த காய்கறிப் பையையும் அவரே எடுத்துக் கொண்டு வந்தார். நம்மைப் பார்த்ததும் புன்னகைத்து விட்டு, “கொஞ்ச நேரம் இருங்கள், வந்து விடுகிறேன்’’ என்று கூறி விட்டு, வீட்டுக்குள் போனார்.

அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்து, நம்மிடம் பேசிக் கொண்டே மாட்டுக் கொட்டகையில் நுழைந்தார். நாமும், அவரைப் பின் தொடர்ந்தோம்.

பிறப்பு வளர்ப்பு

அப்போது அவர், “தஞ்சாவூருக்குப் பக்கத்திலுள்ள மெலட்டூர் தான் நான் பிறந்த ஊர். எங்க குடும்பத் தொழிலே விவசாயம் தான். என் அப்பா ஹரிகரன். அம்மா காமாட்சியம்மாள். அப்பா காரைக்குடி அழகப்பா உடற்கல்விக் கல்லூரியில் பேராசிரியர். நான் 1957 ஆம் ஆண்டு பிறந்தேன். எனக்கு நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். நான் பிறந்து 45 நாள் குழந்தையாக இருக்கும் போது, தஞ்சாவூரில் இருந்து காரைக்குடிக்கு வந்து விட்டோம்.

கமலைப் பாசனம்

காரைக்குடிக்குப் பக்கத்தில் இருக்கும் மாத்தூரில் எங்களுக்கு நன்செய், புன்செய் நிலம் இருந்தது. அதில் நெல், கேழ்வரகு போன்ற தானியங்களைக் கண்மாய்ப் பாசனத்திலும், காய்கறிகள், கீரை வகைகளைக் கிணற்றுப் பாசனத்திலும் பயிர் செய்து வந்தோம்.

கிணற்றுப் பாசனம் என்றால், அந்தக் காலத்தில் கமலைப் பாசனம். மாடுகளைக் கட்டி நீர் இறைப்போம். இப்போது இருப்பதைப் போல மின்சார மோட்டார் வசதியெல்லாம் அப்போது கிடையாது.

பால் பண்ணைத் தொடக்கம்

நான் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது தான், 25 பசுக்களை வைத்துப் பால் பண்ணையை ஆரம்பித்தோம். அப்போது வேலைக்கு ஆட்கள் கிடையாது. மாடுகளைக் குளிப்பாட்டுவது, பராமரிப்பது, பால் கறப்பது, சாணம் அள்ளுவது, கொட்டத்தைச் சுத்தம் செய்வது என, எல்லா வேலைகளையும், நான் உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் செய்வோம்.

நேரடி விற்பனை

தனியார் பால் பண்ணைக்கோ, அரசாங்க சொசைட்டிக்கோ பாலைக் கொடுக்க மாட்டோம். நாங்களே பாலைக் கறந்து எடுத்து, வீடு வீடாகச் சென்று கொடுத்து விடுவோம். ஏனெனில், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்வதால் வசாயிகளுக்கும் நல்ல இலாபம் கிடைக்கும். நுகர்வோருக்குத் தரமான பொருளும் கிடைக்கும். அப்போது நான் சிறுவனாக இருந்ததால், வீடு வீடாகச் சென்று பாலைக் கொடுக்கும் வேலையை செய்து வந்தேன்.

கணக்கு அலுவலர் பணி

பின், பள்ளிப்படிப்பை முடித்து, பட்டயக் கணக்காளர் படிப்பையும் முடித்து, 1980 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோல் இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் கணக்கு அலுவலராகச் சேர்ந்தேன். சுமார் நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, மீண்டும் காரைக்குடிக்கே வந்து விட்டேன்.

மீண்டும் பால் பண்ணை

அதைத் தொடர்ந்து 1997 இல் இந்தத் தோட்டத்தை வாங்கினேன். இது மொத்தம் ஆறு ஏக்கர். இதில் ஜெர்சி, பிரிசியன் போன்ற நூறு கலப்பினப் பசுக்களை வைத்துப் பால் பண்ணையை நடத்தினேன். சுமார் நான்கு பேர் அப்போது வேலைக்கு இருந்தனர். தினமும் 300 முதல் 350 லிட்டர் பால் வரும். பாலைக் கறந்து, வீட்டிலேயே பாக்கெட்டுகளில் அடைத்து, நேரடியாக வீடுகளுக்குச் சென்று கொடுத்து விடுவோம். அப்போது இந்த வேலையைச் செய்ய, டாடா ஏஸ் வாகனம் ஒன்றை வைத்திருந்தேன். அதை, நான் தான் ஓட்டிச் செல்வேன்.

அப்போது எல்லோரும், என்ன நீங்கள் வண்டி ஓட்டுகிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்களிடம், நம்முடைய வேலையை நாம் தானே செய்ய வேண்டும் என்பேன். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வேலைக்கு ஆட்கள் வரவில்லை என்றால், பாலைக் கறப்பது, மாடுகளைக் குளிப்பாட்டுவது என எல்லா வேலைகளையும் நானே செய்வேன். இரண்டு மணி நேரத்தில் சுமார் 15 மாடுகளில் பால் கறப்பேன். இப்போதும் தேவை ஏற்பட்டால் பால் கறப்பேன்.

வில் வண்டி

இப்போது தான் பைக், கார் போன்ற வாகன வசதிகள். அந்தக் காலத்தில் எல்லாம் மாட்டு வண்டிகள் தான். அப்போதே எங்களிடம் டயர் வண்டி, கட்டை வண்டி, வில் வண்டி என எல்லாம் இருந்தன. காரைக்குடி டவுனில் நான் வண்டி ஓட்டிச் செல்லாத இடமே இருக்காது. கோயிலுக்குச் செல்வது, காய்கறிகள் வாங்கச் செல்வது எல்லாமே அந்த வண்டிகளில் தான். அந்த வண்டிகளுக்காக மூன்று ஜோடி தஞ்சாவூர் மோளா காளை மாடுகளை வைத்திருந்தோம்’’ என்றவர், அங்கே ஈனுவதற்குத் தயாராக இருந்த மாட்டைச் சிறிது நேரம் பார்த்தார்.

கைமாறிய விவசாயம்

அதைத் தொடர்ந்து, அங்கிருந்த காளை மாடுகளைப் பார்த்து அவற்றை வாஞ்சையோடு தடவிக் கொடுத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார். “அடிப்படையிலேயே விவசாயக் குடும்பம் என்பதால், எனக்கு விவசாய வேலைகள் அனைத்தும் அத்துபடி. மாடுகளைப் பூட்டி ஏர் உழுவது, நெல் அடிப்பது என, எல்லா வேலைகளையும் செய்வேன். அரசியல் பணிகளில் தீவிரமாக நான் ஈடுபட்டதை அடுத்து, எனது மனைவி லலிதா, பண்ணையையும், தோட்டத்தையும் பார்த்துக் கொண்டார். மாடுகள் என்றால் என்னைப் போல் அவருக்கும் உயிர்.

மண்புழு உரம்

எங்களிடம் இத்தனை மாடுகள் இருப்பதால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம், மண்புழு உரம் தயாரிப்புப் பயிற்சியை எடுத்து, மண்புழு உரம் தயாரிக்கும் பணியையும் தொடர்ந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மண்புழு உரம் தயாரிப்பைப் பெரியளவில் செய்து வந்தார்.

நாட்டுப் பசுக்கள்

இப்போது இங்கே, கிர், சாகிவால், தார்பார்க்கர், காங்கேயம், பூரணி போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் உள்ளன. இனவிருத்திக்காகக் காங்கேயம் காளை மாடுகளும் உள்ளன. மாடுகளுக்குத் தேவையான புல் வகைகள், காய்கறிகள், மாமரங்கள், கொய்யா மரங்கள், தென்னை மரங்கள், சப்போட்டா மரங்களை வளர்த்து வருகிறேன். சுமார் ஆயிரம் மலை வேம்பு மரங்களும் உள்ளன’’ என்று கூறிக்கொண்டே, காய்கறித் தோட்டத்தில் நுழைந்தார்.

PB_H.Raja

சிகிச்சை

அங்கே பந்தலில் பாகற்காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கத்தரிக் காய்கள் முற்றிக் கிடந்தன. உடனே, அவற்றைப் பறிக்கத் தொடங்கினார். அப்போது, மாடுகளைப் பராமரிக்கும் வேலையாள் ஒருவர் வந்து, ஒரு மாடு கால் குளம்பில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார். உடனே, தன்னுடைய செல்பேசியில் கால்நடை மருத்துவரை அழைத்து, விரைவாக வந்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார் எச்.இராஜா.

பின், கால்நடை மருத்துவர் வரும் தகவலை வேலையாளிடம் கூறியதுடன், அந்த மாட்டை மண்ணில் விட வேண்டாம் என்றும், மாட்டின் கால் மண்ணில் பட்டு விட்டால், அந்தக் குளம்பிலுள்ள புண் பெரியதாகி விடும் என்றும், அதைத் தனியாகக் கட்டி வைத்து நன்கு பார்த்துக் கொள்ளும்படியும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அங்கிருந்த மா, கொய்யா, சப்போட்டா, தென்னை மரங்களை எல்லாம் நம்மிடம் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்த எச்.இராஜாவிடம், “நாம் நாடு முழுவதும் எதிர்ப்பு, போராட்டங்கள் என வெடிக்கக் காரணமாக இருக்கும் வேளாண் சட்ட மசோதாக்களைப் பற்றிக் கேட்டோம்.

வேளாண் சட்டங்கள்

அதற்கு அவர், “விவசாய அமைப்புகளும் சங்கங்களும் தொடர்ந்து அரசாங்கத்திடம் வைக்கும் கோரிக்கை, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது தான். இந்நிலையில் தான், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நாடு முழுவதும் எங்கே வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று இந்தச் சட்டம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்டத்தில் ஒரு விஷயம் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது, விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்க முடியா விட்டால், அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம், அரசு கொள்முதல் மையங்களிலேயே விற்க முடியும். எனவே, இந்தச் சட்டம் எந்த விதத்திலும் விவசாயிகளைப் பாதிக்காது.

மேலும், எம்.எஸ்.சாமிநாதன் குழு, விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்திக்கு ஆகும் செலவை விட, ஒன்றரை மடங்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் மத்திய அரசு, அதை 1.95 மடங்காகக் கூட்டி அறிவித்துள்ளது.

பொய்யான பரப்புரை

மேலும், இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் குறித்து, தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொய்யான பரப்புரையைச் செய்து வருகின்றன. ஏனெனில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஒப்பந்தப் பண்ணைய முறை அமலில் இருந்து வருகிறது. உதாரணம் கறிக்கோழி வளர்ப்பு.

பல பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம், கறிக்கோழிக் குஞ்சுகளையும், அதற்குத் தேவையான தீவனம், மருந்துகளையும் கொடுத்து, வளர்க்கச் சொல்லி, கோழிகளாக வந்ததும், விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றன. இதெல்லாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்களிடம் தவறான தகவலைப் பரப்பி வருகின்றன.

விவசாய முதலீடு

மேலும், இன்று விவசாயிகளுக்கு இருக்கும் மிக முக்கியப் பிரச்னை, மற்ற தொழில்களைப் போல் விவசாயத்தில் முதலீடு இல்லாதது தான். ஆனால், மோடி அரசு, ஐந்து ஆண்டுகளில் சுமார் இருபத்து ஐந்து இலட்சம் கோடி ரூபாய் மூலதனத்தை, விவசாயத்தில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் மூலம், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் தான் விவசாயியுடன் ஒப்பந்தம் செய்ய முடியும். இதன் மூலம் தனியார் மூலதனம் அதிகமாக விவசாயத்தில் வரும். அதனால், விவசாயம் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்களும் விளை நிலங்களாக மாறும். எனவே, இதை விவசாயிகள் வரவேற்க வேண்டும்’’ என்றவரிடம், “விவசாயிகளின் வளர்ச்சிக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’’ என்று கேட்டோம்.

எச்.ராஜா DSC 3523 scaled

ஆலோசனை

அதற்கு அவர், விவசாயிகள், குறிப்பாகச் சிறு குறு விவசாயிகள், தங்களின் விளை பொருள்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதே சரியானது. இதனால் விவசாயிகளுக்கும் நல்ல இலாபம் கிடைக்கும். நுகர்வோருக்கும் கலப்படம் இல்லாத சுத்தமான பொருள்கள் கிடைக்கும். இது என் அனுபவத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நான் கூறும் ஆலோசனை’’ என்றவரிடம், நன்றியும் வணக்கமும் கூறி விடை பெற்றோம்.


மு.உமாபதி

படங்கள்: தேவகோட்டை சோ.சக்திவேல்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!