பன்றிக் குட்டிகளைப் பராமரிக்கும் முறைகள்!

பன்றி

செய்தி வெளியான இதழ்: 2018 மே.

பிறந்த பன்றிக் குட்டிகளை ஒரு வாரம் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் குட்டிகளில் நோயெதிர்ப்புத் திறனும், சீரான உடல் வெப்ப நிலையும் குறைவாக இருக்கும். சீம்பாலைக் குடிக்கும் குட்டிகள் மயக்க நிலையில் தூங்கும் போது, தாய்ப்பன்றி அவற்றின் மேல் படுப்பதாலோ, மிதிப்பதாலோ குட்டிகள் இறக்க நேரலாம்.

குட்டிகள் பிறந்ததும் மூக்கிலும் வாயிலும் ஒட்டியிருக்கும் சளியைச் சுத்தம் செய்ய வேண்டும். இதனால், குட்டிகள் இயல்பாகச் சுவாசிக்க முடியும். தொப்புள் கொடியை 2-3 செ.மீ. விட்டு விட்டு மீதியை அகற்றிவிட வேண்டும். வெட்டு முனையில் நூலைக் கட்டுவதுடன் டிங்சரைத் தடவ வேண்டும்.

இதனால் நோய்த் தொற்றுத் தடுக்கப்படும். குட்டிகள் பிறந்து அரை மணியில் இருந்து ஒரு மணி நேரத்தில் பாலைக் குடிக்கவிட வேண்டும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும். சீம்பாலில் உள்ள ஏ, டி, ஈ வைட்டமின் சத்துகளால் குட்டிகளின் வளர்ச்சியும் கூடும்.

பிறந்த குட்டிகளில் இருக்கும் நான்கு ஜோடி ஊசிப் பற்களை, குட்டிகள் பிறந்த அன்றே வெட்டி நீக்கிவிட வேண்டும். நீக்காத நிலையில், பாலைக் குடிக்கும் போது தாயின் மடியில் காயம் ஏற்படும். நல்ல தீவனப் பராமரிப்பில் இருக்கும் தாய்ப்பன்றி ஒரு நாளைக்கு 2-3 கிலோ பாலைக் கொடுக்கும்.

தாய்ப்பால் குறைவாக இருந்தால் வேறு பன்றியிடம் அல்லது மாட்டுப் பாலில் சரிபாதி நீரைச் சேர்த்து நன்கு காய்ச்சி, ஆற விட்டுக் கொடுக்கலாம். 2-3 வாரங்களுக்குப் பால் மட்டுமே குட்டிகளின் உணவாகும்.

பொதுவாக, பன்றிக் குட்டிகளுக்கு இரத்தச்சோகை ஏற்படும். இதைத் தடுக்க, குட்டிகள் பிறந்த அன்றே ஒரு குட்டிக்கு இரண்டு மில்லி வீதம் இரும்புச்சத்து ஊசியை, கழுத்தில் அல்லது தொடையில் போட வேண்டும்.

குட்டிகளை அடையாளம் காண, வலது காதின் ஓரத்தில் இரத்த நாளங்களைக் கவனித்து ஓட்டைகளைப் போட வேண்டும். குட்டிகள் பிறந்ததும் அவற்றின் எடையை அறிய வேண்டும். பிறப்பு எடை 1.2-1.5 கிலோ இருக்க வேண்டும்.

பத்துக் குட்டிகளுக்கு மேல் பிறந்தால், கடைசிக் குட்டியின் எடை குறைவாக இருக்கும். இது ரண்ட் குட்டி எனப்படும். குட்டி உருவானதில் இருந்து சரியான சத்துகள் கிடைக்கவில்லை என்றால் இந்நிலை ஏற்படும். பிறந்ததும் குட்டிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

பிறந்து பத்து நிமிடத்தில் தாயிடம் பாலைக் குடிக்கத் தொடங்கி விடும். முதல் 1-2 நாட்களில் பால் காம்புக்காகக் குட்டிகள் சண்டையிட்டுக் கொள்ளும். பிறகு, ஆளுக்கொரு காம்பை அடையாளமாக வைத்துக் கொண்டு பால் குடியை மறக்கும் வரை, அந்தந்தக் காம்பிலேயே பாலைக் குடிக்கும்.

எடை குறைவாக உள்ள குட்டியை முதலில் பாலைக் குடிக்கவிட வேண்டும். அடுத்து மற்ற குட்டிகளைக் குடிக்கவிட வேண்டும். வெப்பக் காலத்தில் குட்டிகள் இறக்க நேரிடும். இதைத் தடுக்க, குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு, கொட்டகையின் மேலே நீரைத் தெளிக்கலாம். நீர்த் தெளிப்பானை அமைக்கலாம். கொட்டகையைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்கலாம். கொட்டகையின் உயரத்தைக் கூட்டலாம்.

இதைப் போல, குளிர் காலத்திலும் குட்டிகள் இறக்க வாய்ப்புண்டு. இதைத் தடுக்க, கொட்டகையில் குளிர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, 200 வாட்ஸ் மின் விளக்கை எரிய விடலாம்.

அல்லது வெப்பக் காற்றைத் தரக்கூடிய விசிறியைப் பயன்படுத்தலாம். கொட்டகையைச் சுற்றித் தார்ப்பாய் அல்லது கோணிகளால் மறைத்து, குளிர் உள்ளே போகாமல் தடுக்கலாம்.

குட்டிகளை 42 நாளில் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும். இனவிருத்திக்கான ஆண் குட்டிகளை விட்டு விட்டு மற்றவற்றை விரை நீக்கம் செய்வதுடன், அவற்றுக்கு உணவுக் கழிவுகளைக் கொடுத்தால் வளர்ச்சி மிகுதியாக இருக்கும்.

மேலும், தீவனச் செலவும் குறைந்து இலாபம் மிகும். குட்டிகள் பிறந்து 2-3 நாட்களிலேயே விரை நீக்கம் செய்யலாம். இதுவே எளிய முறையாகும்.

தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது அவற்றின் எடையைக் குறித்துக் கொள்ள வேண்டும். பூச்சி மருந்தைக் கொடுக்க வேண்டும். அடையாள எண்கள் எழுதப்பட்ட பிளாஸ்டிக் ஒட்டிகளைக் காதுகளில் மாட்டிவிட வேண்டும்.

அனாதைப் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு

குட்டிகளை ஈன்றதும் தாய்ப்பன்றி இறந்து விட்டாலோ, சரியாகப் பாலைச் சுரக்கா விட்டாலோ, குட்டிகளை ஏற்றுக் கொள்ளா விட்டாலோ அந்தக் குட்டிகள் அனாதைக் குட்டிகள் எனப்படும். இந்தக் குட்டிகளை மற்ற தாய்ப் பன்றிகளும் எளிதில் ஏற்றுக் கொள்ளாது.

ஒரே நாளில் இரண்டு மூன்று பன்றிகள் ஈன்றிருந்தால், அனாதைக் குட்டிகளை அந்தப் பன்றிகளின் பிறப்புறுப்பில் புரட்டி எடுத்து விட்டால், அந்த அனாதைக் குட்டிகளை, தங்கள் குட்டிகளாக நினைத்துப் பாலைக் கொடுக்கும். இந்தச் சூழல் இல்லா விட்டால், மாட்டுப் பாலில் சரிபாதி நீரைக் கலந்து நன்கு காய்ச்சிக் கொடுக்கலாம்.

செயற்கைப் பால்

மாட்டுப்பால் 600 மில்லி, ஒரு முட்டையின் மஞ்சள் கரு, கால் தேக்கரண்டி சிட்ரிக் அமிலம், அரைத் தேக்கரண்டி மீன் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து குட்டிகளுக்குக் கொடுக்கலாம். இந்தச் செயற்கைப் பாலைப் பன்றியின் உடற்சூடு அளவில் சூடாக்கிக் கொடுக்க வேண்டும்.


பன்றி ILAVARASI e1713203993433

இரா.இளவரசி, த.பாலசுப்பிரமணியம், கு.மஞ்சு, ஹ.கோபி, பன்றி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!