மண் புழுக்கள்!

மண் புழு

லகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில், உழவனின் நண்பன் எனப்படும் மண் புழுக்களும் அடங்கும். உலகெங்கிலும் 3,627 மண்புழு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், 67 பேரினங்களும், 10 குடும்பங்களின் கீழ் உள்ளன.

உருளையைப் போன்ற உடல் வளைய வடிவக் கண்டங்களால் ஆனது. இனத்துக்கு இனம், இந்தக் கண்டங்களின் அமைப்பும், எண்ணிக்கையும் வேறுபடும். உடலின் முதல் கண்டம் பெரிஸ்டோமியம் எனப்படும். இதில் வாய்ப்பகுதி உள்ளதால் வாய்க்கண்டம் எனவும் அழைக்கப்படும்.

பெரிஸ்டோமியத்தின் முன்னும் மேலேயும் புரோஸ்டோமியம் என்னும் சிறிய வளைவான கண்டமும், கடைசிக் கண்டத்தில் மலப்புழையும் அமைந்துள்ளன. மண் புழுவின் முன்பகுதியில் இருக்கும் 14-17 கண்டங்கள், மோதிரம் போலச் சற்றுத் தடித்து, மற்ற உடல் பகுதிகளை விட, சற்று வெளிர் நிறத்தில் காணப்படும். இப்பகுதி கிளைட்டெல்லம் எனப்படும்.

ஒவ்வொரு கண்டத்திலும் உடல் சீட்டாக்கள் உள்ளன. இவை இடப்பெயர்ச்சி உறுப்புகள். நெப்டீசியன்கள் கழிவு நீக்க உறுப்பாகும். ஒரே உயிரியில் ஆண் பெண் இன உறுப்புகள் இருப்பதால், மண்புழு, இருபால் உயிரியாகும். மண்புழுவின் வளர்ச்சி, கக்கூனில் இருந்து தொடங்கும். மண்புழுவின் வளர்ச்சியில், இலார்வா பருவம் கிடையாது.

நிலத்தை மேம்படுத்தும் மண் புழுக்களில் சிற்றினங்கள் பல உள்ளன. அவையாவன: லாம்பிட்டோ மாருதி. பெரியோனிக்ஸ் எக்ஸ்க வேட்டஸ். திராவிடா வீல்சி. யூரிடிலஸ் யூஜினியோ. ஈசீனியா போடிடா.

மேலும், உரப்புழுக்கள், சிவப்புப் புழுக்கள், இரவுப் புழுக்கள், தோட்டப் புழுக்கள் எனவும் வகைப்படுத்தி உள்ளனர். இவற்றின் வாழ்க்கை முறைகளைக் கொண்டு மேலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

எபிஜியிக் இனங்கள்: மண்ணின் மேற்பரப்பில் தாதுகள் நிறைந்த பகுதியில் வாழும் மேல்நிலைப் புழுக்கள்.

அனீசிக் இனங்கள்: மண்ணுக்குச் சற்றுக்கீழே, மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் சிறு வளைகளில் வாழும் இடைநிலைப் புழுக்கள்.

என்டோஜியிக் இனங்கள்: மண்ணுக்குள் பல மீட்டர் ஆழத்தில் கிடை மட்டமாகச் சிறு வளைகளை உண்டாக்கி வாழும் அடிநிலைப் புழுக்கள்.

மேலும், மண் புழுக்கள் உணவு அடிப்படையில், கழிவுண்ணி அல்லது மட்குண்ணி, மண் உண்ணி அல்லது மட்குண்ணி எனப் பிரிக்கப்படும். மேல்நிலை மற்றும் இடைநிலையில் வாழ்வது கழிவுண்ணி. அடியில் வாழ்வது மட்குண்ணி ஆகும்.


முனைவர் சு.சாந்தி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!