சோளம் சாகுபடி!

சோளம்

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர்.

ந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளம் ஆகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும் இருப்பதால், நம் உடலுக்கு ஏற்ற உணவாக உள்ளது.

சோளம் அனைத்து மண் வகைகளில், தட்பவெப்ப நிலைகளில் நன்றாக வளரும். குறிப்பாக, வறண்ட பகுதிகளில், வளமற்ற நிலங்களில் பயிரிட ஏற்றது.

நமக்கான உணவாக, மக்காச்சோளத்துக்கு இணையாக, முட்டைக்கோழி மற்றும் கால்நடைத் தீவனமாகச் சோளம் பயன்படுகிறது. இதில், 0.13 சதம் லைசின், 0.13 சதம் மெத்தியோனின் என, அவசியமான புரத அமிலங்கள் இருப்பதால், சிறந்த பன்றி உணவாகவும் உள்ளது. சோளத்தில் டேனின் குறைவாக இருப்பதால், சிறந்த கால்நடை உணவாகக் கருதப்படுகிறது.

மக்களின் உணவு முறை மாற்றம் காரணமாக, சோளத்துக்குச் சரியான விலை கிடைக்காமல் போனதால், கடந்த சில ஆண்டுகளாகச் சோள சாகுபடிப் பரப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இருப்பினும், பெருகி வரும் மக்களின் உணவுத் தேவை, கால்நடைத் தீவனத் தேவை மற்றும் குறைந்து வரும் நீர்வளம், நிலப்பரப்புப் போன்றவற்றால், எதிர்காலத்தில் சோள சாகுபடி, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உயர் விளைச்சல் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள்

பாரம்பரியச் சோள இரகங்கள் குறைந்த மகசூலைத் தான் தரும். எனவே, மகசூலைக் கூட்டும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் மூலம் உயர் விளைச்சல் இரகங்கள் அவ்வப்போது வெளியிடப் படுகின்றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் சிறுதானியத் துறை, அதிக மகசூலைத் தரவல்ல, புதிய இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை வெளியிட்டு வருகிறது.
இவை பூச்சிகள், நோய்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி, உயர் வெப்பம் ஆகியவற்றைத் தாங்கி வளர்ந்து, அதிக மகசூலைத் தரும் வகையில் உள்ளன.

கோ.32 சோளம்: தானியம் மற்றும் தீவனத்துக்கு ஏற்ற இரகம். மானாவாரி மற்றும் இறவையில் தமிழகம் முழுவதும் பயிரிடலாம். தானியத்தில் 11.31- 14.66 சதம் புரதமும், 4.95-5.80 சதம் நார்ச்சத்தும் உள்ளன. குருத்து ஈ, தண்டுத் துளைப்பான் மற்றும் அடிச்சாம்பல் நோய், கதிர்ப்பூசண நோயை மிதமாகத் தாங்கி வளரும்.

மானாவாரியில் எக்டருக்கு 2,450 கிலோ சோளம், 6,500 கிலோ உலர் தட்டை கிடைக்கும். இறவையில் 2,900 கிலோ சோளம், 11,500 கிலோ உலர் தட்டை கிடைக்கும்.

கோ.(எஸ்)30: இது, ஏ.பி.கே. 1 மற்றும் டி.என்.எஸ். 291 இரகம் மூலம் உருவாக்கப்பட்டது. 100-105 நாட்களில் விளையும். மானாவாரியில் எக்டருக்கு 2,780 கிலோ சோளம், 6,220 கிலோ உலர் தட்டை கிடைக்கும். இறவையில் 3,360 கிலோ சோளம், 9,500 கிலோ உலர் தட்டை கிடைக்கும். தட்டை நன்கு செரிக்கும்.

குருத்து ஈ மற்றும் தண்டுத் துளைப்பானை மிதமாகத் தாங்கி வளரும். அடிச்சாம்பல் நோயைத் தாங்கி வளரும். தானியம் மற்றும் தீவனத்துக்கு ஏற்ற இரகம். சோளம் வெள்ளையாக இருக்கும். மானாவாரி மற்றும் இறவையில் தமிழகம் முழுவதும் பயிரிடலாம்.

கோ.5 ஒட்டுச்சோளம்: ஐ.சி.எஸ்.எ.51 மற்றும் டி.என்.எஸ்.30 இரகம் மூலம் உருவாக்கப்பட்ட ஒட்டுச்சோளம். 2011 இல் வெளியிடப்பட்டது. குறைந்த வயது. தானியம் மற்றும் தீவனத்துக்கு ஏற்ற இரகம். மானாவாரியில் எக்டருக்கு 2,800 கிலோ சோளம், 7,600 உலர் தட்டை கிடைக்கும்.

இறவையில் எக்டருக்கு 4,400 கிலோ சோளம், 10,500 கிலோ உலர் தட்டை கிடைக்கும். தட்டை நன்கு செரிக்கும். குருத்து ஈ மற்றும் கதிர்ப் பூசண நோயை மிதமாகத் தாங்கி வளரும். கதிர் சற்று விரிந்தும், சோளம் வெள்ளையாகவும் இருக்கும்.

சாகுபடி முறை

பருவம்: தமிழகத்தில் மானாவாரியாக ஜூன் ஜூலையில் வரும் ஆடிப்பட்டம் மற்றும் செப்டம்பர் அக்டோபரில் வரும் புரட்டாசிப் பட்டத்தில் விதைக்கலாம். இறைவைப் பயிராக, ஜனவரி பிப்ரவரியில் வரும் தைப்பட்டம் மற்றும் மார்ச் ஏப்ரலில் வரும் சித்திரைப் பட்டத்தில் விதைக்கலாம்.

நிலம் தயாரிப்பு: நிலத்தை நன்கு புழுதி புரள உழுது, களைகள் இல்லாமல் தயாரிக்க வேண்டும். சோளம் அகலப்பாத்தி முறையில் பயிரிடப்படும். அதற்குத் தகுந்தவாறு நிலத்தைச் சமன் செய்ய வேண்டும்.

பிறகு, 2×2 மீட்டர் பாத்திகளில், வரிசைக்கு வரிசை 45 செ.மீ., பயிருக்குப் பயிர் 15 செ,மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும், குச்சி மூலம் 3 செ,மீ. ஆழத்தில் கோடுகளைப் போட்டு விதைகளை விதைக்க வேண்டும்.

விதையைக் கடினப்படுத்தல்: இறவையில் விதைக்க, எக்டருக்கு 10 கிலோ விதையும், மானாவாரியில் விதைக்க 15 கிலோ விதையும் தேவைப்படும். மானாவாரியில் விதைக்க, ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, 2 சதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில்,

அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் வீதம் கலந்த கலவையில், 6 மணி நேரம் ஊற வைத்து, பிறகு 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இதனால், சோளப்பயிர் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைத் தரும்.

விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் வீதம் கலக்க வேண்டும்.

குருத்து ஈயைக் கட்டுப்படுத்த, குளோர் பைரிபாஸ் 20 ஈசி அல்லது பாசோலான் 35 ஈசி அல்லது மானோ குரோட்டோபாஸ் 36 WSC மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி வீதம் கலக்க வேண்டும்.

வளரும் பயிர்களுக்கு இயற்கையான சத்துக் கிடைக்க. ஒரு எக்டருக்குத் தேவையான விதையை 600 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் 600 கிராம் பாஸ்போ பேக்டீரியம் நுண்ணுயிர் உரங்களில் கலந்து விதைக்க வேண்டும்.

பாசனம்: விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, விதைத்த மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். பிறகு, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, 8-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தல் அவசியம்.

உரம்: இறவைப் பயிர்: இரசாயன உரங்களை மண்ணாய்வு முடிவுப்படி இட வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரைப்படி, எக்டருக்கு 90:45:45 கிலோ, தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.

தழைச்சத்தில் 50 சதத்தை அடியுரமாகவும், 25 சதத்தை 15 ஆம் நாளிலும், அடுத்த 25 சதத்தை 30 ஆம் நாளிலும் மேலுரமாக இட வேண்டும். அசோஸ் பயிரில்லத்தை அடியுரமாக இட்ட நிலத்தில், இட வேண்டிய தழைச்சத்தில் 75 சதத்தை மட்டும் அடியுரமாக இட்டால் போதும்.

மானாவாரிப் பயிர்: இரசாயன உரங்களை மண்ணாய்வு முடிவுப்படி இட வேண்டும். அல்லது பொதுப் பரிந்துரைப்படி, எக்டருக்கு 40:20:0 கிலோ தழை, மணிச்சத்தை இட வேண்டும். சாம்பல் சத்தை இடத் தேவையில்லை.

களையெடுப்பு: விதைத்த 30 ஆம் நாள் பயிர்களைக் கலைத்து ஒரு களையும், 45 ஆம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். சோளத்தில் ஊடுபயிராக, தட்டைப்பயறு அல்லது உளுந்தைப் பயிரிட்டால், 60 நாட்கள் வரை நிலம் களையின்றி இருக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சிகள்: குருத்து ஈ: அத்ரிகோனா சொக்கேட்டா என்னும் குருத்து ஈக்களின் இளம் புழுக்கள் தண்டைத் துளைத்து உண்பதால், நடுக்குருத்துக் காய்ந்து விடும். தாக்கப்பட்ட பயிர்களில் பக்கத் தூர்கள் நிறைய உண்டாகும்.

குருத்து ஈயின் முட்டை, அரிசியைப் போலத் தட்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும். முதிர்ந்த குருத்து ஈயானது, வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும். பயிருக்கொரு முட்டை இருத்தல் அல்லது 10 சதக் குருத்துகள் காய்ந்திருத்தல் பொருளாதாரச் சேத நிலையைக் குறிக்கும்.

கட்டுப்படுத்துதல்: பருவம் தப்பிப் பயிரிட்டால் குருத்து ஈயின் தாக்கம் மிகும். எனவே, பருவத்தில் பயிரிட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடா குளோபிரிட் 70 WS வீதம் எடுத்து, விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தயாரிப்பான, குறைந்த விலை மீன் இறைச்சிப் பொறியை, எக்டருக்கு 12 வீதம் வைக்கலாம். முப்பது நாள் பயிர் வரை இது நிலத்தில் இருக்க வேண்டும்.

எக்டருக்கு, 500 மில்லி வீதம் மீதைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 500 மில்லி டைமித்தோயேட் 30 இ.சி. அல்லது 5 சத வேப்பங் கொட்டைச் சாறு கரைசலைத் தெளிக்கலாம்.

தண்டுத் துளைப்பான்: கைலோ பார்டெலஸ் என்னும் இது தாக்கினால், நடுக்குருத்து வதங்கிக் காய்ந்து விடும். நடுத்தண்டில் துளைகள் இருக்கும். வளரும் பயிரில் வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துளைகள் இருக்கும்.

இதன் முட்டைகள், செதில் செதிலாக இலையின் அடியில் இருக்கும். பழுப்புநிறத் தலையைக் கொண்ட இப்புழுவின் உடலில் கரும் புள்ளிகள் இருக்கும். தாய் அந்துப்பூச்சி பழுப்பாக இருக்கும். 10 சத நடுக் குருத்துகள் காய்ந்திருப்பது பொருளாதாரச் சேத நிலையைக் குறிக்கும்.

கட்டுப்படுத்துதல்: அவரை அல்லது தட்டைப்பயறை 4:1 வீதம் ஊடுபயிராக விதைக்கலாம். விளக்குப் பொறியை வைத்து, தண்டுத் துளைப்பான், தானிய ஈ மற்றும் கதிர்ப்புழு ஆகியவற்றின் தாய் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம்.

எக்டருக்கு 15 கிலோ குயினால்பாஸ் 5 சதக் குருணை அல்லது 10 கிலோ பாசலோன் 4 சதத் தூள் அல்லது 5 கிலோ பெந்தியேட் 2 சதத் தூளை, 50 கிலோ மணலில் கலந்து குருத்துகளில் இடலாம்.

கதிர்நாவாய்ப் பூச்சி: இது, காலோகொரிஸ் அங்கு ஸ்ட்டேட்டஸ் எனப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், வளர்ந்த பூச்சிகள், பால் பிடிக்கும் நிலையிலுள்ள கதிர்களைத் தாக்கிச் சேதப்படுத்தும்.

எனவே, கதிர்களில் மணிகள் இருக்காது. கதிரைத் தட்டினால், குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும் ஓடுவதைக் காணலாம். 10 சதக் கதிர்களில் இப்பூச்சிகள் இருப்பது, பொருளாதாரச் சேத நிலையைக் குறிக்கும்.

கட்டுப்படுத்துதல்: விளக்குப் பொறியை வைத்து, தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். சோளத்தை முடிந்த வரையில் குறுகிய காலத்தில் விதைத்துச் சமநிலையில் பூக்க வைத்தால், சோளக்கதிர் ஈ மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சிப் பெருக்கத்தைத் தடுக்கலாம்.

கதிர் வந்த மூன்று மற்றும் 18 ஆம் நாளில், எக்டருக்கு 25 கிலோ பாசலோன் 4 சதத் தூள் அல்லது 5 சத வேப்பங் கொட்டைச் சாறு அல்லது 1 சத அசாடி ராக்டினைத் தெளிக்கலாம்.

நோய்கள்

கதிர்ப்பூசண நோய்: ஆஸ்பெரி ஜில்லஸ் நைஜர், ஆஸ்பெரி ஜில்லஸ் ஒரைசே, கர்வுலேரியா லுனேட்டா, ஹெல்மிந்தோஸ் போரியம், டெட்ராமீரா, ரைசோபஸ் நைக்கரிகன்ஸ், புசேரியம் மொனிலி பார்மே, ஆல்டெர் நேரியா போன்ற பூசணங்களால் இந்நோய் ஏற்படும். மழைக் காலத்தில் விளையும் சோளத்தில் இது காணப்படும்.

அறிகுறிகள்: கதிர் வந்ததும் தாக்கத் தொடங்கி, நாளடைவில் கதிர் முழுவதும் பரவும். பல்வேறு நிறங்களில் பூசண வளர்ச்சி ஏற்படுவதால், கதிர்கள் தரமிழந்து வீணாகும். பால் பிடிக்கும் கதிர்களைத் தாக்கினால், அதிகளவில் இழப்பு ஏற்படும். தானியம் முற்றிய நிலையில் தோன்றினால், பெரிதாகப் பாதிப்பு ஏற்படாது.

இந்நோயால், தானியங்கள் கெட்டு விடுதல், முளைப்புத் திறன் குறைதல், விலை அல்லது தரம் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்படும். அத்துடன், அப்ளோடாக்சின் என்னும் நஞ்சு தோன்றுவதால், இதை உண்ணும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குக் கெடுதல் ஏற்படும்.

கட்டுப்படுத்துதல்: இந்நோய் தாக்கிய கதிர்களின் விதைகளை விதைக்கக் கூடாது. முளைப்புத் திறன் குறைவதைத் தடுக்க, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

அடிக்கடி மழை தூறும் போதும், குளிர் காலத்திலும், எக்டருக்கு ஒரு கிலோ மேங்கோசெப் அல்லது ஒரு கிலோ கேப்டானைத் தெளிக்கலாம். விதைகளை நன்கு காய வைத்துச் சேமித்தால், தானியத்தைப் பூசணங்கள் தாக்காமால் பாதுகாக்கலாம். முளைப்புத் திறன் குறைவதையும் தடுக்கலாம்.

தானியக் கரிப்பூட்டை: ஸ்பேசிலோதீக்கா சொர்கி எனப்படும் இந்நோயால், தனித் தனியாக இருக்கும் தானிய மணிகள், பூசண உருண்டைகளாக மாறி விடும். இந்த உருண்டைகளை மெல்லிய தோல் மூடியிருக்கும்.

கதிரின் ஒரு பகுதி அல்லது முழுக் கதிரும் பூசண உருண்டையாக மாறியிருக்கும். மறுதாம்புப் பயிரில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: பாதிக்கப்பட்ட கதிர்களைச் சேகரித்து, துணிப்பையில் இட்டு வெந்நீரில் முக்கி வைத்துப் பூசணத்தை அழிக்கலாம். பயிரை, மறுதாம்புக்கு விடக்கூடாது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பாக்சின் அல்லது 4 கிராம் விட்டா வேக்ஸ் வீதம் கலந்து விதைக்க வேண்டும்.

அடிச்சாம்பல் நோய்: பெரனோஸ் கிளிரோஸ்போரா சொர்கை என்னும் இந்நோயால், இலைகளின் அடியில் வெண்பூசணம் வளர்வதால், இலைகள் வெளுத்துக் காய்ந்து விடும். நரம்புகளின் ஊடே இலைகள் கிழிந்து நாரைப் போலத் தொங்கும். ஈரப்பதம் மிகுந்த சூழலில் இந்நோய் விரைவாகப் பரவும்.

கட்டுப்படுத்துதல்: பாதிக்கப்பட்ட பயிரை உடனே அகற்ற வேண்டும். பயறு அல்லது எண்ணெய் வித்துப் பயிர்களை, சுழற்சி முறையில் பயிரிடலாம்.

ஒரு கிலோ விதைக்கு 6 கிராம் வீதம் மெட்டாலக்சில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். இதைத் தொடர்ந்து, எக்டருக்கு 500 கிராம் மெட்டாலக்சில் அல்லது ஒரு கிலோ மெட்டாலக்சில் + மேன்கோசெப் வீதம் தெளிக்கலாம்.

துருநோய்: பக்னீசியா பர்பூரியா என்னும் இந்நோயால், இலைகளின் மேல் சொரசொரயான பழுப்புப் புள்ளிகள் தோன்றும். நோய் முற்றிய நிலையில், இலைகள் முழுவதும் பழுப்புப் புள்ளிகள் தோன்றுவதால், இலைகள் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்துதல்: எக்டருக்கு 2.5 கிலோ கரையும் கந்தகம் அல்லது ஒரு கிலோ மேங்கோசெப் வீதம் தெளிக்க வேண்டும். பத்து நாள் இடைவெளியில் இந்த மருந்தை மீண்டும் தெளிக்க வேண்டும். நோய் வந்ததும், எக்டருக்கு 500 கிராம் ஆக்ஸி கார்பாக்சின் அல்லது 1,250 கிராம் மேங்கோசெப் வீதம் தெளிக்க வேண்டும்.

ஆன்தராக்நோஸ் மற்றும் சிவப்பழுகல் நோய்: கொலிட்டோ டிரைக்கம் கிராமினிகோலா என்னும் சிவப்பழுகல் நோயால் பாதிக்கப்பட்ட இலைகளின் மேல் பரப்பில் தோன்றும் புள்ளிகள் இலை முழவதும் பரவுவதால், இலை காய்ந்து விடும். இலை நரம்புகளில் சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் நீள் உருளை வடிவில் தோன்றும் புள்ளிகளில், கறுப்பு நிறத்தில் பூசண விதைகள் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கேப்டான் அல்லது திரம் வீதம் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். எக்டருக்கு ஒரு கிலோ மேங்கோசெப் வீதம் தெளிக்கலாம்.

அறுவடை

இப்படி, பாதுகாத்து வளர்த்து, நன்கு முற்றிக் காய்ந்த கதிர்களை அறுவடை செய்து, களத்தில் அடித்து மணிகளைப் பிரித்து, சுத்தம் செய்து சேமிக்க வேண்டும்.

பயன்கள்

சோளத்தட்டை தீவனமாகவும், சோளம் உணவாகவும் பயன்படுகின்றன. அரிசியை விட சோளம் சத்துள்ளதாகக் கருதப்படுகிறது. சோளத்தில் உள்ள அதிக நார்ச்சத்து, இதயநோய், இரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு வருவதைக் குறைக்கும்.

சோளத்தில், ரொட்டி, தோசை, களி, சேமியா, சோறு, பொரி மற்றும் அடுமனைப் பொருள்களைச் செய்யலாம். இப்போது, உடனடி சோள உணவுகள் மற்றும் எளிதில் சமைக்க உகந்த அரிசி கிடைப்பதால், சோளப் பயன்பாடு நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.


சோளம் ANANDHI 1

முனைவர் கி.ஆனந்தி, முனைவர் அ.நிர்மலாகுமாரி, முனைவர் கு.சத்தியா, முனைவர் மா.இராஜேஷ், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!