பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்!

வேளாண்மை

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன்.

மிழ்நாட்டிலும் உலகளவிலும் இப்போது இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்து வருகிறது. அங்கக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், நுகர்வோருக்குத் தரமான உணவுப் பொருள்களை அளிக்கும் வகையில்,

அங்ககச் சான்றுகளை வழங்கி, விளை பொருள்களுக்கான சந்தை மதிப்பைக் கூட்டும் வகையில், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத் திட்டத்தின் கீழ், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு நிதியில், இத்திட்டம் 2015-16 ஆண்டில் இருந்து மூன்றாண்டுத் தொடர் திட்டமாக, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை மூலம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி நம்மிடம் விளக்கிக் கூறினார்.

வேளாண்மை DAKSHINA MOORTHY IAS 1 scaled e1712471276213

“அங்கக வேளாண்மை என்பது, இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, பூசணக்கொல்லி, களைக்கொல்லி, வளர்ச்சியூக்கி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் போன்ற எந்தப் பொருளையும், எவ்வகையிலும் பயன்படுத்தாமல், இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்படும் வேளாண்மை.

விவசாயிகள், இரசாயனப் பொருள்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைக் காக்கும் பயிர்ச் சுழற்சி, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, பசுந்தாள் உரம், பண்ணைக் கழிவைப் பயன்படுத்துதல் போன்ற இயற்கை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

திட்டச் செயல்பாடுகள்

விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து தங்கள் நிலங்களில் அங்கக விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்த, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐம்பது அல்லது குறைந்தளவு பத்து விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து, ஐம்பது ஏக்கர் நிலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மையில் ஈடுபடலாம். அதிகளவாக ஒரு பயனாளிக்கு இரண்டு எக்டர் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

நிதியுதவி

குழுவிலுள்ள அங்கக விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொருவருக்கும் முதலாண்டில் 12,000 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 10,000 ரூபாய், மூன்றாம் ஆண்டில் 9,000 ரூபாய் என, மொத்தம் 31,000 ரூபாய் அளிக்கப்படும். இது ஒரு எக்டர் சாகுபடிக்கான நிதியுதவி ஆகும்.

பங்கேற்பு உறுதியளிப்பு முறை

இந்தத் திட்டத்தில் அருகருகே விவசாய நிலங்களைக் கொண்ட, அங்ககப் பண்ணையில் ஆர்வமுள்ள விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அங்ககப் பண்ணையம் குறித்தும், அங்ககச் சான்றளிப்புக் குறித்தும் விளக்கப்படுகிறது.

மேலும், அவர்கள் அருகிலுள்ள அங்ககப் பண்ணைகளுக்குப் பட்டறிவுப் பயணமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆர்வமுள்ள விவசாயிகளிடம் இருந்து, விண்ணப்பம், அங்ககப் பண்ணைய உறுதிமொழி, பண்ணையின் குறிப்பு, மண்மாதிரி முடிவுகளைப் பெற்று, பங்கேற்பு உறுதியளிப்பு முறையில், மண்டலக்குழு மூலம் பதிவு செய்யப்படுகிறது.

இந்த விவசாயிகளுக்கு, முதலில், இரசாயனக் கலப்பில்லாத அங்கக விதை உற்பத்தி, அடுத்து, இயற்கை உரங்கள், தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல், அடுத்து, நுண்ணுயிர் உரங்கள், அமுதக் கரைசல், இயற்கைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைத் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகிய மூன்று நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குழுவிலுள்ள விவசாயிகள் அங்ககப் பண்ணைய முறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த பண்ணைகளில் இருந்து உரமோ, பூச்சி மருந்தோ கலந்து விடாமல் பாதுகாத்துப் பல்லுயிர்ப் பெருக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

மண்டலக் குழுவின் கூற்றுப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் நிலம் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகளை அங்கக முறைக்கு மாற்றிவிட வேண்டும். மண்டலக்குழு நடத்தும் கூட்டங்கள், பயிற்சிகள், வயல்தின விழாக்கள் மற்றும் வயல் ஆய்விலும்; சக விவசாயி, குழுவைச் சேர்ந்த மற்ற விவசாயிகளின் பண்ணைகளை ஆய்வு செய்யும் போதும் கலந்து கொள்ள வேண்டும்.

குழுவின் முடிவுப்படி செயல் திட்டத்தைத் தயாரித்து அங்ககப் பண்ணைய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அங்கக விதைகள் உற்பத்தி, அமுதக் கரைசல் மற்றும் வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்ற இடுபொருள்களைப் பண்ணையிலேயே தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.

தழைச்சத்தைத் தரவல்ல அகத்தி, சீமையகத்தி போன்றவற்றை வரப்புகளில் வளர்க்க வேண்டும். முன்னோடி விவசாயி அனைத்து நிலங்களையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும்.

குறைந்தது மூன்று விவசாயிகள் மற்றும் நுகர்வோர், கொள்முதல் செய்வோர் அடங்கிய குழு, ஓர் அங்ககப் பண்ணையில் அங்கக முறைகளை முழுமையாகப் பின்பற்றி இருப்பது குறித்து, அந்தப் பண்ணை விவசாயி அல்லது குடும்பத்தினர் முன்னிலையில் முழுமையாக ஆய்வு செய்து, மண்டலக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

இப்படி, அனைத்து அங்கக சாகுபடி நிலங்களும் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, அங்ககச் சான்றளித்தல் குறித்து, விவசாயிகளிடம் தனித்தனியாக விவாதித்து, ஒட்டுமொத்த விவரங்களைத் தயாரித்து மண்டலக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் மண்டலக்குழு, விவசாயிகளிடம் ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதியை அளிக்கும். ஒரு விளைபொருளை அறுவடை செய்வதற்கு முன், அதிலிருந்து மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி, பூச்சி மற்றும் வேதிப் பொருள்கள் இல்லையென்பதை, முன்னோடி விவசாயி உறுதி செய்ய வேண்டும்.

இந்தச் செயல்களுக்குப் பிறகு, PGS ORGANIC என்னும் சான்று வழங்கப்படும். முதல் இரண்டாண்டு உற்பத்திப் பொருள்களுக்கு PGS இந்தியா கிரீன் என்றும், மூன்றாம் ஆண்டிலிருந்து PGS இந்தியா ஆர்கானிக் என்றும் சான்றளிக்கப்படும்.

உற்பத்திப் பொருள்களைச் சுத்தம் செய்து உரிய முறையில் சிப்பமிட்டு, PGS இந்தியா சான்று விவரங்களுடன் விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் விளையும் பொருள்கள், தமிழ்நாடு அங்கக விளை பொருள்கள் (TOP-Tamilnadu Organic Products) என்னும் வணிக அடையாளத்துடன் விற்கப்படுகின்றன.

சுத்திகரித்தல், சிப்பமிடுதல், அச்சிடுதல், உள்ளூர்ச் சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, சந்தை வாடகை, மதிப்புக் கூட்டுதல், விளை பொருள்களை ஓரிடத்தில் சேர்த்தல், சந்தை இணைப்பு, அங்ககப் பொருட்காட்சிச் செலவு போன்ற, அறுவடைக்குப் பிந்தய செயல்களுக்கான செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

திட்டச் சாதனை

முதற்கட்டமாக, 2015-16 ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களில் அடங்கிய 112 தொகுப்புகளில், மூன்றாண்டு நிதியாக ரூ.16.91 கோடி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம், 5,596 ஏக்கர் நிலங்கள் அங்கக வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டு, 4,604 விவசாயிகள் 15.31 கோடி ரூபாய் செலவில் பயனடைந்தனர்.

இரண்டாம் கட்டமாக 2018-19 ஆம் ஆண்டில் 8 மாவட்டங்களில் அடங்கிய 200 தொகுப்புகளில், ரூ.6.732 கோடி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, ரூ.6.63 கோடி மதிப்பிலான செலவினம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன் மூலம், 10,000 ஏக்கர் நிலங்கள் அங்கக நிலைக்கு மாற்றப்பட்டு, 5,943 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த 200 தொகுப்புகளில் இரண்டாம் ஆண்டுப் பணிகள் ரூ.6.936 கோடியில் செயல்படுத்தப்படும்.

மேலும், இத்திட்டம் 2019-20 ஆம் ஆண்டிலும் செயல்படுத்தப்படும். இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை, வங்கிப் புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம்’’ என்றார்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!