சாமை மற்றும் பனிவரகு சாகுபடி நுட்பங்கள்!

சாமை A closeup fo Samai millet with husk 0547f03438cf530bc99cf68ebc660d3d

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூலை

ந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவை நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும் மானாவாரிப் பகுதிகளில் பரவலாகப் பயிரிடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கம்பு, சோளம், மக்காச்சோளம் ஆகிய பயிர்கள், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் இறவை மற்றும் மானாவாரிப் பருவங்களில் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. குறு தானியங்களான தினை, சாமை, கேழ்வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியன, மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

மேலும், இவை மலைப்பகுதி மக்களின் முக்கிய உணவுப் பொருள்களாகவும் உள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளில் செய்யப்பட்ட தீவிர ஆராய்ச்சிகளின் பயனாக, கம்பு, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றில் வீரிய இரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதனால், சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறன் 32 விழுக்காடு உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், சோளம் 3.51 இலட்சம் எக்டரிலும், கம்பு 1.58 இலட்சம் எக்டரிலும், கேழ்வரகு 1.23 இலட்சம் எக்டரிலும், மக்காச்சோளம் 1.12 இலட்சம் எக்டரிலும், தினை 0.02 இலட்சம் எக்டரிலும், வரகு 0.13 இலட்சம் எக்டரிலும், சாமை 0.36 இலட்சம் எக்டரிலும், பிற சிறு தானியங்கள் 0.05 எக்டரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில், சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு 19.82 இலட்சம் எக்டரிலிருந்து 7.77 இலட்சம் எக்டராகக் குறைந்துள்ளது. ஆனாலும், இவற்றின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. உயர் விளைச்சல் இரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகிய ஆறு குறுந்தானியப் பயிர்கள், இந்தியாவில் 2.90 மில்லியன் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இப்பயிர்கள், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் வறண்ட மலைப்பகுதிகளிலும் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்கள் இன்றி நன்கு வளரக்கூடியவை.

மேலும், சாகுபடிச் செலவு குறைவாக இருப்பதாலும், சத்துகள், மற்ற தானியங்களில் உள்ளதைக் காட்டிலும் மிகவும் சிறப்பாக இருப்பதாலும், இப்போது இந்தத் தானியங்கள் பிரபலமடைந்து வருகின்றன. தமிழ்நாட்டில், கேழ்வரகு, சாமை போன்ற குறுந் தானியங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்குக் காரணம், இவற்றில் அடங்கியுள்ள சத்துகள் மட்டுமின்றி, இவை ஏழை மற்றும் மலைவாழ் மக்களின் முக்கிய உணவுப் பொருள்களாகப் பயன்படுவதே ஆகும்.

சாமை மற்றும் பனிவரகு சாகுபடி

சாமையும் பனிவரகும் மானாவாரியாகவே பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன. ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் மானாவாரியாகப் பயிரிட ஏற்றவை. சித்திரை மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் இறவையாகவும் பயிரிடலாம்.

கோடை மழையைப் பயன்படுத்தி, நிலத்தைச் சட்டிக் கலப்பையைக் கொண்டு ஆழமாக உழ வேண்டும். புழுதி உழவு முடிந்ததும் நிலத்தை நன்கு சமப்படுத்த வேண்டும். மேலும், மழைநீரைச் சேமித்து மண் ஈரத்தைக் காக்க, ஆழச்சால் அகலப்பாத்தி அல்லது பகுதிப் பாத்திகளை அமைக்க வேண்டும்.

எக்டருக்குப் பத்துப் பொட்டலம் அதாவது, 2 கிலோ அசோஸ்பயிரில்லம், இருபது பொட்டலம் அதாவது 4 கிலோ அசோபாஸை 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து விதைக்க வேண்டும். கடைசி உழவின் போது, எக்டருக்கு 12.5 டன் வீதம் தொழுவுரத்தை இட வேண்டும். மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில், எக்டருக்கு 88 கிலோ யூரியா, 126 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாசை இட வேண்டும். நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.

வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக் கடினப்படுத்தி விதைக்க வேண்டும். ஒரு சத பொட்டாசிய குளோரைடு கரைசலில், அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் வீதம் கலந்து, கலவையைத் தயாரித்து, அதில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு விதைக்க வேண்டும்.

நுண்ணுயிர் உரங்களை விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் 25 விழுக்காடு தழைச்சத்தைச் சேமிக்கலாம். ஒரு எக்டருக்குத் தேவையான விதையுடன் மூன்று பொட்டலம் அசோஸ்பயிரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிர்க் கலவையைக் குளிர்ந்த அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.

சாமை என்றாலும் பனிவரகு என்றாலும், எக்டருக்குப் பத்து கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை 25 x 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைப்புக் கருவியைப் பயன்படுத்தினால், பயிர் எண்ணிக்கை சரியாக அமைந்து, அதிக விளைச்சலும் கிடைக்கும்.

களையைக் கட்டுப்படுத்த, விதைத்த மூன்றாம் நாள், ஈரமிருக்கும் சூழலில், எக்டருக்கு முக்கால் கிலோ பென்டிமெத்தலின் என்ற களைக்கொல்லியைப் பயன்படுத்தலாம். பின்பு 20-25 நாட்களில் இடையுழவு அல்லது கைக்களை எடுக்க வேண்டும். கேழ்வரகுக்குத் தேவைப்பட்டால் 40 ஆம் நாள் கைக்களை எடுக்கலாம். இந்தத் தொழில் நுட்பங்களைக் கையாளுவதன் மூலம் சாமை மற்றும் பனிவரகில் விளைச்சலை அதிகரிக்கலாம்.


பெ.முருகன், மா.சுகந்தி, பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!