கொய்யா இலைத் தேநீர்

கொய்யா

கொய்யாப் பழத்தின் நன்மைகளை நமக்குத் தெரியும். முக்கிய உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இந்தப் பழத்தில் உள்ளன. ஆனால், கொய்யா இலையும் மருத்துவப் பயனுள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

கொய்யா இலைத் தேநீர், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். கொய்யா இலைகளைக் கொண்டு சுவையான தேநீரைத் தயாரிக்கலாம்.

தயாரிக்கும் முறை

கொய்யா இலைத் தேநீரை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம். முதலாவது, பச்சை இலைகளைப் பறித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் அல்லது ஏலக்காயைச் சேர்த்துப் பருகலாம்.

இரண்டாவது, காய்ந்த இலைகள் மூலம் தயாரிப்பது. கொய்யா இலைகளைப் பறித்து நன்கு கழுவ வேண்டும். பிறகு, இவற்றை வெய்யிலில், நிழலில் அல்லது வெப்பக் காற்று அடுப்பு மூலம் உலர வைக்க வேண்டும்.

பிறகு, இந்த இலைகளை அரைத்து வெந்நீரில் சேர்த்துப் பருகலாம். நூறு மில்லி வெந்நீரில் 1.75 கிராம் கொய்யா இலைத்தூள், 10 கிராம் சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், சுவையைக் கூட்ட, துளசி, புதினா, இஞ்சி அல்லது ஏலக்காயைச் சேர்க்கலாம்.

மருத்துவக் குணங்கள்

கொய்யா இலை இரத்தப் போக்கைத் தடுக்கும்; மலச்சிக்கலைப் போக்கும்; வாந்தியைத் தடுக்கும். வாய்ப்புண், தொண்டைப் புண், பல்வலி, ஈறு பிரச்னைகள், செரிமானப் பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும்.

இப்போது அதிகமாகப் பரவி வரும் நீரழிவு நோயையும் கட்டுப்படுத்தும். உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். கொய்யா இலையை அரைத்துத் தடவினால், புண்கள் விரைவில் ஆற்றும்.

மேலும், கொய்யா இலையிலுள்ள பாலிஃபீனால்கள், கரோட்டி னாய்டுகள், பிளேவோ னாய்டுகள், டானின்கள், பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்க உதவும். எனவே, எளிதாகக் கிடைக்கும் கொய்யா இலைகளை அவ்வப்போது பறித்து, தேநீராகத் தயாரித்துப் பருகி வந்தால் நலமாக வாழலாம்.


முனைவர் சி.சிவானந்த், முனைவர் செ.ஸ்ரீதரன், ஜே.எஸ்.ஏ.வேளாண்மைக் கல்லூரி, பொடையூர், கடலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!