பாதுகாக்கப்பட வேண்டிய பனிச்சிறுத்தைகள்!

பனிச்சிறுத்தை

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018

னிச்சிறுத்தை, ஓரளவு பெரிய பூனை இனத்தைச் சேர்ந்தது. இது எவ்வகையைச் சேர்ந்தது என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. இன்னும் துல்லியமான ஆய்வு முடிவு கிடைக்கவில்லை. பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்காசிய மலைகளில், அதாவது, கடல் மட்டத்திற்கு மேல் 3,000-5,500 மீட்டர் உயரமுள்ள இடங்களில் வாழ்கின்றன. மலைகளில் 3,500-7,000 பனிச்சிறுத்தைகளும், உலகளவிலான மிருகக்காட்சிச் சாலைகளில் 600-700 பனிச்சிறுத்தைகளும் இருக்கும் என்று தெரிகிறது. பனிச்சிறுத்தை, லடாக்கில் ஷான் என்றும், மொங்கோலியாவில் இர்வெஸ் என்றும், கசாக்கில் பார்ஸ் அல்லது பேரிஸ் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

உடலமைப்பு

பனிச்சிறுத்தைகள் பல அளவுகளில் இருக்கும். பொதுவாக 27 முதல் 54 கிலோ வரையில் இருக்கும். உடலின் நீளம் 75-130 செ.மீ. இருக்கும். அதேயளவு நீளத்தில் வாலும் இருக்கும். உடல் நீண்ட தடித்த ரோமங்களுடன், வெள்ளையில் சாம்பல் நிறத்திலும், மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். மேலும், உடலில் ரோசாப்பூ இதழ் அளவில் கரும்பழுப்பு மற்றும் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். தலையில் கரும் பழுப்பு நிறத்தில் சிறிய புள்ளிகள் இருக்கும். கால்கள் மற்றும் வாலில் அதே நிறத்தில் பெரிய புள்ளிகள் இருக்கும். 

மலையில் வாழ்வதற்கு ஏற்ற வகையில், பனிச்சிறுத்தைகள் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளன. பருத்த உடலில் ரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். காதுகள் சிறியதாகவும், சுருண்டும் இருக்கும். இவ்வமைப்பு உடல்வெப்ப இழப்பைத் தடுக்க உதவுகிறது. உடல் எடையைத் தாங்கி நடப்பதற்கு வசதியாக, பாதங்கள் பரந்த அமைப்பில் உள்ளன. பாதங்களின் அடியிலுள்ள ரோமங்கள், சரிவுகளிலும், திடமற்ற இடங்களிலும் சீராக இயங்கும் வகையில் உராய்வைத் தருவதுடன், உடல்வெப்ப இழப்பையும் தடுக்கின்றன. அடர்ந்த ரோமங்களுடன் மென்மையாக இருக்கும் வால், முகத்தை மறைத்தபடி, பனிச்சிறுத்தை தூங்க உதவுகிறது.

பனிச்சிறுத்தை, உவையுரு நாவடி எலும்பு வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் உறுமுவதில்லை. பெரிய பூனைகள் உறும வேண்டுமானால் இந்த எலும்பு வளர்ச்சி தேவையென்று முன்பு கருதப்பட்டது. ஆனால், உறுமுவது, குரல்வளை சம்பந்தப்பட்டது என, புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பனிச்சிறுத்தை, சீறொலி, வேடிக்கை ஒலி, மியாவ் ஒலி, முறுமுறுத்தல், புலம்பல் போன்ற ஒலிகளை எழுப்பும்.

உயிரின வகைப்பாடு

தொடக்கத்தில், பனிச்சிறுத்தை, பான்தெரா இனத்தில், ஏனைய பெரிய பூனையினங்களில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் இது அதன் சொந்த இனமான உன்சியா இனத்தில் சேர்க்கப்பட்டது. இது, சிறுத்தையோடு நெருக்கமாக தொடர்புடையதல்ல என்று கருதப்பட்டது. ஆனால், சமீபத்திய மூலக்கூறு ஆய்வு, சிறுத்தையோடும், புலியோடும் நெருக்கமான இனம்தான் பனிச்சிறுத்தை என்று தெரிவிக்கிறது. இருந்தாலும் பனிச்சிறுத்தை உன்சியா இனத்தைச் சேர்ந்தது என்னும் கருத்துதான் பலமாக உள்ளது.

இதன் துணை உயிரினங்கள் சில, பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. இவை வலதின் டாக்சோபாக்ஸில் துணை உயிரினங்களின் கீழ் வருகின்றன. உலகின் பாலூட்டிகளைப் பற்றிய கையேடு, இரண்டு துணை உயிரிகளை அங்கீகரிக்கிறது. அவையாவன: மத்திய வடமேற்கிலிருந்து மங்கோலியா மற்றும் ரஷ்யா வரையில் இருக்கும் உன்ஷியா.  மற்றொன்று, மேற்குச் சீனா மற்றும் இமயத்தில் இருக்கும் உன்சியோய்டெஸ்.

வாழுமிடங்கள்

பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்காசிய மலைகளில் 12,30,000 ச.கி.மீ. பரப்பில் பரந்துள்ளன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகிஸ்தான், க்ரிஜ் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பன்னிரண்டு நாடுகளில் விரிந்துள்ளன. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் ஷேர் தார்யாவில் இருக்கும் ஹிந்துகுஷ் பாமீர் மலைத்தொடர்கள், தியன்ஷான், கராகோரம், காஷ்மீர், குன்லுன், தெற்குச் சைபீரிய இமயமலை, இரஷ்ய அல்டாய் மலை, சாஜன், தன்னு-ஓலா மலைகள், பைக்கால் ஏரியின் மேற்கிலுள்ள மலைகளில் பரவி இருக்கின்றன. மங்கோலியன் மற்றும் கோபி அல்டாய், கன்காய் மலைகள், திபெத்தின் வடக்கில் அல்டெய்-தாஹிலும் வாழ்கின்றன.

சுற்றுச்சூழலும் நடத்தையும்

கோடையில், 2700-6000 மீட்டர் உயர மலைகளில் வாழும் பனிச்சிறுத்தைகள் குளிர்காலத்தில், 1200-2000 மீட்டர் உயரமுள்ள இடங்களுக்கு வந்துவிடும். குட்டிகள் இருந்தாலும், தனிமையான வாழ்க்கையைத் தான் பனிச்சிறுத்தைகள் விரும்புகின்றன. ஒரு மனிதன் வசதியான வீட்டில் வாழ்வதைப் போல ஒவ்வொரு பனிச்சிறுத்தையும் தனித்தனியாக வாழ்கிறது. நேபாளத்தில் 12லிருந்து 40 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பரப்பில் ஒரு பனிச்சிறுத்தை வசிக்கிறது. நூறு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பரப்பில் 5லிருந்து 10 பனிச்சிறுத்தைகள் வரையில் உள்ளன. போதிய இரை கிடைக்காத இடங்களில், 1,000 கிலோ மீட்டர் சுற்றளவில் ஐந்து பனிச்சிறுத்தைகள் மட்டுமே உள்ளன.

ஒரு கூட்டம் வாழும் பகுதியில் இன்னொரு கூட்டம் நுழைந்தாலும் அங்கே அதிகாரப் போட்டி அவற்றுக்குள் நடப்பதில்லை. பதுங்கியிருக்கும் தன்மை பனிச்சிறுத்தைகளிடம் அதிகம். அதைப்போலவே, ஏமாற்றும் குணமும் அதிகம். பெரும்பாலும் தனிமையிலேயே இருக்கும் பனிச்சிறுத்தைகள், இரவிலும், மங்கிய மாலையிலும், அதிகாலையிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.

உணவுப் பழக்கம்

பனிச்சிறுத்தை மாமிச உண்ணி. தனது இரையை வெறியுடன் வேட்டையாடும். அனைத்துப் பூனைகளையும் போலவே, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உண்ணும். அழுகிய உடல் உட்பட எந்த மாமிசத்தையும் சாப்பிடும். தன்னைவிட மும்மடங்கு பெரிய விலங்கையும் கொல்லும் திறமையுண்டு. முயல், பறவை போன்ற சிறியளவிலான இரையையே தேவைப்படும் போது எடுத்துக்கொள்ளும். இதன் உணவுப் பழக்கம் ஓராண்டுக்குள் பலவகையில் வேறுபடும். இமயமலையில் பெரும்பாலும் பாரல் எனப்படும் நீலநிற ஆட்டை அடித்துச் சாப்பிடும். ஆனால், கராகோரம், தியன் ஷான், அல்தாய் போன்ற மலைகளில் வாழும் பனிச்சிறுத்தைகள், சைபீரிய ஐபிக்ஸ் மற்றும் அர்காலி எனப்படும் காட்டு வெள்ளாட்டைச் சாப்பிடும்.

பல்வேறு வகையான காட்டாடுகள், முறுக்கிய கொம்புள்ள வெள்ளாடுகள், தாடியுள்ள சிவப்பாடுகள், இமாலய தாஹர் மற்றும் கோரல்கள், பிளஸ் மான்கள், காட்டுப்பன்றிகள், லங்கூர் குரங்குகள் மற்றும் அசைபோடும் விலங்குகளைச் சாப்பிடும். மார்மோட்கள், ஊலி ஹேரே, பிகா, பல்வேறு ரோடென்ட், பனிச்சேவல், சூகார் போன்ற பறவைகள், பனிச்சிறுத்தையின் சிறிய வகை உணவாகும். தனது இரையை வேட்டையாடப் பதுங்கிக் காத்திருக்கும் பனிச்சிறுத்தை, இரையைக் கண்டதும் 14 மீட்டர் உயரத்திலிருந்தும் குதித்து ஓடிவரும்.

வாழ்க்கைக் காலம்

குளிர்காலம் முடியும்போது தான் பனிச்சிறுத்தைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. கர்ப்பக்காலம் 90-100 நாள்கள். ஒரு ஈற்றில் ஐந்து குட்டிகள் வரையில் போடும் திறன் இருந்தாலும், 2-3 குட்டிகளையே ஈனும். குட்டிகள் 18-22 மாதம் வரையில், அதாவது, சுதந்திரமாக நடமாடத் தொடங்கும் வரையில் தாயுடன் இருக்கும். வழக்கமாக பனிச்சிறுத்தைகள் 15-18 ஆண்டுகள் வரை உயிர்வாழும். ஆனால், சிறைக்கூண்டுகளில் 20 ஆண்டுகள் வரை கூட வாழ்கின்றன.

எண்ணிக்கையும் பாதுகாப்பும்

2003ஆம் ஆண்டு மெக்கார்தே எட் அல்லினால் எடுக்கப்பட்ட கணக்கில், காடுகளில் 4,080-6,590 பனிச்சிறுத்தைகளே வாழ்வதாகத் தெரிய வந்தது. இந்தக் கணக்கு, குத்துமதிப்பானது என்பதுடன், நம்பத்தக்கதாகவும் இல்லை. 1972ஆம் ஆண்டு, இயற்கைப் பாதுகாப்பிற்கான பன்னாட்டு அமைப்பு, உலகளவில் அழியக்கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் பனிச்சிறுத்தை இனத்தையும் சேர்த்தது. இதே நிலைப்பாடு 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டிலும் பொருத்திக் காட்டப்பட்டது. பனிச்சிறுத்தை இனத்தைக் காக்கவும் பெருக்கவும், கூண்டுகளில் இருக்கும் பனிச்சிறுத்தைகள் நல்ல முறையில் குட்டிகளை ஈனுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாக்கும் முயற்சிகள்

பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்கவும், இவ்வினம் வாழும் மலைகளின் சூழலைப் பாதுகாக்கவும், பனிச்சிறுத்தை அறக்கட்டளை, பனிச்சிறுத்தைச் சரணாலயம், பனிச்சிறுத்தைப் பிணையம் போன்ற அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. இந்தக் குழுக்களும், பல நாடுகளும், உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களும், நன்கொடையாளர்களும், சமீபத்தில் பெய்ஜீங்கில் கூடி பத்தாவது சர்வதேசப் பனிச்சிறுத்தைகள் மாநாட்டை நடத்தினார்கள். இதில், பனிச்சிறுத்தை இனத்தைக் காப்பதற்கான பல்வேறு அலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பறைகளில் பனிச்சிறுத்தை

மத்திய ஆசியாவின் துர்கிக் மக்களுக்கு, பனிச்சிறுத்தைகள் அர்த்தமுள்ள குறியீடாக உள்ளன. இங்கே இந்த மிருகம் ஐர்பிஸ் அல்லது பார் எனப்படுகிறது. ஆகவே இது பறைகளில் பரந்தளவில் மரபுச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது. பறைகளில் பனிச்சிறுத்தை அவுன்ஸ் எனப்படுகிறது. தடார்கள் மற்றும் கஜகிஸ்தான் மக்களின் தேசியச் சின்னமாகப் பனிச்சிறுத்தை இருக்கிறது. அல்மாட்டி நகரத்தின் அலுவலக முத்திரையிலும் பனிச்சிறுத்தையே உள்ளது. மேலும் தடார்ஸ்தனின் ஆயுத முகாம்களிலும் சிறகுடன் கூடிய பனிச்சிறுத்தை காணப்படுகிறது.

வடக்கு ஓசீடிய-அலானிய ஆயுத முகாம்களிலும் இதைப்போன்ற ஒரு சிறுத்தை காணப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் ஐந்து 7,000 மீட்டர் சிகரங்களையும் அளந்த சோவியத் மலையேறிகளுக்குப் பனிச்சிறுத்தை விருது வழங்கப்பட்டது. மேலும், கிர்கிஜ்தானின் பெண் சாரணியர் அமைப்பின் சின்னமாகவும் பனிச்சிறுத்தை விளங்குகிறது.


பனிச்சிறுத்தை Rajesh e1617961873561

மரு...ராஜேஷ்,

மரு.த.அ.விஜயலிங்கம், மரு.ச.இளவரசன்,

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!