பன்றிகளைத் தாக்கும் நோய்கள்!

பன்றி

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

சுத்தமில்லாச் சூழ்நிலையில் பன்றிகளை வளர்த்தால் நோய்கள் தாக்கும். தொற்று நோய்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பரவி, அதிகப் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும்.

தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் உண்டாகும். எனவே, அந்த நோய்களுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.

நோயுற்ற பன்றிகளின் நிலை

பன்றிகள் சரிவரத் தீவனம் எடுக்காது. மிகவும் சோர்வாக இருக்கும். மூக்கு வறண்டு இருக்கும். சிறுநீரில் மாற்றம் காணப்படலாம். கண்களில் நீர் வடியலாம்.

பன்றிகளைத் தாக்கும் நோய்கள்

நுண்ணுயிரி நோய்கள்: பன்றி எரிசிபிலஸ், அடைப்பான், கருச்சிதைவு நோய் ஆகியன.

நச்சுயிரி நோய்கள்: கோமாரி நோய், பன்றிக் காய்ச்சல், சிர்கோ நச்சுயிரி நோய் ஆகியன.

தாதுப்புக் குறை நோய்கள்: இரத்தச்சோகை, தோல் அழற்சி நோய் ஆகியன.

புற மற்றும் அக ஒட்டுண்ணி நோய்கள்: குடற்புழு, ஈப்புழு நோய் ஆகியன.

நோய்த் தடுப்பு

வெண்பன்றிகளுக்கு முறையாகக் குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசியைப் போட வேண்டும். குடற் புழுக்களை நீக்கினால் பன்றிகள் நல்ல உடல் வளர்ச்சியை அடையும்.

அதனால், தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது முதல் முறையும், அடுத்து ஓராண்டு வரையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும், ஓராண்டுக்கு மேல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும், சினைக் காலத்தில் 90-ஆம் நாளும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

தடுப்பூசிகள்

பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கிரிஸ்டல் வயலோட் தடுப்பூசியை, முதலில் 4 மாதத்திலும், அடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் போட வேண்டும்.

கோமாரி நோயைக் கட்டுப்படுத்த, திசுவளர் கோமாரி தடுப்பூசியை முதலில் 3 மாதத்திலும், அடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் போட வேண்டும்.

சிர்கோசீஸ் நோயைக் கட்டுப்படுத்த, சிர்கோ தடுப்பூசியை, முதலில் 21-ஆம் நாளும், அடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் போட வேண்டும்.

பன்றி எரிசிபிலஸ் நோயைக் கட்டுப்படுத்த, ஆலம் மூலம் செயல் இழக்கப்பட்ட தடுப்பூசியை, முதலில் 6-10 மாதத்தில் போட வேண்டும்.

இதைப் போட்ட மூன்றாம் வாரத்தில் பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும். அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை போட வேண்டும்.

அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த, ஸ்டோர் தடுப்பூசியை, நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும், ஆறாவது மாதத்தில் போட வேண்டும்.

அடுத்து, நோய்க் கிளர்ச்சி தோன்றும் பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை போட்டால் போதும்.

பராமரிப்பு

நோயுற்ற பன்றிகளைப் பிரித்துத் தனியாக வைத்துப் பராமரிக்க வேண்டும். புதிதாக வாங்கி வரும் பன்றிகளை 30 நாட்கள் தனியாக வைத்து, நோய்த் தாக்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின், மற்ற பன்றிகளுடன் சேர்க்கலாம்.

நோயுற்றால் உடனே கால்நடை மருத்துவர் மூலம் தகுந்த சிகிச்சையை அளிக்க வேண்டும். பன்றிக் கழிவை உடனே நீக்க வேண்டும். சிறுநீர் தங்காத வகையில் வடிகால் இருக்க வேண்டும். பண்ணை சுத்தமாக இருந்தால், பன்றிகளில் இறப்பைத் தடுக்கலாம்.


பன்றி MUTHULAKSHMI N

மு.முத்துலட்சுமி, ஹ.கோபி, த.பாலசுப்ரமணியம், ப.தேவேந்திரன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!