வாசனைப் பயிர்களில் சிக்கனப் பாசனம்!

பயிர் cloves

வாசனைப் பயிர்களில் பாசனநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் உத்திகளை இங்கே பார்க்கலாம்.

கிராம்பு: இது, 6×6 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதற்கு, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பாசனம் அவசியம். மழைக் காலத்தில் வேர்ப் பகுதியில் நீர்த் தேங்கக் கூடாது. கிராம்புக்குச் சொட்டுநீர்ப் பாசனம் ஏற்றது.

கோடையில் நீராவிப்போக்கு அதிகமாக இருக்கும். எனவே, இக்காலத்தில் ஒரு செடிக்குத் தினமும் 76 லிட்டர் நீர் தேவைப்படும். நீராவிப்போக்குக் குறைவாக உள்ள போது, தினமும் 35-40 லிட்டர் தேவைப்படும்.

வறட்சியில் இருந்து பயிர்களைக் காக்க, நிலப்போர்வை அமைக்கலாம். இதற்கு, எளிதில் கிடைக்கும் தென்னை ஓலை, இலை தழை, வாழையிலை, தென்னை நார்க்கழிவு, கரும்புத்தோகை ஆகியன பயன்படும்.

இதனால், பாசனநீர் ஆவியாகாமல் பல நாட்களுக்கு நிலத்தில் இருந்து பயிர்களுக்குக் கிடைக்கும். மண்ணரிப்புத் தடுக்கப்படும்.

ஜாதிக்காய்: இதில் நல்ல வருவாய்க்குச் சீரான பாசனம் தேவை. காய் உருவாகும் பருவத்தில் பாசனத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது. ஜாதிக்காய் மரங்கள் 5×5 மீட்டர் இடைவெளியில் நடப்படுவதால் மேற்பரப்புப் பாசனத்தில் நீர் வீணாதல் அதிகளவில் இருக்கும். எனவே, சொட்டுநீர்ப் பாசனம் செய்தால் 40-50 சத நீரைச் சேமிக்கலாம்.

இவ்வகையில், தினமும் நீராவிப்போக்கு 7 மீ.மீ. அளவில் இருக்கும் போது, ஒரு செடிக்கு 53 லிட்டர் நீர் தேவைப்படும். நீராவிப்போக்குக் குறைவாக உள்ள போது, 25-30 லிட்டர் நீர் போதும். மேலும் நீரின் பயனைக் கூட்ட, நிலப்போர்வை அமைக்கலாம்.

மிளகு: மிளகுக்கொடி 2.5×2.5 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பாசனம் செய்ய வேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை 10 செ.மீ. ஆழ அளவில் பாசனம் தேவைப்படும்.

மழைக் காலத்தில் பாசனத்தை நிறுத்தி வைத்தால், பொதுவாகக் கிடைக்கும் விளைச்சலைப் போல் ஒன்றரை மடங்கு விளைச்சல் கூடுதலாகக் கிடைக்கும். கொடிகளைச் சுற்றி 75 செ.மீ. ஆழத்தில் எடுக்கப்பட்ட வாய்க்காலில் நீரை விட வேண்டும்.

மிளகுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் ஏற்றது. நீராவிப்போக்கு, தினமும் 7 மி.மீ. என இருக்கும் போது, ஒரு செடிக்கு தினமும் 13 லிட்டர் நீர் தேவைப்படும். நீராவிப்போக்குக் குறைவாக இருந்தால், தினமும் ஒரு செடிக்கு 5-7 லிட்டர் நீர் தேவைப்படும்.

சொட்டுநீர்ப் பாசனம்: அதிக இடைவெளியுள்ள தோட்டக்கலை மற்றும் வாசனைப் பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் ஏற்றது. கிடைக்கும் நீரைத் திறம்படச் செடிகளின் வேர்களில் நேரடியாக அளிப்பதால், நீர்க் கடத்தல் விரயம், நீராவிப்போக்கு போன்றவை குறைந்து நீர் மிச்சமாகும்.

வறட்சியில் பயிர்களைக் காக்க, சொட்டுநீர்ப் பாசனம் அவசியம். எத்தகைய நிலத்திலும் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைக்க முடியும். இதனால், வேலையாட்கள் தேவை குறைகிறது. மின்சாரச் செலவு குறைகிறது,

களை வளர்ச்சிக் கட்டுப்படுகிறது. பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் குறைகிறது. இரவு பகல் பார்க்காமல் எந்த நேரத்திலும் பாசனம் செய்ய முடியும். உரத்தைப் பாசனநீர் வழியாகக் கொடுக்கலாம்.

பண்ணைக்குட்டை: வாசனைப் பயிர்களைப் பாதுகாக்க, பண்ணைக் குட்டை அவசியம். நிலத்தின் தாழ்வான பகுதியில் இதை அமைத்தால், மழைக் காலத்தில் வழிந்தோடும் நீர் முழுதும் இங்கே தேங்கி நிற்கும்.

இந்த நீரை வறட்சியின் போது, டீசல் அல்லது மின் மோட்டார் மூலம் எடுத்து, சொட்டுநீர் அல்லது தெளிப்புநீர் முறையில் பயிர்களுக்குக் கொடுத்து முழு மகசூலை அடையலாம்.


பயிர் DR.M.PALANIKUMAR e1711602409428

முனைவர் மு.பழனிக்குமார், உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!