நாட்டுக் கோழிகளில் இனவிருத்திப் பராமரிப்பு!

கோழி hen

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல்.

புறக்கடையில் வளர்க்கும் கோழிகளின் இனவிருத்திக்கு என, தனிக் கவனம் எதையும் எடுப்பதில்லை. ஆனால், பண்ணை முறையில், அதிகளவில் நாட்டுக் கோழிகளை வளர்க்கும் போது, இனவிருத்தியில் சிறப்புக் கவனம் அளித்தால் தான், நிறையக் குஞ்சுகளைப் பெற முடியும்.

தாய்க்கோழி மற்றும் சேவல் தேர்வு

அதிகளவில் தரமான குஞ்சுகளைப் பெறுவதற்கு, திடமான சேவலும் பெட்டைக் கோழிகளும் அவசியம். பத்துக் கோழிகளுக்கு ஒரு சேவல் வீதம் வைத்துக் கொள்ளலாம். பல வண்ண இறக்கைகளை உடைய அசீல் இனச் சேவல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

நீண்ட கழுத்து, நீண்ட, நேரான, உறுதியான கால்கள், அகன்ற மார்புள்ள சேவல்கள் இனவிருத்திக்கு ஏற்றவை. இத்தகைய பண்புகளுள்ள சேவல்களை 7-9 மாத வயதில் தேர்வு செய்து, மூன்று வயது வரை இனவிருத்திக்குப் பயன்படுத்தலாம்.

இதைப் போலவே, 7 மாத வயதுள்ள அசீல் பெட்டைக் கோழிகளை, தாய்க் கோழிகளாகப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கோழிகளைத் தீவிர முறை, மிதத் தீவிர முறையில் வளர்க்கலாம்.

கொட்டகை அமைப்பு

தீவிர முறையில் கோழிகள் நாள் முழுதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைபட்டிருக்கும். இம்முறையில், ஒரு கோழிக்கு மூன்று சதுரடி இடம் தேவை. கொட்டகையின் அகலம் 20-22 அடி இருக்கலாம். நீளப்பகுதியை, நமது தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். உள்ளே பத்தடிக்கு ஒரு தடுப்பு இருந்தால், கோழிகளைக் கையாள எளிதாக இருக்கும்.

மிதத் தீவிர முறையில், பகலில் கோழிகளை மேய்ச்சலுக்குத் திறந்து விடலாம். கோழிகள் பாதுகாப்புக்குச் சுற்றுவேலி இருப்பது நல்லது. இந்த முறையில் கொட்டகைக்கு உள்ளும், புறமும் ஒரு கோழிக்கு 2 சதுரடி இடம் தேவை.

திறந்த வெளியில் பசுந்தீவனச் செடிகளை வளர்ப்பது, கோழிகள் மேய்வதற்கு ஏதுவாக இருக்கும். நாட்டுக் கோழிகளை, இயற்கையாக, செயற்கையாக இனவிருத்தி செய்யலாம்.

இனப்பெருக்க முறைகள்

இயற்கை முறை: இந்த முறை இனவிருத்திக்கு, சேவலையும் பெட்டைக் கோழிகளையும் 1:10 வீதம் ஒரே இடத்தில் வளர்க்க வேண்டும். சேவல்களை, 1-1.5 இடைவெளியில் மாற்றிக் கொள்வது நல்லது. பண்ணையில் பொரித்த சேவல் குஞ்சுகளை, தேவைக்கு ஏற்ப இனவிருத்திக்கு வைத்துக் கொண்டு, உபரி சேவல் குஞ்சுகளை விற்று விடலாம்.

செயற்கை முறை: இந்த முறை இனவிருத்திக்கு, சேவல்களைத் தனியே பராமரிக்க வேண்டும். விந்தைச் சேகரித்ததும் கோழிக்குள் செலுத்திவிட வேண்டும், சேமிக்கக் கூடாது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை, செயற்கை முறையில் கருவூட்ட வேண்டும்.

இம்முறையில் குறைந்த சேவல்களைக் கொண்டு, அதிகளவில் கருவுற்ற முட்டைகளைப் பெறலாம். ஆனால், இதைச் செயல்படுத்த, இத்துறையில் பயிற்சி பெற்றவர் அல்லது கால்நடை மருத்துவர் அவசியம்.

செயற்கை ஒளி பராமரிப்பு

பெட்டைக் கோழிகளுக்குத் தினமும் 16 மணி நேரம் வெளிச்சம் தேவை. இது, அவற்றின் முட்டையிடும் திறனைக் கூட்டும். எனவே, தினசரி 4 மணி நேரம் மின் விளக்குகள் மூலம் ஒளியைக் கொடுக்க வேண்டும்.

இதை இரண்டு முறைகளில் செயல்படுத்தலாம். காலையில் சூரிய உதயத்துக்கு முன் இரண்டு மணி நேரமும், மாலையில் சூரிய மறைவுக்குப் பிறகு இரண்டு மணி நேரமும் கொடுக்கலாம். அல்லது மாலையில் 6 முதல் 10 மணி வரை கொடுக்கலாம்.

பெட்டைக் கோழிகள் முட்டையிட ஏற்ற வசதியைப் பண்ணையில் ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் முட்டைகளை இட்டு விடும். ஆழ்கூள முறையில், கூளத்திலேயே முட்டைகளை இடுவதால், மிதிபட்டு உடைதல், கோழிகள் கொத்துவது மூலம் மிகுந்த சேதம் ஏற்படும்.

எனவே, பண்ணைக்கு உள்ளே அல்லது வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் மண்பானை, இரும்புச்சட்டி அல்லது கூடையில், மணல், தவிடு, அல்லது வைக்கோலைப் பரப்பி வைக்க வேண்டும்.

இவற்றைத் தினமும் குறைந்தது மூன்று முறை கண்காணித்து, முட்டைகளைச் சேகரிக்க வேண்டும். மிகச் சிறிய, மிகப் பெரிய மற்றும் உடைந்த முட்டைகளைக் கழித்துவிட வேண்டும்.

அடை முட்டைகளைச் சேமித்தல்

அடை முட்டைகளின் ஓட்டிலுள்ள அழுக்கை, சுத்தமான நீரில் பஞ்சு அல்லது துணியை நனைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். 0.5 சத டெட்டால் கரைசலையும் பயன்படுத்தலாம்.

நூறு கனஅடி அளவுள்ள, காற்றுப் புகாத பெட்டிக்குள் முட்டைகளை அடுக்கி 4 கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட் உப்புடன், 8 மில்லி நீர்த்த பார்மலின் கரைசலைச் சேர்த்துப் புகை மூட்டம் செய்ய வேண்டும்.

அதன்பின் ஒரு மண் பானையில் பாதியளவில் மணல் அல்லது உமியை நிரப்பி நீரைத் தெளித்து, முட்டைகளை அடுக்க வேண்டும். பானை வாயை ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும்.

முட்டைகள் நிறைய இருந்தால், சுத்தம் செய்யப்பட்ட அல்லது பார்மலின் தெளிக்கப்பட்ட முட்டை அட்டைகளில் அடுக்கி, குளிர்சாதனப் பெட்டியில், 65 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் ஒருவாரம் வரை சேமித்து வைக்கலாம்.

குஞ்சு பொரித்தல்

சிறிய பண்ணைகளில் அடைக் கோழிகள் மூலம் குஞ்சுகளைப் பொரிக்கலாம். இரும்புச்சட்டி அல்லது கூடையில் மணல் அல்லது உமியைப் பரப்பி ஒரு கோழிக்கு 10-15 முட்டைகளை அடை வைக்கலாம்.

ஓட்டுடன் கரு ஒட்டுவதைத் தவிர்க்க, கோழி, தன் கால்கள் மற்றும் இறக்கையால், முட்டைகளைத் திருப்பி விடும். இது, சரியாக நடக்காத நிலையில், கோழிகளை வளர்ப்போர், லேசாக, அதிர்வின்றி முட்டைகளை அவ்வப்போது திருப்பி வைக்க வேண்டும். அடைக் கோழிகளில் பேன் தொல்லையைத் தவிர்க்க, ஒரு சதவீத ப்யூடாக்ஸ் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

வணிக முறையில் செயல்படும் பண்ணைகளில் அதிகளவில் சேகரிக்கப்படும் முட்டைகள், இயந்திரங்கள் மூலம் பொரிக்கப்படும். குளிர்ப்பதனப் பெட்டியில் சேமிக்கப்பட்ட முட்டைகளை, பொரிக்கும் இயந்திரத்தில் வைப்பதற்கு முன், சாதாரண அறை வெப்ப நிலையில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

குஞ்சு பொரிக்கும் இயந்திரத்தில், முட்டை அடைப்பிரிவு. குஞ்சு பொரிக்கும் பிரிவு என, இரு பிரிவுகள் உள்ளன. முட்டை அடைப் பிரிவில், முட்டையின் அகன்ற முனை மேல்நோக்கி இருக்குமாறு 18 நாட்கள் வரை வைக்க வேண்டும்.

இப்பிரிவில் வெப்பம் 99.75 டிகிரி பாரன்ஹீட்டும், 60-65 சத ஈரப்பதமும் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, தானியங்கி முறையில் முட்டைகள் திருப்பி விடப்படும்.

அடை வைத்த முட்டைகளை ஏழாம் நாளும், 18-ஆம் நாளும் கரு வளர்ச்சிச் சோதனை செய்ய வேண்டும். கரு வளராத முட்டைகளை, குஞ்சுப் பொரிப்பானில் இருந்து அகற்றிவிட வேண்டும்.

கரு வளர்ச்சிச் சோதனை

6x6x9 அங்குல அளவுள்ள அட்டை அல்லது மரத்தால் செய்யப்பட்ட பெட்டியின் 6×6 அளவுள்ள ஒரு பக்கத்தில் முட்டையை நிற்க வைக்கும் அளவுக்கு வட்டத் துளையை போட்டுக்கொள்ள வேண்டும்.

பெட்டியின் மறுமுனை வழியாக மின்விளக்கு அல்லது டார்ச்லைட் மூலம் ஒளியைப் பாய்ச்சும் போது, மேலேயுள்ள முட்டையின் உட்புறம் தெளிவாகத் தெரியும். உட்புறத்தில் சிலந்தி வலை போன்ற அமைப்பில் சிவப்பு நிறத்தில் இரத்த நாளங்கள் தென்பட்டால், அது கரு வளர்ச்சியின் அறிகுறியாகும்.

இவ்விதம் சோதனை செய்த முட்டைகளை 19-ஆம் நாளில் குஞ்சு பொரிக்கும் பிரிவுக்கு மாற்ற வேண்டும். இங்கே முட்டைகளைக் கிடை மட்டத்தில் வைக்க வேண்டும்.

முட்டைகளைத் திருப்பி விடத தேவையில்லை. வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட், ஈரப்பதம் 65-70 சதம் இருக்கும். 21 அல்லது 22 நாளில் குஞ்சுகள் பொரிந்து வெளிவரும்.

தொடர்ந்து குஞ்சுகளைப் பெற, அடைப்பிரிவு மற்றும் குஞ்சு பொரிக்கும் பிரிவு 3:1 வீதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குஞ்சுகள் பொரிந்த பிறகு, குஞ்சு பொரிப்புப் பகுதியைப் புகை மூட்டம் மூலம் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

இதுவரை கூறியுள்ள இனப்பெருக்க உத்திகளைக் கடைப்பிடித்தால், நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிகக் குஞ்சுகளைப் பெறலாம்.


சு.முருகேசன், பா.பாலமுருகன், அ.செந்தில்குமார், உழவர் பயிற்சி மையம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!