கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

கோடை நோய் hen e1617120608583

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014

புறக்கடைக் கோழி வளர்ப்பு சிறு, குறு விவசாயத்தில் ஒரு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், நிலம் இல்லாத கிராமப்புற மக்களுக்கும் புறக்கடைக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. அதனால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏழைப் பெண்களுக்குக் கோழிகள் வழங்கப்படுகின்றன. நாட்டுக் கோழிகளின் விலையும் அதிகரித்து வருவதால், கோழி வளர்ப்பு, கிராமப்புற ஏழைகளின் பொருளாதாரத்தைக் கணிசமாக உயர்த்தும். இருந்தாலும் கோழிகள் கோடைக்காலத்தில் இறந்து விடுவதால் இந்த மக்களிடையே ஆர்வம் குறையத் தொடங்கியுள்ளது.

கிராமப்புற மக்கள் பல்வேறு வேலைகளுக்கு இடையே, நோயுற்ற கோழிகளைச் சிகிச்சைக்கோ தடுப்பூசியைப் போடுவதற்கோ, கால்நடை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வது சிரமமாக உள்ளது. எனவே, கோடையில் தாக்கும் நுண்ணுயிரி, நச்சுயிரி நோய்களான கோழிக் கழிச்சல், கோழியம்மை, கோழிக் காலரா ஆகிய நோய்களில் இருந்து கோழிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எளிய, வீட்டு மருத்துவக் குறிப்புகளைக் காணலாம்.

மஞ்சள்: மஞ்சள் ஒரு முக்கிய கிருமிநாசினி. மேலும், கோழிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டக் கூடியது. கோழிகள் குடிக்கும் நீரிலோ தானியத்திலோ மஞ்சள் தூளைக் கலந்து வைக்கலாம். அல்லது மஞ்சள் கலந்த தானியத்தைக் கொடுக்கலாம். 10 கிராம் மஞ்சள் தூள் 20 கோழிகளுக்குப் போதுமானது.

வெங்காயம்: வெப்பத்தைக் குறைக்கவல்லது. மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாகத் தூண்டும். வெங்காயத்தைச் சிறிய துண்டுகளாக அரிந்து கோழிகளுக்கு வழங்கலாம். கோழிகள் தாமாகவே வெங்காயத்தைக் கொத்தித் தின்னும். வெங்காயத்தை மோரில் நனைத்தும் கொடுக்கலாம். மோரில் உள்ள நல்ல நுண்ணுயிரிகள் கோழிகளின் உண்ணும் திறனை அதிகரிக்கும். ஒரு பெரிய வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிப் பத்துக் கோழிகளுக்கு வழங்கலாம்.

பூண்டு: பூண்டு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் மூலிகை. பூண்டுப் பற்களைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக அரிந்து கொடுக்கலாம். நன்றாக நசுக்கியும் கோழிகளுக்குக் கொடுக்கலாம். கோழிகள் பூண்டுப் பற்களைத் தாமாகவே கொத்தித் தின்னும் தன்மை கொண்டவை.

குளிர்ந்த நீர்: கோழிகள் குடிப்பதற்குப் போதுமான அளவு குளிர்ந்த நீரைத் தொடர்ந்து வழங்க வேண்டும். கோழித் தீவனத்தை நீரில் ஊற வைத்தும் கொடுக்கலாம். கோழிகள் உறங்கும் இடத்தில் ஈரமான கோணிப் பைகளைப் போட வேண்டும். மேலும், தரையில் குளிர்ந்த நீரைத் தெளிக்கலாம். இவற்றைப் போன்ற எளிய பராமரிப்பு முறைகளின் மூலம் கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காத்துக்கொள்ள முடியும்.

வேப்ப இலைகள் மற்றும் வேப்பம் பழங்கள்: வேப்பிலை குளிர்ச்சி மிக்கது. எனவே, வேப்ப இலைகளை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடிநீராகக் கோழிகளுக்கு வழங்காலம், மேலும், வேப்பம் பழங்களையும் கோழிகளுக்குக் கொடுப்பதன் மூலம், கோடையில் கோழிகளின் உடல் வெப்பத்தைக் குறைத்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யலாம். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. வேப்பிலை நீரைக் கோழிகள் தங்கும் இடங்களில் தெளிப்பதன் மூலம் நோய்த் தொற்றைத் தவிர்க்க முடியும்.


கோடை நோய் DR.G.KALAISELVI e1616350379131

மரு. கோ.கலைச்செல்வி,

மரு. எம்.மலர்மதி, மரு. எம்.வித்யா, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!