நலத்தின் அடையாளம் மண்பானை!

மண்பானை

ண்பானை, பாத்திரத்தின் தொடக்கம் எனலாம். நமது வாழ்க்கை முறையில் பல நூறு ஆண்டுகளாக, பல வகைகளில் மண் பானைகள் பயன்பட்டு வந்தன.

மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் இந்தப் பானைகள், நீர் மற்றும் பிற பொருள்களைச் சேமித்து வைக்கப் பயன்பட்டன. நமது அன்றாட வாழ்வில் நீரைக் குடிக்க, உணவைச் சமைக்க, மண்ணால் செய்யப்பட்ட கலயங்கள், பானைகள் பயன்பாட்டில் இருந்தன.

மேலும், முன்னோர்கள், பித்தளை, செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களையும் பயன்படுத்தினர். ஆனால், கால ஓட்டத்தில் நிகழ்ந்த நாகரிக வாழ்க்கையில் மண் பாண்டப் பயன்பாடு குறைந்து விட்டது.

ஆயினும், இன்றைய நாகரிக வாழ்வில் நிகழ்ந்து வரும் கசப்பான நிகழ்வுகளால், மீண்டும் பழைய வாழ்க்கை முறையைத் தேடிப் போகத் தொடங்கி உள்ளோம்.

மண் பானையில் சமைத்த உணவு, உடலுக்கு நன்மையாய் அமைகிறது. நல்ல நீர்ச் சுத்திகரிப்புக் கருவியாகச் செயல்படுகிறது. இது ஏழைகளின் குளிர் சாதனப்பெட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

நிலத்தடி நீரில் நம் உடலுக்குத் தேவையான தாதுப் பொருள்கள் உள்ளன. இவை, நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவுகின்றன. ஒரு மண் பானையில் நிலத்தடி நீரை 2-5 மணி நேரம் வைத்திருந்தால் அதிலுள்ள தீய பொருள்களை உறிஞ்சி நீரைச் சுத்தமாக்குகிறது.

ஆக, உலகத்திலேயே சிறந்த நீர்ச் சுத்திகரிப்பான் மண்பானை தான். ஆனால் அந்த தாதுப் பொருள்கள் இன்றைய சுத்திகரிக்கப்பட்ட நீரில் இருப்பதில்லை.

மண் பானையில் உள்ள நுண் துளைகள் வழியே தான் நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி, பானையின் வெப்பமும், பானை நீரிலுள்ள வெப்பமும், தொடர்ந்து ஆவியாவதால், பானைநீர் குளிர்ச்சியாகவே இருக்கிறது.

ஒரு மண் பானையில் இருக்கும் நீரின் வெப்பநிலை, அறை வெப்ப நிலையை விட ஐந்து டிகிரி செல்சியஸ் குறைவாகத் தான் உள்ளது. வெளிப்புற வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால், மண்பானை நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் தான் இருக்கும்.

கோடையில் மண்பானை நீர் சுவையாக, மணமாக இருக்க, வெட்டிவேர் அல்லது எலுமிச்சைப் பழத்தை இடுவார்கள். மேலும், நுண் கிருமிகளை அழித்து நீரைச் சுத்தப்படுத்த, கைப்பிடி தேற்றான் கொட்டைகளை வெள்ளைத் துணியில் கட்டிப் போடலாம். வாரம் ஒருமுறை அல்லது நீரை மாற்றும் போது, புதிதாகத் தேற்றான் கொட்டைகளை இடலாம்.

முதன் முதலில் மண்பானை நீரைக் குடிக்கும் போது, தொண்டைக்கட்டு, சளி, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றால் அவதிப்பட நேரலாம். இதை நினைத்து, மண்பானை நீரைத் தவிர்க்கக் கூடாது.

மேலும், இவற்றைச் சரி செய்ய, தாளிசாதிச் சூரணம், திரிகடுகச் சூரணம், கதிராலி கூலிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

மண்பானைச் சமையலை அடிக்கடி சூடுபடுத்தத் தேவையில்லை. சீரான வெப்பம் நெடுநேரம் இருப்பதால் தான், மண்பானை உணவு, நீண்ட நேரம் கெடாமல் இருக்கிறது.

மேலும், மண் பானைகளில் உள்ள நுண் துளைகள் மூலம், நீராவியும் காற்றும், உணவில் ஒரே சீராக ஊடுருவும். எனவே, உணவு சுவையாக இருப்பதுடன், எளிதில் செரித்து உடல் நலத்துக்கும் உதவுகிறது.

மண்பானைச் சமையலில் உப்பும், புளிப்பும் எந்த வினையும் அடைவது இல்லை. ஆனால், மற்ற பாத்திரங்களில் சமைக்கும் போது, இவை எதிர்வினை புரிந்து நமது நலத்துக்குக் கெடுதலைச் செய்கின்றன.

என்ன தான் சில்வர் பாத்திரங்களில் சமையல் செய்தாலும், அது மண்பானைச் சமையலுக்கு ஈடாகாது. அதன் வெளிப்பாடு தான், இப்போது, மண்பானைச் சமையல், உரலில் அரைத்த மசால் குழம்பு என்னும் விளம்பரங்கள்.

இந்த இடங்களைத் தேடிப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. மண் பானைகள், கொள்கலனாக மட்டுமின்றி அழகுப் பொருளாகவும் பயன்படுகின்றன.

நாகரிகம் எனக் கருதி, பானையின் உள்ளும் புறமும் வண்ணம் பூசுகின்றனர். கடம் என்னும் இசைக் கருவியாகவும் மண்பானை பயன்படுகிறது.

மண்பானை உணவைச் சாப்பிடுவோர் நோயில்லாமல் வாழ்கின்றனர். அதனால் தான், அக்காலப் பெண்கள் 5-10 குழந்தைகளைப் பெற்றும் நலமாக வாழ முடிந்தது. வயதானவர்கள் கூட, கண்ணாடி அணியாமல், சுறுசுறுப்பாக வாழ்ந்து உள்ளனர்.

பானை வகைகள்

அஃகப்பானை, தானியச் சேமிப்புக்குப் பயன்படும். அடிசிற்பானை, சமையலுக்குப் பயன்படும். உரிப்பானை என்பது, கயிற்றில் கட்டித் தொங்க விடப்படும் பானை. இதில், வெண்ணெய், தயிர் போன்ற பொருள்கள் வைக்கப்படும்.

ஓர்மப் பானையைத் தட்டினால் நன்கு ஒலி எழும்பும். ஓவியப் பானை என்பது, வண்ணம் தீட்டப்பட்டது. கஞ்சிப்பானை என்பது, கஞ்சியை வடிக்க ஏதுவாக, அகன்ற வாயை உடையது. கூழ்ப்பானை என்பது, கூழைக் காய்ச்ச உதவுவது.

கோளப்பானை என்பது, உருண்டு திரண்ட பானை. சவப்பானை என்பது ஈமத்தாழி. சாம்பல் பானை என்பது, கையால் செய்யப்படுவது. தவலைப் பானை என்பது, நீரை ஊற்றி வைக்க உதவுவது. மடைக்கலப் பானை என்பது, திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுவது.

மண்பானைச் சமையலின் நன்மைகள்

மண்பானையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். மண்பானை உணவு, அமிலத் தன்மையைச் சமப்படுத்தும். நல்ல பசியை, தூக்கத்தைக் கொடுக்கும். மண் பானையில் சமைக்கப்படும் உணவு, சுவை மாறாமல் இருக்கும்.

இரத்தக் குழாய்களைச் சீராக்கும். குழந்தையின்மைச் சிக்கலைத் தடுக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும். மண் பானையில் வைக்கப்படும் தயிர், நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கும்.

மண் பானையில் சமைத்துச் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்சனைகள் குணமாகும். உடலைக் குளிர்ச்சியாக வைப்பதுடன், நீண்ட வாழ்நாளையும் தரும். இயற்கையோடு ஒன்றியிருப்பதே பலமாகும்.


முனைவர் வீ.ஜானகிராமன், வீ.கார்த்திக்பாண்டி, கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, மதுரை, சி.நிவேதா, கலசலிங்கம் பல்கலைக் கழகம், கிருஷ்ணன்கோயில்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!