மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் Fish Waste e83d880e76dd61a42d9a010ee2bba10a

மீன் உணவு, நிறைவான சத்து மற்றும் சுவையுடன் இருப்பதால், இது, உலகளவில் மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் மீன் உணவுத் தேவை, பெருமளவில் மீன்களைப் பிடிக்கும் நிலைக்கு, மீனவர்களை இட்டுச் சென்றுள்ளது. இந்நிலை, மக்களின் தேவையைத் தீர்ப்பதுடன், அதிகளவில் மீன் கழிவையும் உருவாக்குகிறது.

எடுத்துக்காட்டாக, பல்வேறு மீன் பொருள்கள் தயாரிப்பால் 30-50% மீன் பாகங்கள் கழிவுகளாக நீக்கப் படுகின்றன. இவற்றை நேரடியாகக் குப்பைகளில் கொட்டுவதால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில் இந்தக் கழிவுகளை மறு பயனுக்குக் கொண்டு வரலாம். இக்கழிவுகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட முறைகளில் நேர்த்தியும் விலை மதிப்பும் மிகுந்த பொருள்களாக மாற்றப் படுகின்றன.

மீன் உணவு உற்பத்தி ஆலைகள், மீன் விற்பனைச் சந்தைகள் மற்றும் மீன் இறங்கு தளங்களில், இவ்வகைக் கழிவுகள் தவிர்க்க முடியாதவை.

மேலும், இவற்றை மறு பயனுக்குக் கொண்டு வராமல், திறந்த வெளியில் கொட்டுவதால் கடலும் சுற்றுப்புறமும் மாசடைகின்றன. இவை மட்கும் நிலையில் இருந்தாலும், மட்கும் காலத்துக்குள் சூழல் மாசை ஏற்படுத்தும்.

மேலும், சுற்றி வாழும் மக்களுக்குக் கெட்ட நாற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே, அவற்றை மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்களாகத் தயாரித்தால் வருமானமும் கிடைக்கும்; அவற்றால் ஏற்படும் சூழல் மாசும் குறையும்.

வளர்ந்து வரும் நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் கடல் உணவின் பங்கு முக்கியமானது.

மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதன்மையாக விளங்கும் நம் நாடு, 2020-21 ஆம் ஆண்டில் 1.15 மில்லியன் மெட்ரிக் டன் மீன் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதைப் போல உருவாகும் கழிவும் அதிகமாகவே உள்ளது.

மீன் பதன ஆலைகளில் மீன்களை வகைப்படுத்தல், பிரித்தெடுத்தல், செதில், துடுப்பு, குடல், தலை, எலும்பு நீக்கம் ஆகியவற்றால் கழிவுகள் உருவாகின்றன.

மீனின் மொத்த எடையில் 30-50% கழிவாக ஒதுக்கப்படுகிறது. இந்தக் கழிவில் 58% புரதம், 19% கொழுப்பு, நீர், தாதுகள் அதிகமாக உள்ளன.

இவற்றைத் தவிர, மீன் கழிவில் இருந்து, பலவகை மருத்துவம் மற்றும் சத்துகள் நிறைந்த பொருள்களும் தயாரிக்கப் படுகின்றன. அவையாவன:

கொலாஜன் மற்றும் ஜெலாட்டின், கைட்டின் மற்றும் கைட்டோசன், மீன் உரம், மீன் புரத ஹைட்ரோ லைசேட், தாதுகள், மீன் எண்ணெய், விலங்கு உணவுகள், நிறமிகள்.

கொலாஜன் மற்றும் ஜெலாட்டின்: மீன் தோலில் கொலாஜன், ஜெலாட்டின் நிறைந்து இருப்பதால், அழகுப் பொருள்கள், உணவு மற்றும் உயிர்த் தொழில் நுட்பத் துறைகளில் பயன்படுகிறது.

பொதுவாக, ஜெலாட்டினைப் பன்றி மற்றும் பிற பாலூட்டி விலங்குகளில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். இப்போது மீன் தோலிலிருந்து பிரித்தெடுத்து வருகின்றனர்.

மீன் தோல் ஜெலாட்டினில் உறிஞ்சும் தன்மை அதிகமாக இருப்பதால், உணவு உற்பத்தியில் நிலைப்புத் தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

ஐஸ்கிரீம் உற்பத்தியில் ஐஸ் கட்டிகள் உருவாகாமல் இருக்க, ஜெலாட்டின் பயன்படுகிறது. நீரைத் தக்க வைக்கும் திறன் கூடுதலாக இருப்பதால், உலர்ந்த தோல்களை மென்மையாக்கும் கிரீம் தயாரிப்பில் பயன்படுகிறது.

மற்ற செயற்கைக் கோந்துகள் மற்றும் ஜெல்களில் இருப்பதை விட, கொலாஜென் ஜெல்லில் நச்சுத் தன்மை குறைவாக உள்ளது.

ஜெலாட்டினில், கிளைஸின் – ப்ரோலின் – அலனின் அமினோ அமிலம் உள்ளது. இது, எதிர் ஆக்ஸிஜனேற்றப் பண்புள்ளது.

இவ்விரு புரதப் பொருள்களும் மருத்துவத் துறையிலும், உணவுத் துறையிலும் பெருமளவு ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

கைட்டின் மற்றும் கைட்டோசன்: கைட்டின் என்பது, உலகின் இரண்டாம் இடத்தில் காணப்படும் கூட்டுச் சர்க்கரை ஆகும். கைட்டின், பூஞ்சை மற்றும் ஈஸ்ட், சிங்கி இறால், நண்டு மற்றும் இறால்களின் ஓடுகளில் செறிந்து உள்ளது.

அவற்றில் இருந்து புரத நீக்கம், தாது நீக்கம் செய்வதன் மூலம், கைட்டின் பெறப்படுகிறது. மேலும், சில நுண்ணுயிரிகளின் நொதியால் இது பிரிக்கப் படுகிறது. இது, மருத்துவம் மற்றும் மருந்து உற்பத்தியில் பெரும் பங்காற்றுகிறது.

காயங்களில் கட்டுப் போடும் பொருள்களிலும், மூக்கு மற்றும் வாய்வழி மருந்து செலுத்தும் பொருள்களிலும் பயன்படுகிறது.

உணவு உற்பத்தியில் சுத்திகரிக்கும் பொருளாகப் பழ இரசங்களிலும், பாலிலும் பயன்படுகிறது.

அழகு மற்றும் சிகை அலங்காரப் பொருள்கள் தயாரிப்பில் கைட்டோசான் பயன்படுகிறது. கோழி உணவில் நார்ச்சத்தைக் கூட்டுவதற்குக் கைட்டின் பயன்படுகிறது.

மீன் உரங்கள்: மீன் கழிவுகளை நொதிக்க வைத்து, கொழுப்பு எண்ணெய் வகைகளைப் பிரித்து, அரைத்து உலர்த்தி, நிலம் மற்றும் மீன் குட்டை உரங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில், தாதுகள், கொழுப்பு, புரதம் செறிந்து இருப்பதால் நன்றாகச் செயல் படுகின்றன.

மீன் புரத ஹைட்ரோ லைசேட்: குறைந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மீன்கள் மற்றும் மீன் கழிவுகளில் இருந்து பெறப்படும் புரதம், மொத்தமாக ஹைட்ரோலைசேட் எனக் கூறப்படுகிறது.

அளவில் சிறிதாக இருப்பதால் சிறந்த துணைப் பொருளாக உணவு உற்பத்தியில் பயன்படுகிறது. மீன் கழிவுகள், நொதிகள் மூலம் செரிக்கச் செய்து ஹைட்ரோ லைசேட் பெறப்படுகிறது.

உணவு உற்பத்தியில் பாலுக்கு மாற்றுப் புரதமாக, சுவையூட்டியாக, மது உற்பத்தியில் நிலைப் படுத்தியாக, துணைப் புரதமாகப் பயன்படுகிறது. நுண்ணுயிர் வளர் ஊடகங்கள் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது.

தாதுகள்: மீனில் 30 சத எலும்புகள் உள்ளன. மீனின் சதையைப் பக்கவாட்டில் மேலும் கீழுமாக வெட்டி, நடுவிலுள்ள எலும்பு பிரிக்கப் படுகிறது.

மீன் எலும்பில் உள்ள தாதுகளைப் பிரித்து, நீரைச் சுத்திகரித்தல், எலும்பு சதைப் பொறியியல், உயிர் மருத்துவத் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப் படுகிறது.

மீன் கழிவான எலும்பில், கால்சியம், பாஸ்பரஸ் செறிவாக இருப்பதால் இது, சிறந்த தாது துணை உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. தாதுகள் அதிகமாக இருப்பதால் பல் மருத்துவத்தில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீன் எண்ணெய்

மீன் புரத ஹைட்ரோ லைஸேட் உற்பத்தியில் பிரிக்கப்படும் மீன் எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள துணைப் பொருளாகப் பயன்படுகிறது. மீனிலுள்ள நிறைவுறாக் கொழுப்பு எண்ணெய் சிறந்த மருத்துவப் பொருளாகும்.

நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் மிகுந்துள்ள மீன் எண்ணெய், உண்ணத்தக்க மருந்துப் பொருளாக விளங்குகிறது.

இந்த எண்ணெய், இதய அடைப்பு, இரத்தழுத்தம் மற்றும் புற்று நோய்க்குத் தீர்வாக, வருமுன் காக்கும் காரணியாகப் பயன்படுகிறது.

விலங்கு உணவுகள்

மீன் கழிவுகளில், புரதம், கொழுப்பு, தாதுகள் இருப்பதால், விலங்கின உணவு உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுகின்றன. முக்கியமாக, கோழித் தீவனத் தயாரிப்பில் இவற்றின் பயன்பாடு அதிகமாகும்.

மீன் உணவிலும் இவற்றின் பங்கு உண்டு. மீன் கழிவிலுள்ள கொழுப்பு எண்ணெய்களை நீக்கி விட்டு, அவற்றை நொதிக்க வைத்து உலர்த்தி, விலங்கின உணவில் புரதத் துணைப் பொருளாகச் சேர்க்கப் படுகின்றன.

நிறமிகள்

இயற்கையில் 600-க்கும் அதிகமான கரோட்டினாய்டு நிறமிகள் இதுவரை காணப்பட்டு உள்ளன. இறால்களில் இவ்வகை நிறமிகள் செறிவாக உள்ளதால்,

இறால் தலை, தோல், வால் ஆகியவற்றில் இருந்து இந்த நிறமிகளைப் பிரித்து, இயற்கை நிறமிகளாக மற்ற உணவுப் பொருள்களின் நிறமேற்றத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

கரோட்டீன், அஸ்டாசாந்தின், கேந்தாசாந்தின், லியுட்பீன் போன்றவை கடல் கணுக்காலிகளில் இருந்து பெறப்படும் நிறமிகள் ஆகும். இவை, இயற்கையிலேயே எதிர் ஆக்ஸிஜனேற்றப் பண்பு மிக்கவை.

மீன் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டு ஆலைகளில் உருவாகும் கழிவுகள், மிகக் குறைந்த அளவிலேயே மாற்றுப் பொருள்களாகப் பயன்படுத்தப் படுகின்றன.

இந்நிலை அதிகமானால், பொருளாதாரம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம்.


மீன் B.SIVARAMAN

முனைவர் பா.சிவராமன், த.சூர்யா, முனைவர் இரா.ஷாலினி, ச.சுந்தர், உ..அரிசேகர், இரா.ஜெயஷகிலா, மீன்தர உறுதிப்பாடு மற்றும் மேலாண்மைத் துறை, மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!