பப்பாளி மரம்!

மரம் papaya

ப்பாளியின் தாயகம் அமெரிக்கா. வெப்ப மண்டலப் பழப்பயிரான இது, இந்தியாவில் சுமார் நாற்பதாயிரம் எக்டரில் பயிராகிறது. பப்பாளிப் பழம், கல்லீரல், மண்ணீரல் சிக்கல்களைத் தீர்க்கும். இது, பழச்சாறு தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பப்பெயின் பல்வேறு வகைகளில் உதவுகிறது.

நூறு கிராம் பப்பாளியில், மாவுச்சத்து 6.0-9.5 கிராம், கொழுப்பு 0.08-0.1 கிராம், கால்சியம் 12-41 மி.கி., கரோட்டின் 1,500-2,020 ஐ.யு., உயிர்ச்சத்து பி1 0.40 மி.கி., உயிர்ச் சத்து பி2 2.50 மி.கி., உயிர்ச் சத்து சி 40.71 மி.கி. உள்ளன.

இரகங்கள்

பப்பாளியை ஒருபால் இரகங்கள், இருபால் இரகங்கள் எனப் பிரிக்கலாம். ஒருபால் மரங்களை உருவாக்கும் இரகங்கள் ஆண் மரங்களாக அல்லது பெண் மரங்களாக விதைகளில் இருந்து வளரும். எடுத்துக்காட்டு: கோ. 1, கோ. 2, கோ. 5, கோ. 6.

இருபால் மரங்களை உருவாக்கும் இரகங்கள் இருபால் மலர்களைக் கொண்டுள்ள மரங்களாக அல்லது பெண் மரங்களாக விதைகளில் இருந்து வளரும். எடுத்துக்காட்டு: கோ. 3, கோ. 7, சூர்யா, ரெட் லேடி, சோலோ.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வெளியீடுகள்

கோ. 1: இது, இராஞ்சி இரகம் மூலம் உருவாக்கப்பட்டது. இதில், ஆண் பெண் மரங்கள் இருக்கும். குட்டையாக வளரும். பழம் உருண்டையாக இருக்கும். பழத்தின் எடை 1.2-1.5 கிலோ இருக்கும். இதன் கரையும் திடப்பொருள் 11-13 பிரிக்ஸ். பழச்சதை ஆரஞ்சு கலந்த மஞ்சளாக இருக்கும்.

கோ. 2: இது, நாட்டு இரகம் மூலம் உருவாக்கப்பட்டது. பழம் நீளவடிவில் இருக்கும். ஒரு மரம் ஓராண்டில் 60-90 பழங்களைக் காய்க்கும். பழத்தின் எடை 1.5-2.5 கிலோ இருக்கும். ஒரு காயிலிருந்து 26-30 கிராம் பப்பெயின் கிடைக்கும். இது, பழமாகவும், பப்பெயின் எடுக்கவும் பயன்படும். ஆந்திரம், மராட்டியத்தில் அதிகளவில் உள்ளது.

கோ. 3: இது, கோ.2, சன்ரைஸ், சோலோ ஆகிய இரகங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. பெண் பூக்கள் மற்றும் இருபால் பூக்களைப் பூக்கும். பழச்சதை நல்ல சிவப்பாக இருக்கும். உண்பதற்கு மிகவும் ஏற்ற இரகம். பழத்தின் எடை 450-500 கிராம் இருக்கும். ஒரு மரத்தில் இருந்து 90-120 பழங்கள் கிடைக்கும்.

கோ. 4: இது, கோ. 1, வாஷிங்டன் ஆகிய இரகங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. தண்டும் இலைக்காம்பும் வாஷிங்டன் இரகத்தைப் போல் ஊதா நிறத்தில் இருக்கும். ஆண் மரமும் பெண் மரமும் தனித்தனியாக இருக்கும். பழத்தில் சதைப்பற்று நிறைந்திருக்கும்.

கோ. 5: இது, வாஷிங்டன் இரகம் மூலம் உருவாக்கப்பட்டது. பப்பெயின் எடுப்பதற்கு மிகவும் ஏற்றது. உண்பதற்கும் உகந்தது. ஒரு எக்டரில் இருந்து ஆயிரம் கிலோ உலர் பப்பெயின் கிடைக்கும்.

கோ. 6: இதில், ஆண் பூவைக் கொண்ட மரம், பெண் பூவைக் கொண்ட மரம் தனித்தனியாக இருக்கும். இதன் பழம் கோ.5 பழத்தை விடப் பெரிதாகவும், இளம் பச்சையாகவும் இருக்கும்.

கோ. 7: இது, கோ. 3, பூசா டெலிசியஸ், சி.பி. 75, கூர்க் ஹனிடியூ ஆகிய இரகங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. இதில், பெண்பூ மரமும் உண்டு; இருபால் பூக்களைக் கொண்ட மரமும் இருக்கும். கோ. 3 இரகத்தை விட விளைச்சலும் தரமும் சிறப்பாக இருக்கும். பழச்சதை சிவப்பாக இருக்கும்.

கோ. 8: இது, கோ. 2 இரகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. இதில், ஆண் மரம், பெண் மரம் தனித்தனியே இருக்கும். பழம் சதைப்பற்றுடன் சிவப்பாக இருக்கும். பப்பெயின் எடுக்கவும் உண்ணவும் ஏற்றது. ஒரு எக்டரில் இருந்து 200-300 டன் பழங்கள் கிடைக்கும்.

இவற்றைத் தவிர, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், பூசா டெலிஸியஸ், பூசா ஜெயன்ட், பூசா குட்டை, பூசா மெஜஸ்டிக், பூசா நன்ஹா ஆகிய இரகங்களையும், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், சூர்யா என்னும் இரகத்தையும் வெளியிட்டு உள்ளன.

சாகுபடி முறை

மண்வளம் மற்றும் தட்பவெப்பம்: பப்பாளி பலவகை மண்ணில் வளரும். படுகை நிலம், மணல் கலந்த நிலம், வடிகால் வசதியுள்ள நிலம், பப்பாளிக்கு ஏற்றவை. களிமண் ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.2 இருக்க வேண்டும்.

சமவெளியில் மிதமான மற்றும் சற்றே வெப்பம் நிலவும் பகுதியில் நன்கு வளரும். 38 டிகிரி செல்சியசுக்கு மேலான வெப்பமும், 10 டிகிரி செல்சியசுக்குக் குறைவான வெப்பமும் பப்பாளிக்கு ஏற்றவையல்ல.

மலைப் பகுதியில் 1,100 மீட்டர் உயரமுள்ள இடத்திலும் நன்கு வளரும். 700-1,200 மி.மீ. மழையுள்ள பகுதியில் செழித்து வளரும்.

இனப்பெருக்கம்: ஒரு எக்டர் சாகுபடிக்கு 500 கிராம் விதைகள் தேவை. 1:1:2 வீதம் மட்கிய தொழுவுரம், வண்டல் அல்லது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவையை 20 செ.மீ நீளம், 10 செ.மீ. அகலமுள்ள நெகிழிப் பைகளில் இட்டு நிரப்ப வேண்டும்.

ஒரு பையில் 5-6 விதைகளை 1.5-2.0 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். நாள்தோறும் காலை மாலையில் பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். அதிக வெப்பமும், குறைந்த வெப்பமும், விதைகளின் முளைப்பைப் பாதிக்கும்.

சற்று நிழலான இடத்தில் விதைப் பைகளை வைக்க வேண்டும். பைகளில் விதைகளை நடுமுன், ஒரு லிட்டர் நீருக்கு 100 மி.கி. வீதம் கலந்த ஜிப்ரலிக் அமிலக் கலவையில் இரண்டு மணி நேரம் ஊற வைத்தால், நல்ல முளைப்பு இருக்கும்.

நூற்புழுவைக் கட்டுப்படுத்த, பைக்கு, 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு அல்லது 3 கிராம் கார்போ பியூரான் வீதம் இட வேண்டும். நாற்றுகள் ஒரு மாதத்தை அடையும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி வீதம் கலந்த தாமிர தாமிர ஆக்சிகுளோரைடு கரைசலை, பைகளில் ஊற்ற வேண்டும். 45 நாள் நாற்றுகளை நடலாம்.

நிலத் தயாரிப்பு: நிலத்தை 2-3 முறை உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை, 1.8×1.8 மீட்டர் இடைவெளியில் தோண்டி, ஒருவாரம் ஆறவிட வேண்டும்.

தென்மேற்குப் பருவமழை பெய்யும் ஜுன்- செப்டம்பர் பப்பாளி நடவுக்கு ஏற்றது. பாலுக்காக என்றால், நவம்பரில் நடலாம். அதிக வெப்பக் காலத்தைத் தவிர்க்க வேண்டும்.

குழிகளில் 1:1 வீதம் மணல் மற்றும் தொழுவுரத்தை நிரப்பி, வெய்யில் குறைவான மாலை நேரத்தில் நாற்றுகளை நட வேண்டும். செடிகள் உயிர்ப் பிடிக்கும் வரையில் பூவாளியால் காலை மற்றும் மாலையில் நீரை ஊற்ற வேண்டும்.

நன்கு வளர்ந்த மரத்துக்கு 7-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம். குழிகளில் நீர்த் தேங்கக் கூடாது. காற்றில் செடிகள் ஒடியாமல் இருக்க, பக்கத்தில் குச்சிகளை ஊன்றிக் கட்ட வேண்டும். செடிகள் சற்று வளர்ந்ததும், சுற்றிலும் மண்ணை அணைத்து விட வேண்டும்.

ஆண் பெண் மரங்கள் நீக்கம்: கோ. 1, கோ. 2, கோ. 4, கோ. 5, கோ. 6 ஆகிய ஒருபால் நாற்றுகளில் ஆண் மற்றும் பெண் பூக்கள் 50:50 என இருக்கும். பெண் மரங்களை விட ஆண் மரங்கள் விரைவாகப் பூத்து விடும். இவற்றில், மகரந்தச் சேர்க்கைக்காக 20 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் வீதம் வைத்துக் கொண்டு மற்ற ஆண் மரங்களை நீக்கி விட வேண்டும்.

ஊடுபயிர்: பப்பாளியில் ஆறு மாதம் வரை, முட்டைக்கோசு, தக்காளி, காலிஃபிளவர், மிளகாய் மற்றும் முள்ளங்கியை ஊடுபயிராக இடலாம். மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை நடவின் தொடக்கத்தில், அந்தக் கன்றுகளின் இடைவெளி 5 மீட்டருக்கு அதிகமாக இருந்தால், அங்கே பப்பாளியை ஊடுபயிராக இடலாம்.

களையெடுத்தல்: பப்பாளி ஓரளவு வளரும் வரை, 3-4 முறை களையெடுக்க வேண்டும். நிழல் படர்ந்து விட்டால் களைகள் கட்டுக்குள் வந்து விடும்.

உரமிடுதல்: பப்பாளி அதிகளவு உரங்களை எடுத்துக் கொள்வதால், அதன் நல்ல வளர்ச்சிக்குத் தேவையான உரங்களை, இளம் பருவம் மற்றும் முதிர் பருவத்திலும் இட வேண்டும்.

நடவுக்கு முன், குழிக்கு 10 கிலோ தொழுவுரம் வீதம் இட வேண்டும். நட்டு ஆறு மாதம் கழித்து, குழிக்கு 20:20 கிராம் அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா வீதம் இட வேண்டும்.

செடிகள் பூத்து ஆண் மரங்களை நீக்கிய பிறகு, இரண்டு மாத இடைவெளியில் மரத்துக்கு 110:300:80 கிராம் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாசை, தொடர்ந்து இட வேண்டும்.

நீர்வழி உரம்: நீர்வழி உரத்தைச் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் அளிக்கலாம். இதனால், அதிக எண்ணிக்கை மற்றும் அதிக எடையில் பழங்கள் கிடைக்கும். வாரம் ஒருமுறை மரம் ஒன்றுக்கு, 6.25 கிராம் தழை, மணி, சாம்பல் சத்துத் தேவைப்படும்.

நுண்ணூட்டம்: துத்தநாக சல்பேட் 0.5 சதம், போரிக் அமிலம் 0.1 சதம் ஆகியவற்றை, நட்ட 4 மற்றும் 8 மாதத்தில் தெளித்தால், அதிக மகசூல் மற்றும் தரமான பழங்கள் கிடைக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு: மாவுப்பூச்சி: பப்பாளியை மாவுப்பூச்சி அதிகளவில் தாக்கும். இது, தொடக்கத்தில் இலைக்கு அடியிலுள்ள நரம்புகளில் இருக்கும். பிறகு, குறுதிய காலத்தில் பல்கிப் பெருகி, இலை மற்றும் பிற பகுதிகளில் பரவும்.

தாக்கப்பட்ட இலைகள் வெளிரிய மஞ்சள் நிறமாகிக் காய்ந்து உதிர்ந்து விடும். இளஞ் செடிகள் காய்ந்து போகும். தாக்கப்பட்ட செடிகளில், எறும்புகள் மற்றும் கரும்பூசணம் காணப்படும். இதனால் 30-80 சதம் மகசூல் பாதிப்பு உண்டாகும்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள, அசிரோபேகஸ் பப்பாயே என்னும் ஒட்டுண்ணி மூலம் இப்பூச்சியை நன்கு கட்டுப்படுத்தலாம். இதை, நிலத்தில் விடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னும் பின்னும் பூச்சிக் கொல்லியை அடிக்கக் கூடாது.

வேரழுகல் நோய்: இது, இளநாற்றுகளை அதிகமாகத் தாக்கும். இதனால் செடிகள் வாடி இறந்து விடும். செடியின் வேரைச் சுற்றி நீர் தேங்கி நின்றால் இந்நோய் அதிகமாகப் பரவும்.

இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்த போர்டோ கலவை அல்லது 2 கிராம் வீதம் கலந்த மயில் துத்தக் கரைசலை, வேர்கள் நனைய ஊற்ற வேண்டும்.

தண்டழுகல் நோய்: இது, மண் மூலம் பரவும். இளஞ்செடி மற்றும் பெரிய மரங்களைத் தாக்கும். நீர்த் தேங்கும் இடங்களில் விரைவாகப் பரவும்.

இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்த போர்டோ கலவை அல்லது 2 கிராம் வீதம் கலந்த மயில் துத்தக் கலவையை, வேர்கள் நனைய ஊற்ற வேண்டும்.

பழ அழுகல் நோய்: இந்நோய், பலதரப்பட்ட பூசணங்களால் ஏற்படுகிறது. பழங்களில் கீறல்கள் அல்லது காயங்கள் ஏற்பட்டால் இந்நோய் எளிதில் தாக்கும். இதைக் கட்டுப்படுத்த, 0.01 சதம் தையோ பென்சோயேட் அல்லது 0.1 சதம் கார்பென்டசிம் அடங்கிய பூசண மருந்தைப் பழங்களில் தெளிக்க வேண்டும்.

வளையப்புள்ளி நச்சுயிரி நோய்: இது, அனைத்துப் பப்பாளி இரகங்களையும் தாக்கும் முக்கிய நச்சுயிரி நோயாகும். இதனால், இளஞ்செடிகளில் பூக்கள் வராது. காய்ப்பின் போது தாக்கினால் இலைகள் சுருண்டும் வாடியும் விடும். எனவே, மகசூல் பெருமளவில் பாதிக்கும். காய்களில் வளையப்புள்ளி அறிகுறிகள் தோன்றும்.

இந்நோய் தாக்கிய மரங்களை வெட்டி அழித்துவிட வேண்டும். சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் இந்நோயைப் பரப்பும். எனவே, இதைக் கட்டுப்படுத்த, ஊடுருவிப் பாயும் பூச்சி மருந்தை அடிக்க வேண்டும்.

அறுவடை

பழத்தோலில் மஞ்சள் நிறக் கீற்றுகள் தோன்றி அகலமாகும் போது அறுவடை செய்ய வேண்டும். நடவு செய்து 24 முதல் 30 மாதம் வரை மரங்களைச் சீராக வைத்திருக்க வேண்டும். கோ. 2 மற்றும் கோ. 5 மூலம், எக்டருக்கு 250 டன் பழங்கள், கோ. 3, கோ. 7 மூலம், 120-150 டன் பழங்கள் மகசூலாகக் கிடைக்கும்.

பாலெடுத்தல்

பப்பாளியில் உள்ள பப்பெயின் என்னும் நொதிப்பொருள், மதுத் தயாரிப்பு, இறைச்சியை மென்மையாக்கல், தோல் பதனிடுதல், அழகுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது.

கோ. 2 மற்றும் கோ. 5 இரகம், பால் எடுக்க உகந்தவை. 75-90 நாள் காய்களில் நீளவாக்கில் 3 மி.மீ. ஆழத்தில் 4-5 கீறல்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, கூரான பிளேடு, கூரான மூங்கில் அல்லது துரு ஏறாத கத்தியைப் பயன்படுத்த வேண்டும். கீறல்களில் இருந்து வடியும் பாலை, அலுமினியத் தட்டு, ரெக்சின் அல்லது நெகிழித் தட்டுகளில் சேகரிக்க வேண்டும்.

அதிகாலையில் இருந்து காலைப் பத்து மணிக்குள் பாலைச் சேகரிக்க வேண்டும். 3-4 நாட்கள் கழித்து, முன்பு பாலெடுத்த அதே காய்களில் மறுபடியும் பாலை எடுக்கலாம். இந்தப் பாலை, வெய்யில் அல்லது 40 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உலர்த்த வேண்டும்.

பப்பெயின் சேதமாவதைத் தடுக்க, 0.05 சத பொட்டாசியம் மெடாபை சல்பைட்டை, இந்தப் பாலில் சேர்க்கலாம். இந்தப் பப்பெயினை நெகிழிப் பைகள் அல்லது கலன்களில் வைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

இரகம், பாலெடுக்கும் பருவம், மரங்களின் செழிப்பு, சாகுபடிப் பகுதி போன்றவற்றைப் பொறுத்து, பப்பெயின் மகசூல் இருக்கும். ஒரு எக்டரில் இருந்து 3,000- 3,750 கிலோ பால் கிடைக்கும். இதிலிருந்து 800 கிலோ உலர் பப்பெயின் கிடைக்கும். பாலை எடுத்த காய்களில் இருந்து புரூட்டி என்னும் பொருளைத் தயாரிக்கலாம்.


PACHAI BOOMI DR.C.RAJA MANICKAM

முனைவர் சி.இராஜமாணிக்கம், உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!