உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!

எள் HP 0aa105f91e589fa88a3c36066e01294c

றம்பொரு ளின்பமும் வீடும் பயக்க உறுதுணை யாவதா ரோக்கியமே!

இந்தியாவில் பெருமளவில் பயிராகும் சிறிய செடி வகையைச் சார்ந்தது எள் செடி. இச்செடி, 2 முதல் 3 அடி வரை உயரமாக வளரும். எள் செடியின் இலை, பூ, காய், விதை ஆகியன நமக்குப் பயன்படுகின்றன.

எள்ளுக்குத் திலம் என இன்னொரு பெயரும் உண்டு. எள் பூவின் புறவிதழ் 5 பிரிவுகளை உடையது. உள் இதழ் குழாயைப் போல இருக்கும்.

விதைக்கூடு நான்கு அறைகளுடன் இருக்கும். இந்த அறைகளில் எள் விதைகள் நிறைந்திருக்கும். இந்த எள் நமக்கு உணவாக, மருந்தாகப் பயன்படுகிறது.

எள் வகைகள்: எள்ளில், கறுப்பு, சிவப்பு, வெள்ளை என நிறத்தால் மூன்று வகைகள் இருப்பினும், காரெள், காட்டெள், மயிலெள், பேயெள், காட்டு மயிலெள், மலையெள், சிற்றெள் எனப் பல வகைகள் உள்ளன.

எள்ளும் அதன் எண்ணெய்யும் தான், அதிகளவில் உணவாக, மருந்தாகப் பயன்படுகின்றன. எள்ளில் 50-60 சதம் எண்ணெய் உள்ளது.

குணம்: எள், லேசான கசப்பும் துவர்ப்பும் கூடிய இனிப்புச் சுவையில் இருக்கும். சீரண நிலையில் கூட, இனிப்பாக மாறும் தன்மை உடையது.

இலை: சுத்தமான 1-2 இலைகளைக் குளிர்ந்த நீரிலிட்டு, கண்களைக் கழுவினால், வறட்சியும் உள்ளழலும் நீங்கும்.

ஒருபிடி இலைகளை 200 மில்லி குளிர்ந்த நீரிலிட்டு ஊற வைத்து, தினமும் இருவேளை என, ஏழு நாட்கள் குடித்தால், சீதக்கழிச்சல் குணமாகும்.

இலைகளைப் பதமாக வாட்டி, கட்டிகளில் வைத்துக் கட்டினால், அவை விரைவில் பக்குவமாகி, உடைந்து குணமாகும்.

பூக்கள்: சுத்தமான எள் பூக்களைப் பல்லில் படாமல் வாயிலிட்டு விழுங்க வேண்டும்.

இப்படி எத்தனை பூக்களை உண்ணுகிறோமோ, அத்தனை ஆண்டுகளுக்கு, கண்கள் தொடர்பான நோய்கள் வராது என்பது, சித்தர்கள் கண்ட அனுபவ முறை.

காயும் தோலும்: காயையும் தோலையும் உலர்த்திச் சுட்டுச் சாம்பலாக்கிப் புண்களில் தூவினால், நாளடைவில் இரணம் குணமாகும்.

உணவும் மருந்துமாக: எள்ளுப்பொடி சேர்ந்த சுடுசோற்றைச் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இசிவு வலி குணமாகும். இது, நல்ல பயனைத் தரக்கூடிய உணவுப் பக்குவ முறையாகும்.

வெல்லப் பாகுடன் எள்ளைக் கூட்டி, எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்ற பண்டங்களைத் தயாரித்து உண்டால், தன்னலம் பாராமல் பிறருக்காக உழைக்கும் மனப்பான்மை வளரும் என்பார்கள். அலையும் மனம் தன்னிலை பெறும்.

எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து, வாயில் வெகுநேரம் வைத்துக் குதப்பித் துப்பினால் வாய்ப்புண் ஆறும்.

எள்ளை மென்று குதப்பினாலும் நல்லெண்ணெய்யை வாயிலிட்டு விரலால் ஈறுகளைத் தேய்த்தாலும் வாய்ப்புண், உடல் சோர்வு நீங்கும்.

எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட, மூலத்தில் குருதிப் போக்கு நிற்கும். மலச்சிக்கல் அகலும். மூல வேதனை குறையும்.

எள் கலந்த உணவை உண்ண, நீரிழிவு நோயால் வெளியாகும் நீரின் அளவு இயல்பாகி, உடல் பலம் பெறும். அதாவது, எள்ளோதனம் என்னும் எள் கலந்த அரிசிப் பொங்கலைச் சாப்பிடலாம்.

மகளிருக்கு: மாதவிடாய்ச் சுழற்சி சரியாகாத பெண்களுக்கு, வயது வந்தும் பூப்படையாத கன்னியருக்கு,

மாதவிடாய்க் காலத்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்படும் மகளிர்க்கு, தாய்ப்பால் குறைவாக உள்ள தாய்மார்க்கு, எள்ளுடன் கூடிய உணவுகள் மிகுந்த பலனைத் தரும்.

எள்ளை ஊற வைத்த நீரைக் குடிக்க, உதிரச் சிக்கல் நீங்கும். எள்ளையும் கருஞ் சீரகத்தையும் நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க, உதிரச் சிக்கல் வலி குறையும்.

எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர்ந்த கொழுக்கட்டையைத் தொடர்ந்து உண்டு வந்தால் பூப்புச் சுழற்சி எளிதாகும்.

ஒரு பிடி எள்ளை இடித்துத் தூளாக்கி, வெந்நீரில் கலந்து அகண்ட பாத்திரத்தில் இட்டு, இதமான சூட்டில் இடுப்பு மட்டும் நனையும்படி உட்கார்ந்தால், சூதகக்கட்டு வலி நீங்கும்.

இதுவன்றி, எள் கஷாயத்தில் இடுப்பு, அடிவயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தும் பயன் பெறலாம்.

நன்கு சுத்தம் செய்த எள், கேழ்வரகு மற்றும் வெல்லத்தைச் சமமாகச் சேர்த்து இடித்துச் சாப்பிட்டு வர, தாய்ப்பால் சுரக்கும்.

உடல் நலம் பெற: காலையில் உடற் பயிற்சிக்குப் பின், ஒரு கோழி முட்டையை உடைத்துக் குடிக்க வேண்டும்.

பிறகு, அந்த ஓட்டுக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை நிரப்பி, அதை விழுங்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து அருந்தி வர, உடல் அழகும், வடிவும், உறுதியும் பெறும். முகத்தில் ஒளி வீசும்.

முருங்கைக் கீரையில் எள்ளையும் சேர்த்து அவித்து, பகல் உணவுடன் உண்ண, பித்த வாயுவால் ஏற்படும் மார்புவலி நாளடைவில் குணமாகும்.

கொசுவை ஒழிக்க: இரும்புத் தகட்டில் நெருப்பை வைத்து அதில் எள் பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவினால் புகை வரும். இப்புகை இருக்கும் இடத்தில் கொசுக்கள் வராது. இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் கொசுக்கள் ஒழியும்.

எள் குறித்த பிற குறிப்புகள்: எள்ளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், சீரணச் சிக்கல் ஏற்படும்.

சங்கீத விற்பன்னர்களின் குரல் கருவி பாதித்துக் குரல் வளம், மென்மை, இனிமையைக் குறைக்கும்.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. சீரண உறுப்புகள் பாதிக்கும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் எள் உணவை அதிகமாகச் சாப்பிட்டால் கரு அழிந்து விடும். கவனம் தேவை.

நாள்பட்ட பிணிகளுக்குத் தொடர்ச்சியாக மருந்தை உண்ணும் காலத்தில், கடுகு, நல்லெண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது. இதை மீறினால் உடலில் வறட்சி அதிகமாகி, நமைச்சல், அரிப்பு போன்ற தோல் பாதிப்புகள் உண்டாகும்.

குழந்தைகளின் சத்துப் பண்டம்: எள் 50 கிராம், வேர்க்கடலை 200 கிராம், பொட்டுக்கடலை 200 கிராம், கேழ்வரகு 200 கிராம், கோதுமை 200 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றைச் சுத்தம் செய்து, 250 கிராம் வெல்லம் சேர்த்து அரைத்தால் சத்துமாவு தயார்.

இந்த மாவைக் கொண்டு கஞ்சி, கொழுக்கட்டை, லட்டு உருண்டை எனப் பலவிதமான பண்டங்களைத் தயாரித்து, குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்கள் நலமும் அறிவும் மிக்கவர்களாக வளர்வார்கள்.

எள் துவையல் எதற்கும் நன்று. எள் சோறு மார்புக்கும் நுரையீரலுக்கும் நன்று. நலத்துக்கும் வன்மைக்கும், எள் உணவாகி, மருந்தாகி வளம் தரும்.


எள் Dr.Kumarasamy

மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!