தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

தென்னை HP 8 e1612564822690 9040bd14b2a16e1959119c9881600756

டுபயிர் சாகுபடி: தென்னந் தோப்புக்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும் போது, அந்தப் பகுதி தட்ப வெப்பம், மண், அந்த விளை பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தோப்புக்குள் 50 சத சூரியவொளி கிடைக்க வேண்டும்.

ஏழு வயதுக்குக் கீழுள்ள தோப்பு: அந்தந்தப் பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஐந்து ஆண்டுகள் வரை, ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழையைப் பயிரிடலாம். கரும்பு, நெல் போன்ற சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்.

7-20 ஆண்டு வயதுள்ள தோப்பு: இந்தக் காலத்தில், பசுந்தாள் உரம் மற்றும் நேப்பியர், கினியா புல் போன்ற தீவனப் பயிர்களைப் பயிர் செய்யலாம்.

இருபது ஆண்டுகளுக்கு மேலான தோப்புகளில், ஒரு பருவப் பயிர்களான, நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரை வள்ளி,

சிறுகிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசியைப் பயிரிடலாம். இரு பருவப் பயிரான வாழையில், பூவன், மொந்தனைப் பயிரிடலாம்.

பல்லாண்டுப் பயிர்களான, கோகோ, பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா மிளகு, ஜாதிக்காய், மற்றும் வனிலாவைப் பயிரிடலாம்.

இவற்றில், கோகோ, ஜாதிக்காய், வனிலா ஆகியன, பொள்ளாச்சி மற்றும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஏற்றவை.

வனிலாவைப் பயிரிட, நோய்த் தாக்குதல் இல்லாத நடவுத் தண்டைப் பயன்படுத்த வேண்டும். மேலும், நட்ட பின் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

பல பயிர் அமைப்பு: தென்னைக்குள் வாழை, சிறுகிழங்கு, வெண்டை ஆகியன, கிழக்குப் பகுதிக்கு ஏற்றவை. தென்னையில் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய், வனிலா ஆகியன மேற்குப் பகுதிக்கு ஏற்றவை.

தென்னைநார்க் கழிவு மட்குரம் தயாரித்தல்: தென்னை மூலம் கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப் படுகிறது.

இந்தப் பிரிப்பின் போது, மிகப்பெரிய அளவில் நார்க்கழிவு கிடைக்கிறது. இது, தென்னை நார்க்கழிவு எனப்படுகிறது.

நம் நாட்டிலுள்ள தென்னை நார் ஆலைகளில் இருந்து, 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து 5 இலட்சம் டன் நார்க்கழிவு கிடைக்கிறது. இதிலுள்ள மூலப் பொருள்களால், இது தோட்டக் கலையில் வளர் தளமாகப் பயன்படுகிறது.

இக்கழிவில் அதிகளவில் கரிமச் சத்து, தழைச் சத்து இருப்பதாலும், குறைந்த அளவில் உயிர்ச் சிதைவு இருப்பதாலும்; இன்று வரையில் தென்னை நார்க் கழிவு, விவசாயத்தின் முக்கியக் கரிமச்சத்து மூலமாகக் கருதப்படவில்லை.

எனவே, கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தைக் குறைக்க, லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவைக் குறைக்க, தென்னை நார்க் கழிவு மட்க வைக்கப் படுகிறது.

இதனால், உரச்சத்து அதிகரித்து, நார்க்கழிவு குறைந்து, அதிலுள்ள சத்துகளைத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாறுகிறது.

உரமாக மாற்றுதல்: மூலப் பொருள்களைச் சேகரித்தல்: நாரற்ற தென்னை நார்க்கழிவு, தென்னை நார் ஆலைகளில் இருந்து சேகரிக்கப் படுகிறது. நார்களை முதலிலேயே சலித்துப் பிரித்து எடுக்கலாம்.

அல்லது மட்க வைத்த பிறகு பிரித்து எடுக்கலாம். ஏனெனில், மட்காமல் இருக்கும் இந்த நார்கள், பிற கழிவுகள் மட்குவதைத் தாமதப்படுத்தும். எனவே, மட்க வைக்கும் போது, நார்களைப் பிரித்து எடுப்பது நல்லது.

இடம் தேர்வு செய்தல்: தென்னந் தோப்பில் அல்லது ஏதேனும் மர நிழலில் இடத்தைத் தெரிவு செய்தால் மிகவும் நல்லது.

ஏனெனில், மர நிழலானது, மட்கும் கழிவில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். தரை, நன்கு சமமாக இருக்க வேண்டும். சிமெண்ட் தரை மிகவும் உகந்தது.

உரக்குவியலை அமைத்தல்: இந்த முறையிலான மட்கச் செய்தல் காற்றின் உதவியால் நடக்கிறது. எனவே, நாம் குவியலைத் தரை மட்டத்துக்கு மேலே அமைக்க வேண்டும்.

இதில், குழி வெட்ட மற்றும் கான்கிரீட் தொட்டி அமைக்கத் தேவையில்லை. இதில், நாரற்ற தென்னைக் கழிவை, 4 அடி நீளம், 3 அடி அகலத்தில் நன்றாகப் பரப்ப வேண்டும்.

முதலில் நாரற்ற கழிவை 3 அங்குல உயரத்தில் பரப்பி, நன்றாக நீரைத் தெளித்து ஈரப்படுத்த வேண்டும்.

பிறகு, தழைச் சத்துள்ள ஏதேனும் ஒரு மூலப்பொருளை, உதாரணமாக, யூரியா அல்லது கோழிக் கழிவைச் சேர்க்க வேண்டும்.

யூரியாவைச் சேர்க்க நினைத்தால், ஐந்து கிலோ யூரியாவை, ஐந்து பாகமாகப் பிரித்துக் கொண்டு, அடுத்தடுத்த கழிவு அடுக்குகளில் ஒவ்வொரு பாகமாகச் சேர்க்க வேண்டும்.

கோழிக் கழிவைச் சேர்க்க நினைத்தால், ஒரு டன் நார்க்கழிவுக்கு 200 கிலோ கோழியெரு வீதம் சேர்க்க வேண்டும்.

யூரியாவை ஐந்து பாகமாகப் பிரித்ததைப் போல, இந்த 200 கிலோ கோழிக் கழிவைப் பிரித்து, நார்க் கழிவில் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டு: ஒரு டன் நார்க் கழிவைப் பத்துப் பாகமாகப் பிரிக்க வேண்டும்.

முதல் அடுக்கின் மேல் 20 கிலோ கோழியெருவைப் பரப்ப வேண்டும். அதற்கு மேல், நுண்ணுயிர்க் கலவைகளான புளூட்டஸ் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நுண்ணுயிர்க் கூட்டுக் கலவையை 2 சத அளவில் இட வேண்டும்.

இப்படி, தென்னை நார்க்கழிவு மற்றும் தழைச்சத்து மூலப் பொருள்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும்.

குறைந்தது நான்கடி உயரத்தில் அமைப்பது நல்லது. ஐந்தடிக்கு மேலே பரப்ப நினைத்தால், அதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

உயரத்தைக் கூட்டுவது, மட்கும் போது உருவாகும் வெப்பத்தைத் தக்க வைக்க உதவும். ஆனால், குறைந்த உயரமுள்ள குவியலில் உருவாகும் வெப்பம் வேகமாக வெளியேறி விடும்.

குவியலைக் கிளறி விடுதல்: இந்தக் குவியலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். இதனால், புதுக் காற்று உள்ளே செல்ல, அங்குள்ள பழைய காற்று வெளியேறி விடும்.

இந்த மட்க வைத்தல் காற்றின் உதவியால் நடைபெறுகிறது. ஏனெனில், மட்க வைக்க உதவும் நுண்ணுயிரிகள் இயங்க, பிராணவாயு அவசியம். எனவே, குவியலைக் கிளறி விடுதல், நல்ல காற்றோட்டம் கிடைக்க ஏதுவாகும்.

அல்லது, துளையுள்ள பழைய இரும்பு அல்லது பிவிசி குழாய்களைச் செங்குத்தாக அல்லது படுக்கை வசத்தில் குவியலில் புகுத்தி, காற்றோட்டம் கிடைக்கச் செய்யலாம்.

ஈரப்பதத்தைத் தக்க வைத்தல்: நல்ல தரமான உரத்தைப் பெற, தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைத்தல் அவசியம். மட்க வைத்தலுக்கு 60 சத ஈரப்பதம் அவசியம்.

அதாவது, மட்க வைக்கும் கழிவு எப்போதும் ஈரப்பதத்தில் இருக்க வேண்டும். அதேநேரம் கழிவில் இருக்கும் தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றிவிட வேண்டும்.

கழிவில் போதுமான ஈரப்பதத்தைப் பரிசோதிக்க, கையளவுக் கழிவை எடுத்து, இரண்டு உள்ளங் கைகளுக்கு இடையில் வைத்து அழுத்த வேண்டும். அப்போது நீர்க்கசிவு இல்லையெனில் இதுவே சரியான நிலையாகும்.

மட்கிய உரம் முதிர்வடைதல்: கழிவு மட்குவதற்கு ஆகும் காலம், கழிவைப் பொறுத்து மாறுபடும். எல்லாக் காரணிகளும் சரியான அளவில் இருந்தால், அறுபது நாட்களில் மட்கி உரமாகி விடும்.

கழிவு மட்குவதை, அதன் இயற்பியல் கூறுகளை வைத்து முடிவு செய்ய முடியும். முதலில், கழிவின் கொள்ளளவு குறைந்து, அதன் உயரம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கும்.

அடுத்து, மட்கிய கழிவின் நிறம் கறுப்பாகவும், அதன் துகள்கள் சிறியதாகவும் மாறியிருக்கும்.

அடுத்து, மட்கிய உரத்தில் இருந்து மண்வாசம் வரும். வேதி மாற்றங்களை ஆய்வுக் கூடத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதில், கரிமச்சத்து மற்றும் தழைச் சத்தின் விகிதம் 20:1 எனக் குறைந்து இருக்கும்.

ஆக்ஸிஜன் வாயு உட்கொள்வது குறைவாக இருக்கும். நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். பயிர்கள் எடுத்துக் கொள்ளும் சத்துகளின் அளவு அதிகமாக இருக்கும்.

மட்கிய உரத்தைச் சேகரிக்கும் முறை: மட்கிய உரத்தைச் சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும். கம்போஸ்ட் குவியலைக் கலைத்து, நிலத்தில் நன்றாகப் பரப்ப வேண்டும்.

இதனால், அதிலுள்ள சூடு தணிந்து விடும். பின்பு கிடைக்கும் மீதத்தையும் மறுபடியும் கம்போஸ்ட் படுக்கையில் இட்டு கம்போஸ்ட்டாகச் செய்யலாம்.

சேகரித்த உரத்தை நன்றாகப் பாதுகாக்க வேண்டும். அதாவது, காற்றும் நிழலும் உள்ள இடத்தில் குவியலாக இட்டு வைக்க வேண்டும்.

ஈரப்பதம் குறைந்தால், நீரைத் தெளித்து ஈரப்பதத்தைப் பாதுகாக்க வேண்டும்.

மட்காத மற்றும் மட்கிய தென்னைக் கழிவில் உள்ள சத்துகள்

லிக்னின்: மட்காத கழிவில் 30 சதம், மட்கிய கழிவில் 4.80 சதம் இருக்கும்.

செல்லுலோஸ்: மட்காத கழிவில் 26.52 சதம், மட்கிய கழிவில் 10.10 சதம் இருக்கும்.

கரிமச்சத்து: மட்காத கழிவில் 26 சதம், மட்கிய கழிவில் 24 சதம் இருக்கும்.

தழைச்சத்து: மட்காத கழிவில் 0.26 சதம், மட்கிய கழிவில் 1.24 சதம் இருக்கும்.

மணிச்சத்து: மட்காத கழிவில் 0.01 சதம், மட்கிய கழிவில் 0.06 சதம் இருக்கும்.

சாம்பல் சத்து: மட்காத கழிவில் 0.78 சதம், மட்கிய கழிவில் 1.20 சதம் இருக்கும்.

கால்சியம்: மட்காத கழிவில் 0.40 சதம், மட்கிய கழிவில் 0.50 சதம் இருக்கும்.

மக்னீசியம்: மட்காத கழிவில் 0.36 சதம், மட்கிய கழிவில் 0.48 சதம் இருக்கும்.

இரும்பு: மட்காத கழிவில் 0.07 சதம், மட்கிய கழிவில் 0.09 சதம் இருக்கும்.

மாங்கனீசு: மட்காத கழிவில் 12.50 சதம், மட்கிய கழிவில் 25 சதம் இருக்கும்.

துத்தநாகம்: மட்காத கழிவில் 7.50 சதம், மட்கிய கழிவில் 15.80 சதம் இருக்கும்.

கந்தகம்: மட்காத கழிவில் 3.10 சதம், மட்கிய கழிவில் 6.20 சதம் இருக்கும்.

கரிமச்சத்து: தழைச்சத்து: மட்காத கழிவில் 112:1 சதம், மட்கிய கழிவில் 24:1 சதம் இருக்கும்.

மட்கிய தென்னை நார்க் கழிவின் பயன்கள்: மட்கிய நார்க்கழிவை நிலத்தில் சேர்ப்பதால், மண்ணின் பண்புகள், உழவு ஆகியன மேம்படும்.

இது, மணற்பாங்கான மண்ணின் கடினத் தன்மையைக் கூட்டும். களிமண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தும். மண் துகள்களை ஒன்று சேர்த்து மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும்.

நீரைத் தக்க வைக்கும் தன்மை மற்றும் மண்ணின் ஈரப்பதம் கூடும். நார்க்கழிவை இடுவதால், 10-15 செ.மீ. மேல் மண் மற்றும் 15-30 செ.மீ. அடிமண் அடர்த்திக் குறையும்.

இந்த மட்கிய உரத்தில் அனைத்துத் தாவரச் சத்துகளும் இருப்பதால், இது செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றும். மட்கிய உரமாதலால், இது நிலத்திலுள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கும்.

அம்மோனியமாக்கல், நைட்ரேட்டாக்கல், நைட்ரஜன் நிலை நிறுத்தல் ஆகிய வினைகள், நுண்ணுயிரின் செயல் திறனால் அதிகமாகும்.

பயன்பாடுகள்: அனைத்துப் பயிர்களுக்கும் எக்டருக்கு 5 டன் மட்கிய நார்க்கழிவு தேவைப்படும். இதை விதைக்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

நாற்றங்கால், நெகிழிப் பைகள் மற்றும் மண் தொட்டிகளில் நிரப்பும் மண் கலவைகளில் இந்தக் கழிவை 20 சத அளவில் சேர்க்க வேண்டும்.

நன்கு வளர்ந்த தென்னை, மா, வாழை மற்றும் பழ மரங்களுக்கு, மரத்துக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.

வரைமுறை: இதைப் பணம் கொடுத்து வாங்கி நிலத்தில் இடுவது கடினம். எனவே, விவசாயிகள் சொந்தமாகத் தயாரித்து இடுவதே நல்லது.

மட்கிய நார்க்கழிவை வாங்கு முன், அது முற்றிலும் மட்கி விட்டதை அறிவதும், தரச்சான்றைச் சோதிப்பதும் அவசியம்.

நன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்த்தால், நிலத்தில் உள்ள சத்துகளைக் கிரகித்துக் கொண்டு சிதைவடையும். இதனால், நிலத்தில் வளர்ந்து வரும் பயிர்கள் பாதிக்கப்படும்.


தென்னை V.SANGEETHA

முனைவர் வி.சங்கீதா, முனைவர் நேதாஜி மாரியப்பன், முனைவர் மு.புனிதாவதி, வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர். முனைவர் பெ.மோகனா, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!