தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னை

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை.

ந்தியா முழுவதும் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் தென்னை. எண்ணற்ற பயன்களைத் தருவதால், காமதேனு என்றும், கற்பக விருட்சம் என்றும் போற்றப்படுகிறது.

தென்னையை 100-க்கும் அதிகமான பூச்சிகள் தாக்கினாலும், காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன்வண்டு, கருந்தலைப்புழு, ஈரியோபைட் சிலந்தி ஆகிய பூச்சிகள் மட்டுமே தமிழகத்தில் மிகுந்த சேதத்தை உருவாக்கி வந்தன.

தற்போது, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, அதாவது, அலிரோடைகஸ் ரூஜியோபெர்குலேட்டஸ் என்னும் பூச்சி, தென்னையைப் பெருமளவில் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கண்டறியப்பட்ட இப்பூச்சி, இந்தியாவில் முதல் முறையாக 2016-இல் பொள்ளாச்சிப் பகுதியிலுள்ள தென்னை மரங்களில் காணப்பட்டது.

இவ்வாண்டில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டிப் பகுதியிலுள்ள இளவயது தென்னைகளில் அதிகளவில் தென்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பையும், இதைக் கட்டுப்படுத்தும் முறையையும் தென்னை விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம்.

வாழ்க்கைப் பருவம்

வயது முதிர்ந்த பெண் ஈக்கள், மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளை, சுருள் வடிவத்தில், ஓலைகளின் அடியில் இடும். இம்முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் இருக்கும். இவற்றிலிருந்து வெளிவரும் நகரும் தன்மையுள்ள இளங் குஞ்சுகள், இலைகளின் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி வளரும்.

நான்கு பருவங்களைக் கடந்து, கூட்டுப்புழுப் பருவத்தை அடைந்து முதிர்ந்த ஈக்களாக வெளிவரும். 20-30 நாட்களில் நன்கு வளர்ந்த ஈக்களாக மாறி, கூட்டம் கூட்டமாகத் தென்னை ஓலைகளின் அடியில் இருக்கும். மேலும், காற்றின் போக்கில் அடுத்தடுத்த தோட்டங்களில் பரவி, தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தாக்குதல் அறிகுறிகள்

இலைகளின் அடியில் சுருள் வடிவத்தில் முட்டைகள் இருக்கும். குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் தங்கியிருந்து சாற்றை உறிஞ்சும். இவற்றின் தாக்கம் அதிகமானால், இலைகளின் அடிப்பகுதி முழுதும் வெள்ளைப் பொடி போன்ற பொருளால் மூடப்படும்.

மேலும், இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவு, கீழேயுள்ள 10-12 ஓலைகளின் மேல் படியும். இதில், கேப்னோடியம் என்னும் கரும்பூசணம் படர்ந்து, ஒளிச் சேர்க்கையைப் பாதிக்கச் செய்யும்.

இந்தப் பூச்சிகளின் பாதிப்பால், இளம் பிஞ்சுகள் உதிரும்; காய்களில் கரும் பூசணம் படரும். இந்த ஈக்கள் அனைத்துத் தென்னை இரகங்களிலும் இருந்தாலும், சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, கென்தாளி குட்டை, மலேசியன் பச்சை குட்டை மற்றும் குட்டை நெட்டை வீரிய ஒட்டு இரகங்களைச் சேர்ந்த இளம் தென்னை மரங்களில் அதிகளவில் இருக்கும்.

மாற்றுப் பயிர்கள்

இப்பூச்சிகள் வாழையை அதிகளவிலும், வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி ஆகிய பயிர்களைக் மிகக் குறைந்தளவிலும் தாக்கும்.

வளர் சூழல்

ஆகஸ்ட் முதல் மே மாதம் வரையில் பருவமழைக் குறைவால் ஏற்பட்ட வறட்சி, தொடர் மழையின்மை, அதிக வெப்பம் மற்றும் காற்றின் குறைந்த ஈரப்பதத்தால், இப்பூச்சியினம் அதிகளவில் பெருகி உள்ளதாகத் தெரிகிறது.

மேலாண்மை

வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மை மஞ்சள் நிறத்துக்கு இருப்பதால், 3×1 அடி அளவுள்ள மஞ்சள் நெகிழித் தாள்களை ஒட்டும் பொறிகளாகத் தயாரித்து ஏக்கருக்குப் பத்து வீதம் எடுத்து, ஆறடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க விட்டுப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனிக்கலாம்.

நெடுஞ்சாலைகளில் பயன்படும் மஞ்சள் நிறமே இந்தப் பூச்சிகளைக் கவரக் கூடியது. பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, இலைகளில் தோன்றும் சத்துக் குறையைத் தீர்க்க, ஓலைகளின் அடியில் நன்கு படும்படி நீருடன் கலந்த நுண்ணுரக் கரைசலைத் தெளிக்க வேண்டும். நீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடிக்கும் போது, இந்தப் பூச்சிகளின் முட்டைகளும், குஞ்சுகளும் தூக்கி வீசப்பட்டு அழிக்கப்படும்.

இந்தப் பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உண்ணும் கிரைசோபிட் இரை விழுங்கிகளை, எக்டருக்கு 1,000 வீதம் விடலாம். இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவில் பரவினால், காக்ஸினெல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளில் இயற்கையாகவே உருவாகும்.

ஆகவே, இவற்றால் தாக்கப்பட்ட ஓலைகளைச் சிறியளவில் வெட்டி, பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களில் வைக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வேப்ப எண்ணைய் அல்லது 2 மில்லி அசாடிராக்டின் வீதம் கலந்த கலவையில், ஒட்டும் திரவத்தைச் சேர்த்து, ஓலைகளின் அடியில் தெளிக்கலாம்.

கரும் பூசணத்தை மாற்ற, ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் மைதா மாவு வீதம் கலந்த கரைசலை, ஓலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். அதிகமாகப் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தால், நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடும்.

எனவே, பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து, நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்த வேண்டும். எனவே, தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் எதிர் காலத்தில் தொடராமல் இருக்க, பூச்சி மருந்துகளை முற்றிலும் தவிர்ப்பதே சிறந்த வழியாகும்.

கடந்தாண்டு இப்பூச்சியின் தாக்குதல் தேனி மாவட்டத்தில் அனைத்து வகை தென்னை மரங்கள் மற்றும் ஜி9 பச்சை வாழை, செவ்வாழை ஆகியவற்றில் அதிகளவில் இருந்தது.

தேனி மாவட்ட விவசாயிகள் பூச்சி மருந்துகளை முற்றிலும் தவிர்த்து, ரூகோஸ் வெள்ளை ஈக்களின் இயற்கையான எதிரிகள் அதிகளவில் பெருக வழி வகுத்தனர். எனவே, இவ்வாண்டு 2019 மே மாதம் வரை, இந்தப் பூச்சிகளின் தாக்குதல் தேனி மாவட்டத்தில் எங்குமே காணப்படவில்லை.

எனவே, அனைத்துத் தென்னை விவசாயிகளும் இந்த முறைகளைப் பின்பற்றினால், ரூகோஸ் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும்.


தென்னை DR G SRINIVASAN e1643028913786

முனைவர் கோ.சீனிவாசன், முனைவர் மூ.சாந்தி முனைவர் ஜெ.ஜெயராஜ், பூச்சியியல் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!