கலப்படப் பாலும் உடல்நலக் கேடும்!

கலப்பட HP 8

லகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் சாப்பிடும் பாலின் அளவு 250-300 மில்லி தான். அகில இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, 500 மில்லி பாலை ஒவ்வொருவரும் பருக வேண்டும்.

பாலுற்பத்தியில் பின்தங்கியுள்ள அயர்லாந்து மக்கள் ஆண்டுக்கு 136 லிட்டர் பாலையும், பின்லாந்து மக்கள் 127 லிட்டர் பாலையும், உலகளவில் பாலுற்பத்தியில் இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்க மக்கள் 105 லிட்டர் பாலையும் சாப்பிடுகின்றனர். எனவே, பாலுற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாம் பாலைச் சாப்பிடுவதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும்.

பால் சரிவிகித உணவு மட்டுமல்ல, முழுமையான உணவுமாகும். இதில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்புகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில், எருமைப்பால் 55-60 சதமாகவும், பசும்பால் 45-50 சதமாகவும் உள்ளன.

பால் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதால் தான் இதில் கலப்படம் செய்கின்றனர். வளர்ச்சியடைந்து தன்னிறைவைப் பெற்றுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட, பாலில் கலப்படம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், வளர்ச்சியடையாத நாடுகளிலும் கலப்படம் செய்வது அதிகமாகவே உள்ளது. இதற்குக் காரணம், சட்டத்தை மதிக்கத் தவறுதல், அரசியல்வாதிகளின் குறுக்கீடு, அதிகாரிகளின் அலட்சியம், கடுமையான தண்டனையின்மை தான்.

கலப்படம் என்றால் என்ன?

நாம் அன்றாடம் அருந்தும் பாலில், நீர், ஸ்டார்ச், யூரியா, டிடெர்ஜெண்ட், சிந்தெட்டிக் மில்க், குளுக்கோஸ், வனஸ்பதி, பார்மலின், அம்மோனியம் சல்பேட், உப்பு, ஹைட்ரஜன் பர் ஆக்ஸைட், சோடா பை கார்ப், போரிக் பௌடர் ஆகிய பொருள்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. கலப்படம் என்றால், விற்பனை செய்யப்படும் பொருளில் வேறு பொருள்களைச் சேர்த்துத் தரத்தைக் குறைப்பது. அல்லது, அதிலுள்ள முக்கியமான சத்துகளை நீக்கிவிட்டு விற்பனை செய்வதாகும்.

இப்படிச் செய்வது ஏமாற்று வேலை. கலப்படத்தின் அளவைப் பொறுத்து, மதிப்புமிக்க பொருளின் தரம் குறைந்து விடுகிறது. கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் மக்கள், இதய நோய், சர்க்கரை நோய், குடற்புண், கண்ணில் சிக்கல் எனப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

கலப்படத்தின் வரலாறு

1820 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி பிரடெரிக் ஆக்கும் என்பவர், உணவிலும், குளிர் பானங்களிலும் டாக்சிக் மெடல் கலரிங் எனப்படும் நஞ்சு கலந்த நிறமிகள் கலந்துள்ளதைக் கண்டறிந்தார். 1850 ஆம் ஆண்டு ஆர்தர் ஹில் ஹாசால் என்பவர், தொடர்ந்து உணவில் கலப்படம் செய்யப்படுவதைக் கண்டறிந்தார். இதனால், அங்கே 1860 இல் உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப் பட்டது. 1895 ஆம் ஆண்டு ஜான் போஸ்ட் கேட் என்பவர், கலப்பட உணவைப் பற்றி மேற்கொண்ட ஆய்வின் பயனாக, உணவுக் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்பட்டு பரிசோதனைகளும் நடைபெற்றன.

இந்தியாவில் 2012 ஆம் ஆண்டில் தான் பாலைப் பரிசோதனை செய்தனர். அப்போது தான் பாலில் டிடெர்ஜெண்ட், நீர், கொழுப்பு, யூரியா ஆகியவற்றைக் கலப்படம் செய்துள்ளதாகக் கண்டுபிடித்தனர். பாலில் கலப்படம் செய்யப்படுவதை, இந்திய உணவுப் பாதுகாப்புத் துறையான food safety and standards authority of india (FSSAI) ஒத்துக் கொள்கிறது.

ஆனால், இதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றும் தெரியவில்லை. பொட்டல உணவுப் பொருள்களின் (packed foods) தரத்தை உறுதி செய்ய, ஒவ்வொரு பொட்டலத்திலும் FSSAI என்று பச்சை நிறத்தில் லேபிள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டம்.

பால் மாதிரி சோதனை

பால் மாதிரி சோதனைகள் இரண்டு வகைப்படும். ஒன்று, சட்டப்படி எடுக்கப்படும் legal sample. அடுத்தது, சாதாரணக் கண்காணிப்புக்காக (surveillance sample) எடுக்கப்படுவது. சட்டப்படி எடுக்கப்பட்ட ஆய்வு முடிவின் அடிப்படையில் தான் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கண்காணிப்பு ஆய்வு முடிவில் பாலின் தரம் குறைந்துள்ளது என்று தெரிந்தாலும் கூட, இதற்குக் காரணமானவர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்க முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் தான், பாலில் கலப்படத்தைத் தைரியமாகச் செய்கின்றனர்.

நடமாடும் பரிசோதனை இயந்திரம்

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையில் இமேட் (electronic milk adul teration tester) எனப்படும் நடமாடும் இயந்திரம் உள்ளது. பாலில் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதை இதன் மூலம் உடனே தெரிந்து கொள்ளலாம். சென்னை, மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மட்டுமே உணவு சோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

உணவுப் பொருளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகம் இருந்தால், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையின் commrfssatn@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலமும், 9440 42 322 என்னும் செல்பேசி எண் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.

உணவில் கலப்படம் செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனையை வழங்குவதுடன், அவற்றை இயங்க விடாமல் இழுத்து மூடினால் தான் கலப்படத்தில் ஈடுபடுவோர் அஞ்சுவார்கள். மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்.

உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சைனா. பல்வேறு துறைகளிலும் முதலிடத்தில் உள்ள இந்தச் சைனா தான் உணவுப் பொருள் கலப்படத்திலும் முதலில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான பாலில் மெலாமைன் (melamine) என்னும் பொருளைக் கலப்படம் செய்ததால் பல குழந்தைகள் இறந்து போனார்கள்.

அமெரிக்காவில் நடைபெற்ற சுவில் பால் ஊழலால் 1850 இல் நியூயார்க்கில் மட்டும் 8,000 குழந்தைகள் இறந்து போனார்கள். இந்தத் துயர நிகழ்வுக்குப் பிறகு தான், அமெரிக்காவில் உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

வளர்ந்து வரும் இந்தியா, வளர்ச்சிக் குன்றியுள்ள எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் உணவுப் பொருள்களில் கலப்படம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், இங்கெல்லாம் தேவையான சட்ட்டங்கள் இல்லாதது, தண்டனைகள் கடுமையாக இல்லாததே ஆகும். இதனால், மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.

கலப்படத்தால் விளையும் தீமைகள்

பார்மலின் என்பது (formalin), இறந்தவரின் உடல் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் பொருளாகும். பால் கெட்டுப் போகாமலிருக்க இதைப் பயன்படுத்துகின்றனர். பார்மலின் கலந்த பாலைக் குடித்தால், புற்றுநோய், தோல் நோய்கள், கண் நோய்கள் உண்டாகும். சிறுகுடலின் உட்பகுதி பாதிக்கப்பட்டு, குடற் புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தொடர்ந்து இந்தப் பாலைக் குடித்தால் சிறுநீரகம் செயலிழந்து போகும். 

ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen peroxide) என்னும் பொருள், பால் கெடாமல் இருக்கவும், பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் பயன்படுகிறது. இது கலக்கப்பட்ட பாலைக் குடித்தால், இதயத்துடிப்பு அதிகமாகும். கார்டியாக் அரிதீமியா (cardiac arryhtythemia) என்னும் இதயநோய் ஏற்படும். சிறுகுடலில் புண்கள் உண்டாகும்.

இது ஒரு ஆக்சிடன்ட்டாக (oxidant) இருப்பதால், விரைவில் முதுமைத் தன்மை உண்டாகி, வாழ்நாட்கள் குறைந்து விடும். பால் கெட்டியாக இருக்கவும், நுரைக்காகவும் சோப்பைக் கலப்படம் செய்கின்றனர். இந்தக் கலப்படப் பாலைக் குடித்தால், செரிமானச் சிக்கல்கள் ஏற்படுவதுடன், சிறுநீரகங்கள் சிதைக்கப்பட்டு விடும்.

ஆக்சிடோசின் (oxytocin) என்னும் ஹார்மோனைக் காதல் ஹார்மோன் (love hormone) என்பார்கள். தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கும், நஞ்சுக்கொடி வெளியேறவும், பால் சுரக்கவும் இந்த ஹார்மோன் அவசியம். இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதால், இந்த ஊசிமருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் பால் தேவைப்படுவோரின் வீடுகளுக்கே மாடுகளை ஓட்டிச் சென்று புத்தம் புதிதாகப் (on the spot farm fresh) பாலைக் கறந்து கொடுப்பார்கள். இப்படிப் பாலைக் கறப்பதற்கு முன், மாட்டின் தொடையில் இந்த ஆக்சிடோசின் ஊசியைப் போடுவார்கள். சிறிது நேரத்தில் மாட்டின் மடி பாலைச் சுரந்து விடும். உடனே பாலைக் கறந்து கொடுத்து விடுவார்கள்.

இப்படி ஆக்சிடோசின் ஊசி மூலம் கறக்கப்பட்ட பாலைக் குடித்தால், 8-9 வயது சிறுமிகள் கூட அதிக வளர்ச்சியைப் பெற்று வயதுக்கு வந்து விடுவார்கள். பதின்ம வயதிலுள்ள சிறுமிகளுக்கு, பெரிய பெண்களுக்கு உள்ளதைப் போல மார்பகங்கள் வளர்ந்து விடும். இதை ஆங்கிலத்தில் கைனகோ மாஸ்டியா (gynego mastia) என்பார்கள். இப்படி வளர்ந்து விட்டால் அறுவை சிகிச்சை செய்து தான் சரிப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு ஹார்மோன்கள் சீராகச் சுரக்காமல் (hormonal inbalance) போவதால் வளர்ச்சி தடைபடும். பெரியவர்களுக்கு கார்டியாக் அரிதீமியா போன்ற இதய நோய்கள் உண்டாகும். குறைந்த அல்லது அதிக இரத்தழுத்தம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாயில் சிக்கல் வரும். கண் மற்றும் சிறுநீரக நோய்கள் வருவதுடன், நினைவாற்றலும் குறைந்து போகும்.

மெலாமைன் (melamine) என்பது கல்லுப்பைப் போல இருக்கும். இது பிளாஸ்டிக் பொருள்கள், காயங்களுக்குப் பயன்படும் பிளாஸ்திரிகள், ஒயிட் போர்டுகள் (white board) தயாரிப்பில் பயன்படும் பொருளாகும். பாலில் நீரைக் கலப்பதால் ஏற்படும் நைட்ரஜன் சத்துக்குறையைச் சரி செய்வதற்காக இந்த மெலாமைன், பாலில் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால், சிறுநீரகக் கற்கள் தோன்றும்.

இந்தக் கற்களால் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படும். இதனால், சிறுநீர் உற்பத்தியில் பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் செயல்படாமல் போய்விடும். சிறுநீரில் இரத்தம் கலந்து வரும். சிறுநீரைக் கழிப்பதில் எரிச்சல் ஏற்படும். சில நேரங்களில் சிறுநீரே வராமல் போய்விடும். இதனால் இரத்தழுத்தம் அதிகமாகி, குழந்தைகள் இறக்க நேரிடும்.

பாலில் ஸ்டார்ச்சைக் கலப்பதால், வயிற்றுப்போக்கு ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தாக முடியும். யூரியா கலந்த பாலைக் குடித்தால், சிறுநீரகம் பாதிக்கப்படும். சோடியம் கார்பனேட், அம்மோனியம் பைகார்பனேட் கலந்த பாலைக் குடித்தால், ஹார்மோன் சுரப்பிகள் பாதிக்கப்படும். இதனால், உடல் வளர்ச்சியும், இனப்பெருக்கமும் பாதிக்கப்படும்.


கலப்பட Dr.Jegath Narayanan e1612953778555

டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,

மேனாள் மண்டல இணை இயக்குநர்,

கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம் – 636 008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!