பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனக் கலவைகள்!

பால் உற்பத்தி

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

கறவை மாடுகளுக்குத் தேவையான சத்துகள் மேய்ச்சல் மூலமும், நாம் அளிக்கும் பசுந்தீவனம், அடர்தீவனம், வைக்கோல் மூலமும் கிடைக்கின்றன. சரியான சத்துகள், கால்நடைகள் நலமுடன் இருக்க, உரிய நேரத்தில் சினையாகிப் பாலுற்பத்தியைப் பெருக்கத் துணை புரிகின்றன.

கால்நடைகளின் உண்ணும் திறன், செரிக்கும் தன்மை, உற்பத்தித் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சில தீவனத் துணைப் பொருள்களைத் தயாரித்து, கால்நடை வளர்ப்போரின் இலாபத்தை அதிகப்படுத்தி உள்ளது.

அவையாவன: தானுவாசு தாதுப்புக் கலவை. தானுவாசு தாதுப்புக் கட்டிகள். புரதம் நிறைந்த கால்நடைத் தீவனமான அசோலா.

தானுவாசு தாதுப்புக் கலவை

கறவை மாடுகளுக்குப் பசுந்தீவனம், தவிடு வகைகள் மற்றும் சாதாரண உப்புக் கலவையைக் கொடுத்தாலே பெரும்பாலான தாதுப்புகள் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், இப்படிச் செய்வதில் சில தாதுப்புகள் கிடைக்காமல் போகலாம்.

மிகவும் குறைவாகத் தேவைப்படும் உப்புகளை நுண் தாதுப்புகள் எனலாம். எனவே, பால் உற்பத்தியைக் கூட்ட, தானுவாசு தாதுப்புக் கலவை, விற்பனை செய்யப்படுகிறது.

இந்தக் கலவையில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு, அயோடின், கோபால்ட், துத்தநாகம், மாங்கனீசு, செலினியம், கந்தகம் ஆகிய சத்துகள் உள்ளன. இதைக் கறவை மாட்டுக்குத் தினமும் 30-40 கிராம், கன்றுக்கு 5 கிராம், கிடேரிக்கு 15-20 கிராம், பால்வற்றிய மாடு மற்றும் எருதுக்கு 25-30 கிராம் அளிக்க வேண்டும்.

தாதுப்புக் கட்டிகள்

தாதுப்புக் கலவையைக் குறிப்பிட்ட அளவில் கலந்து பிணைத்துக் கட்டிகளாக மாற்றி, பண்ணையில் எப்போதும் கிடைக்கும் வகையில் தொங்க விட வேண்டும். இதனால், கால்நடைகளுக்குத் தாதுப்புகள் எந்நேரமும் கிடைக்கும்.

சரிவிகிதக் கலப்புத் தீவனத்தை மாடுகளுக்கு அளித்தாலும், இந்தத் தாதுப்புக் கட்டியைக் கொட்டிலில் தொங்க விடும் போது, மாடுகள் அதைச் சுவைத்து, தாதுப்புத் தேவையைச் சரிசெய்து கொள்ளும்.

தாதுப்புக் கட்டிகளை மாட்டுத் தொழுவத்தின் சுவரில் நிலையாக அமைக்கலாம். அல்லது நடுவில் தொங்க விடலாம். தாதுப்பை அதிகமாகச் சுவைக்கும் மாடுகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்னும் அச்சம் தேவையில்லை. ஏனெனில், தாதுப்பின் தேவை மட்டுமே சரியாகும். இதனால், பால் உற்பத்தியைப் பெருக்கி அதிக இலாபத்தை ஈட்டலாம்.

புரதம் மிகுந்த அசோலா தீவனம்

வறட்சியிலும், குறைந்த நீரில், குறைந்த இடத்தில் வளர்க்கக் கூடியது, புரதம் நிறைந்த அசோலா பசுந்தீவனம். கால்நடைகளுக்கு அசோலாவைக் கொடுத்தால், அடர் தீவன அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இதை எளிய முறையில் உற்பத்தி செய்யலாம். வேகமாக வளரும்.

கால்நடைகள் எளிதாக உண்ணும். இதைப் பச்சையாகவும், உலர்த்தியும் கொடுக்கலாம். தீவனச் செலவு குறையும். பாலுற்பத்தி அதிகமாகும். கொழுப்புச் சத்து நிறைந்த பால் கிடைக்கும்.

அசோலாவில் புரதச்சத்து 25-30 சதம் உள்ளது. மேலும் தழை, மணி, சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், இரும்பு, கொழுப்பு, மாவு, சர்க்கரை போன்ற சத்துகள் உள்ளன.

கறவை மாடு, உழவு மாட்டுக்கு 1-1.5 கிலோ, ஆட்டுக்கு 300-500 கிராம், கோழிக்கு 20-30 கிராம், வெண்பன்றி ஒன்றுக்கு 1.5-2 கிலோ, முயலுக்கு 100 கிராம் கொடுத்தால் போதும்.

இதுவரை கூறியுள்ள உத்திகளைக் கொண்டு. பண்ணையாளர்கள் தங்களின் கறவை மாடுகளைப் பராமரித்தால், பால் உற்பத்தியை அதிகரித்து, வருவாயைப் பெருக்கி மகிழ்ச்சியாக வாழலாம்.


PB_DEVAKI

முனைவர் க.தேவகி, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், முனைவர் க.செந்தில்குமார், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை 600 007, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!