பசுந்தீவனம் வளர்ப்பு!

பசுந்தீவனம்

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.

பால் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் ஏ பசுந்தீவனத்தில் நிறைய உள்ளது. ஒவ்வொரு லிட்டர் பாலுற்பத்திக்கும் சுமார் 2,000 சர்வதேச அளவீடுகள் வீதம் கறவை மாடுகளில் இருந்து இந்தச் சத்து உறிஞ்சப்படுகிறது.

எனவே, மாடுகளுக்குப் பசுந்தீவனத்தை அளித்தால் இந்த இழப்பைச் சரி செய்யலாம். கால்நடைகளின் பார்வை மற்றும் சுவாச மண்டலம் மேம்பட, கரு உருவாக, உருவான கரு நிலைக்க, ஈற்றுக்காலம் சிக்கலின்றி இருக்க, பசுந்தீவனம் உதவும்.

பசுந்தீவன வகைகள்

தானிய வகையைச் சேர்ந்த கோ.எப்.எஸ். 29 என்னும் தீவனச் சோளம், ஆப்பிரிக்க நெட்டை வகையைச் சேர்ந்த தீவன மக்காசோளம்.

புல் வகையைச் சேர்ந்த கோ.4, கோ.5 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியா புல், கொழுக்கட்டைப் புல்.

பயறு வகையைச் சேர்ந்த வேலிமசால், குதிரை மசால், தட்டைப்பயறு.

தீவனச் சோளம்

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் போதும். இடைவெளி ஒரு அடி இருக்க வேண்டும். விதைத்த 65-70 நாட்களில் அறுவடை செய்யலாம். பிறகு, 50 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலம். ஓராண்டில் 6-7 அறுவடை மூலம், 68 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.

குறிப்பு: இதன் இளம் பருவத்தில் ஹைட்ரஜன் சயனைடு என்னும் நச்சு மிகுதியாக இருப்பதால், பூத்த பிறகு தான் அறுவடை செய்து கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

தீவன மக்காச்சோளம்

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவை. இடைவெளி 30×15 செ.மீ. இருக்க வேண்டும். கதிர்கள் பால் கட்டும் நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். ஓராண்டில் 20 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.

குறிப்பு: தீவன மக்காச் சோளத்தை, தீவனத் தட்டைப் பயறுடன் 3:1 வீதம் பயிரிட்டால், சமச்சீர் தீவனத்தைப் பெறலாம்.

கம்பு நேப்பியர் புல்

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஏக்கருக்கு 14 ஆயிரம் கரணைகள் தேவை. 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். நட்டு 75-80 நாளில் முதல் அறுவடையைச் செய்யலாம்.

அடுத்து, 45 நாள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஓராண்டில் ஏழு அறுவடை மூலம், 150-160 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.

கினியாப் புல்

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஏக்கருக்கு 16 ஆயிரம் வேர்க் கரணைகள் அல்லது ஒரு கிலோ விதைகள் தேவை. 50×50 செ.மீ. இடைவெளி வேண்டும். 75-80 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம்.

அடுத்து, 45 நாள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஓராண்டில் 7 அறுவடை மூலம், 110-130 டன் பசுந்தீவனம் கிடைக்கும். தென்னந் தோப்பில் ஊடுபயிராக வளர்க்கலாம்.

கொழுக்கட்டைப் புல்

வடகிழக்குப் பருவ மழையின் போது விதைக்கலாம். ஏக்கருக்கு 16 ஆயிரம் வேர்க் கரணைகள் அல்லது 2.5-3.5 கிலோ விதைகள் தேவை. இடைவெளி 50×30 செ.மீ. இருக்க வேண்டும்.

முதல் அறுவடையை 75-80 நாட்களிலும், அடுத்து வளர்ச்சியைப் பொறுத்து, ஆண்டுக்கு 4-6 முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 16 டன் தீவனம் கிடைக்கும். அல்லது நேரடியாகக் கால்நடைகளை மேய விடலாம்.

குறிப்பு: புதிய விதைகளின் உறக்கக் காலம் 6-8 மாதமாகும். இதைத் தவிர்க்க, விதைப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன், ஒரு சத பொட்டாசிய நைட்ரேட் கரைசலில் ஊற வைக்க வேண்டும்.

வேலி மசால்

இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் பயிரிட ஜூன்-அக்டோபர் காலம் ஏற்றது. ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவை. 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.

முதல் அறுவடையை 90 நாட்களிலும், அடுத்து, 50 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 50 டன் தீவனம் கிடைக்கும்.

குறிப்பு: விதைகள் நன்றாக முளைக்க, கொதிநீரில் 3-4 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 80 சத முளைப்புக் கிடைக்கும்.

தட்டைப்பயறு

இறவையில் ஜூன் ஜூலையில் விதைக்கலாம். ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவை. இடைவெளி 30×15 செ.மீ. இருக்க வேண்டும். 50-55 நாட்களில், அதாவது, 50 சதம் பூக்கும் சமயத்தில் அறுவடை செய்யலாம். 12 டன் தீவனம் கிடைக்கும். பூச்சி நிர்வாகம் அவசியம்.

தர வேண்டிய தீவன அளவுகள்

பசுந்தீவனம்: ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 3 கிலோ வீதம் தர வேண்டும்.

உலர் தீவனம்: ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 1 கிலோ வீதம் தர வேண்டும்.

அடர் தீவனம்: ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 300 கிராம் வீதம் தர வேண்டும்.

தீவனப்பயிர் சாகுபடி மாதிரி

பத்து சென்ட் பசுந்தீவனம் மூலம், ஆண்டு முழுதும் ஒரு கறவை மாடு அல்லது ஐந்து ஆடுகளை வளர்க்கலாம். இதில், 4 சென்ட் நிலத்தில் கோ.4, 5 கம்பு நேப்பியர் புல்லையும், 3 சென்ட்டில் தீவனச் சோளத்தையும், அடுத்த 3 சென்ட்டில் வேலி மசாலையும் வளர்க்கலாம்.


பசுந்தீவன ARUN e1713421867320

மருத்துவர் இரா.அருண், முனைவர் ஜெ.திரவியம், வேளாண் அறிவியல் மையம், புழுதேரி, கரூர் – 621 313.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!