குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

குப்பை மேனி A View of kuppaimeni herbs fd514d425c164e0087917654b3eba58d

இக்கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2014

விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இடையூறாக இருக்கும், செடி, கொடி, புல் பூண்டு போன்ற தாவர வகைகள் களைகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் களைகளால் 20-40 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் களைகள் நீக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், இந்தக் களைகளில் சில, தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. அவையாவன: விரைவில் வளரக் கூடியவை. அதிகளவில் விதைகளை உற்பத்தி செய்யக் கூடியவை. அதிகளவில் மழைப்பொழிவு மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை.

விதை உறக்கம் என்பது பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதால், களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஓராண்டுக் களை விதைப்பு ஏழாண்டுக் களை எடுப்பு என்பார்கள். இதன் மூலம், களையைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்தை அறியலாம்.

களைகளை அகற்றப் பல வழிமுறைகளை மேற்கொண்டாலும் அதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகம். எனவே, மாற்று யோசனையாகக் களைகளை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தினால், இந்தக் களைகள் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தைப் பெற முடியும். அதாவது, களைகளை அகற்றுவதற்கு ஆகும் செலவு தவிர்க்கப்படுவதுடன் அவற்றின் மூலம் வருமானமும் கிடைக்கும்.

களைகளில் 30-40 விழுக்காடு, மருத்துவக் குணம் கொண்டவை. இதற்கு எடுத்துக்காட்டாக, நன்செய் நிலத்தில் முளைக்கும் கரிசலாங்கண்ணி, பொன்னாங் கண்ணி, வல்லாரை, ஆராக்கீரை ஆகியவற்றையும், தோட்டக்கால் நிலத்தில் முளைக்கும் குப்பைமேனி, அறுகம்புல், கண்டங்கத்தரி, கோரை, துத்தி, நெருஞ்சில், அரிவாள்மனைப் பூண்டு, துளசி, தூதுவளை ஆகியவற்றையும் கூறலாம்.

எனவே,

களைகளின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இந்த இதழில் குப்பைமேனியின் மருத்துவக் குணங்களைப் பற்றிக் காண்போம்.

குப்பை மேனியின் தாவரவியல் பெயர் Acalpha indica எனப்படும். குப்பைமேனி வேரை, நீரிலிட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி உண்டால், குடலிலுள்ள நாடாப்புழு மற்றும் நாக்குப்பூச்சி ஆகியன அகலும். இலையின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் மார்புச் சளி, இருமல், ஆஸ்துமா, மூட்டுவலி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவர, படுக்கைப் புண்கள் நீங்கும்.

இலைகளுடன் மஞ்சள் மற்றும் உப்பைச் சேர்த்து அரைத்துப் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் நீங்கும். இலைகளைச் சூரணமாக்கி 2.5 கிராம் அளவு எடுத்து, பசு நெய்யில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். குப்பைமேனி இலைச் சூரணத்தைப் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். மேலும், இந்தப் பொடியை மூக்குப்பொடியைப் போல் பயன்படுத்தினால் மூக்கின் வழியாக நீர் வடிந்து தலைவலி குணமாகும்.

எனவே, குப்பைமேனியைக் களையென்று அகற்றாமல் இதன் மருத்துவக் குணங்களைத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.


முனைவர் மு.சுகந்தி, முனைவர் பெ.முருகன், முனைவர் பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!