பருத்தியைத் தாக்கும் நோய்கள்!

பருத்தி

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன்.

மிழ்நாட்டில் பயிராகும் முக்கியப் பயிர்களில் பருத்தியும் ஒன்றாகும். இந்தப் பருத்திச் செடிகளைப் பல வகையான நோய்கள், விதையிலிருந்து அறுவடை வரையான பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் 10-60 சத விளைச்சல் பாதிக்கப்படும்.

பருத்தி – வேரழுகல் நோய்

இது, ரைசாக் டோனியா சொலானி, மேக்ரோ போமினா பேசியோலினா, ஸ்கிளி ரோசியம் ரால்ப்சி போன்ற மண்வாழ் பூசணங்களால் ஏற்படுகிறது. பூசணங்கள் ஒன்று சேர்ந்து நோயை உருவாக்கும் போது, விதைகள் முளைப்பதற்கு முன்பே அழுகி விடும்.

விதைகள் முளைத்து இரண்டு இலைப் பருவத்தில் தாக்கும் போது, அடித்தண்டு கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். வேர்ப்பட்டையில் வளையம் போன்ற அமைப்பு இருக்கும். வளர்ந்த செடியின் வேர்ப்பட்டை சிதைந்து அழுகியதைப் போல இருக்கும்.

இப்படிப் பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கினால் எளிதாக கையில் வந்து விடும். விதையை ஆழமாக விதைப்பது, மண்ணின் ஈரப்பதம் அதிகமாக இருப்பது, நோய் தாக்கிய நிலத்தில் தொடர்ந்து பருத்தியைப் பயிர் செய்வது ஆகியன, நோய்க்கான முக்கிய காரணிகள் ஆகும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

தரமான, நோயற்ற விதைகளை விதைத்தல். விதைகளை ஆழமாக விதைக்காமல், மேலோட்டமாக விதைத்தல். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாளுதல். நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அழித்தல்.

டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், பேசில்லஸ் சப்டில்லிஸ் என்னும் பாக்டீரிய மற்றும் பூசண எதிர் உயிர்க்கொல்லிக் கலவையை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைத்தல். இதே கலவையை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து, 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இடுதல்.

ஏக்கருக்கு 60 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கை நிலத்தில் இடுதல். எதிர் உயிர்க் கொல்லியைப் பயன்படுத்தாத நிலையில், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைத்தல். பாதிக்கப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேர்ப் பகுதியில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்த கரைசலை ஊற்றுதல்.

வாடல் நோய்

இது, ப்யுசேரியம், வெர்ட்டிசிலியம் என்னும் பூசணங்களால் ஏற்படுகிறது. நோய் தாக்கினால், மண்ணுக்கு மேலுள்ள தண்டுப் பகுதி, வெளிர் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகி, இறுதியில் கறுப்பாக மாறும். இதனால், செடிகள் தரையில் சாய்ந்து விடும்.

இந்நிலையில், நீளவாக்கில் தண்டை வெட்டிப் பார்த்தால், பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்நோய், செடியின் அனைத்துப் பருவத்திலும் தெரிந்தாலும், பூக்கும் போது அல்லது அதற்கு முந்தைய நிலையில் தீவிரமாக இருக்கும்.

இலை விளிம்புகள் வாடி, மஞ்சளாகி, பின்பு பழுப்பாக மாறும். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செடியிலுள்ள இலைகள் கீழ்நோக்கித் தொங்கும். இறுதியாக இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.

இந்நோயால் செடி முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படலாம். இறுதியில் பட்டை, பழுப்பு நிறமாக மாறும். அதனை உரித்துப் பார்த்தால், பழுப்பு அல்லது கரும் பழுப்புக் கோடுகள் தண்டின் மேலும் தண்டுக்குள்ளும் தென்படும். நோய் தீவிரமான நிலத்தில் ஆங்காங்கே செடிகள் இலைகள் இல்லாமல் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

தரமான, நோயற்ற விதைகளை விதைத்தல். விதைகளை ஆழமாக விதைக்காமல், மேலாக விதைத்தல். பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடித்தல். நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அழித்தல்.

டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், பேசில்லஸ் சப்டில்லிஸ் என்னும் பாக்டீரிய மற்றும் பூசண எதிர் உயிர்க்கொல்லிக் கலவையை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைத்தல். இதே கலவையை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து மண்ணில் இடுதல்.

ஏக்கருக்கு 60 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கை நிலத்தில் இட வேண்டும். எதிர் உயிர்க் கொல்லியை இடாத நிலையில், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைத்தல்.

பாதிக்கப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேர்ப் பகுதியில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்த கரைசலை உற்ற வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இது, ஆல்டர்நேரியா அல்லது மேக்ரோஸ்போரா என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. இப்பூசணம் 50 சதம் வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். பயிரின் வளர்ச்சிக்குச் சாதகமற்ற நிலையில் நோய் தோன்றும். மேலும், எப்போது சத்துப் பற்றாக்குறை அல்லது வயலில் அதிக ஈரப்பதம் உள்ளதோ, அப்போது நோயின் தாக்கம் கூடுதலாக இருக்கும்.

இலைகளில் வட்ட வளையங்களைக் கொண்ட பல புள்ளிகள் தோன்றுவது இந்நோயின் ஆரம்ப அறிகுறி. நாளடைவில் இப்புள்ளிகள் இணைந்து இலை முழுவதும் பரவி, பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்து விடும். காய்கள் சரியாக வெடிக்காமல் போவதால் பஞ்சின் தரமும் குறையும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நோய் தாக்கிய இலைகளைச் சேகரித்து அழித்தல். நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, டெபுகோனசோல் 200 மில்லி அல்லது புரோபிகோனசோல் 200 மில்லி அல்லது ஹெக்சகோனசோல் 200 மில்லி அல்லது ட்ரைபிளாக் ஸ்ட்ரோபின் 100 கிராம் அல்லது மேன்கோசெப் 500 கிராம் வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.

தயிர்ப்புள்ளி நோய்

இது, ராமுலேரியா ஆரியோலா என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. பெரும்பாலும் குளிர் அல்லது பனிக்காலத்தில் (நவம்பர்- பிப்ரவரி) நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். தாக்கப்பட்ட இலையின் அடிப்பகுதியில் தயிர் நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.

பிறகு, புள்ளிகள் இணைந்து இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். நோயானது, காற்று, பாசனநீர், மழை மூலமாகப் பரவுகிறது. தழைச்சத்தைக் கூடுதலாக இடுவதாலும், நெருக்கமாகப் பயிரிடுவதாலும் நோய் வேகமாகப் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பயிர்க் கழிவுகளைச் சேகரித்து அழித்தல். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைத்தல். ஏக்கருக்கு, மேன்கோசெப் 500 கிராம் அல்லது ஹெக்ச கோனசோல் 200 மில்லி அல்லது புரோபி கோனசோல் 200 மில்லி வீதம் தெளித்தல்.

பாக்டீரிய இலைக்கருகல் நோய்

இது, சேந்தோமோனஸ் ஆக்ஸ்னோபோடிஸ் பி.வி. மால்வேசியாரம் என்னும் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியம் மண்ணுக்கு மேலுள்ள, செடிகளின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும். நாற்றுக் கருகல், கருங்கிளை, முக்கோண வடிவ இலைப்புள்ளி, நரம்புக் கருகல், காய் அழுகல் போன்றவை, இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

நாற்றுக் கருகல்: ஒரு வார வயதுள்ள சிறு செடிகளில் நீர்க்கசிவுடன் கூடிய, வட்டமான அல்லது ஒழுங்கற்ற புள்ளிகள் இலைகளில் தோன்றும். பிறகு, இவை தண்டுப் பகுதிக்குப் பரவுவதால் இளஞ்செடிகள் வாடி இறந்து விடும்.

முக்கோண வடிவ இலைப்புள்ளி: ஆரம்பத்தில் சிறிய கரும்பச்சை நிற நீர்க் கசிவுடன் கூடிய புள்ளிகள் இலையின் அடிப்பகுதியில் தோன்றி, பின் பெரிதாகி முக்கோண வடிவ இலைப் புள்ளிகளாக மாறும். நோய் தீவிரமாகும் போது, புள்ளிகள் இலையின் இரு பக்கமும் தென்படும்.

நரம்புக் கருகல்: நோயால் தாக்கப்பட்ட இலையின் முக்கிய மற்றும் சிறு நரம்புகள் கருகிய தோற்றத்தைத் தரும். பாதிக்கப்பட்ட இலைகளில் மேடு பள்ளங்கள் தோன்றி உள்நோக்கிச் சுருளும். நோய், நரம்பிலிருந்து இலைக் காம்புக்குப் பரவும் போது இலைகள் உதிர்ந்து விடும்.

கருங்கிளை: தண்டு, காய்களைத் தாங்கி நிற்கும் கிளைகளில் பழுப்பு நிறத்தில் இருந்து கறுப்புநிற நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும். இந்நோய் தாக்கிய தண்டு வளர்வதற்கு முன்பே கீழ்நோக்கித் தொங்கும்.

இதனால், தண்டுப் பகுதியில் வெடிப்புத் தோன்றி, அதில் பச்சையான திரவம் வடியும். தீவிரத் தாக்குதல் ஏற்பட்டால், செடிகளில் இலைகள் இல்லாமல் கிளைகள் மட்டும் இருக்கும்.

காய் அழுகல்: காய்களில் முதலில் நீர்க்கசிவுடன் தோன்றும் புள்ளிகள், பிறகு கறுப்பாகி, உட்குவிந்து ஒழுங்கற்று இருக்கும். நாளடைவில் நோயானது, காய் முழுவதும் பரவ, நோயுற்ற காய்கள் கீழே உதிரும். ஓரளவு முதிர்ந்த காய்களில் ஏற்படும் தாக்குதலால் முதிர்வதற்கு முன்பே வெடித்து விடும்.

அத்துடன் பாக்டீரியா பரவி நூலிழைகளை மஞ்சள் நிறமாக மாற்றி, பஞ்சின் தரத்தைக் குறைக்கும். இந்த பாக்டீரியம், விதைகளையும் தாக்குவதால், அவற்றின் பருமன் குறைவதோடு, முளைப்புத் திறனும் பாதிக்கப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நோயுற்ற செடிகளின் பாகங்களைச் சேகரித்து அழித்தல். பயிர்ச் சுழற்சி முறைகளைப் பின்பற்றுதல். தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைத்தல். ஒரு கிலோ விதைக்கு 100 மில்லி அடர் கந்தகம் வீதம் எடுத்து, அமில விதை நேர்த்தி செய்தல்.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைத்தல். ஸ்டெப்ட்ரோ மைசின் சல்பேட் அல்லது ஸ்டெட்ரா சைக்ளின் என்னும் நோய் எதிர் உயிர் மருந்தை, ஏக்கருக்கு 40 கிராம் + 500 கிராம் தாமிரப் பூசணக்கொல்லி மருந்துடன் (காப்பர் ஆக்ஸி குளோரைடு) கலந்து தெளித்தல்.

இதுவரையில் கூறப்பட்ட தொழில் நுட்பங்களைக் கையாண்டால், பருத்தியில் தோன்றும் நோய்களை, திறம்படக் கட்டுப்படுத்தி, சிறந்த மகசூலை எடுக்கலாம்.


பருத்தி Narayanan e1645014878842

ப.நாராயணன், தொழில்நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!