மலை வேம்பு!

மலை வேம்பு

லை வேம்பு மரத்தின் தாவரப் பெயர் மிலியா டுபியா ஆகும். இதன் தாயகம் இந்தியா. மூலிகை மரமான மலை வேம்பின், இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.

மலை வேம்பு 3-14 ஆண்டுகள் வரையில் பயன் தரும். 40-50 ஆண்டுகள் உயிர் வாழும். இம்மரம் வேகமாக வளரும். நீர் கொஞ்சமாக இருந்தாலும் போதும். மானாவாரியிலும் வளர்க்கலாம்.

மலை வேம்பு இலைகள், இறகைப் போல நீளமாக இருக்கும். குளிர் காலத்திலும், வறட்சிக் காலத்திலும், சில நேரங்களில் இலைகளை உதிர்க்கும். சீனா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளது.

மண் கண்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் 1.5 அடி கனத்திலும், மண் கண்டம் குறைவாக இருக்கும் இடத்தில் 2 அடி கனத்திலும் குழிகளை எடுக்க வேண்டும். 6×6 அடி இடைவெளியில் 1,200 கன்றுகளை நடலாம்.

மண்ணின் தன்மையைப் பொறுத்து, 35-60 அடி உயரம் வளரும். இதை நோயேதும் தாக்குவதில்லை. சில இடங்களில் வேரழுகல் ஏற்படும். ஆறடிக்கு மேல் வளர்ந்து விட்டால், பக்கக் கிளைகள் உண்டாகும். சிறிய கன்றுகளை வெட்டுக் கிளிகள் தாக்கும்.

மூன்று நான்கு ஆண்டுகளில் 600 மரங்களை வெட்டி, ஒரு மரம் ஆயிரம் ரூபாய் வீதம் விற்றாலும், ஆறு இலட்ச ரூபாய் வருவாயாகக் கிடைக்கும். 7-8 ஆண்டுகளில் அவற்றில் பாதியான 300 மரங்களை வெட்டி, ரூ.6,000 வீதம் விற்றால் ரூ.18 இலட்சம் வருவாயாகக் கிடைக்கும். 12-14 ஆண்டுகளில் மீதமுள்ள 300 மரங்களை, ரூ.10,000 வீதம் விற்றால் ரூ. 30 இலட்சம் வருவாயாகக் கிடைக்கும்.

மலை வேம்பு இலை, காய், விதை, பட்டை, கோந்து ஆகியன, பலவிதமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. இம்மரம் இழைப்புக்கு நன்றாக இருக்கும். அதனால், சட்டம், மரப் பொருள்கள், அலமாரிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஒட்டுப் பலகை, கனரக வாகனக் கூண்டுத் தயாரிப்பில் முக்கியமாக உள்ளது. விறகுக்கு, தீக்குச்சித் தயாரிப்புக்கு, அனல் மின்சாரத் தயாரிப்புக்கு, காகிதக் கூழ் தயாரிப்பில் பயன்படுகிறது.

வாழை, செடி வகைகள், கீரை வகைகள், மூலிகைச் செடி வகைகள், தானிய வகைகள், காய்கறி வகைகள் ஆகியவற்றை, மலைவேம்புத் தோட்டத்தில் 3-4 ஆண்டுகள் ஊடுயிராக இடலாம். சந்தனம், அகர் மரங்களையும் ஊடுமரமாக வளர்க்கலாம்.

மலை வேம்பைப் பயிரிட மத்திய அரசு 20 சதம் வரையில் மானியம் கொடுக்கிறது. இதிலும், பொய்மரம் உள்ளது. இதன் வளர்ச்சி மூன்று ஆண்டுகளில் முடிந்து விடும். எனவே, நம்பகமான இடத்தில் கன்றுகளை வாங்கி நட வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!