கால்நடைகளுக்குத் தாதுப்புகளின் அவசியம்!

கால்நடை kaalnadai

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, உற்பத்தி, இனப்பெருக்கம் போன்றவற்றுக்கு, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு மற்றும் உயிர்ச் சத்துகள் தேவைப்படுவதைப் போல, தாதுப்புகளும் அவசியம்.

இந்தத் தாதுப்புகளை, மிகுதியாகத் தேவைப்படுபவை, குறைவாகத் தேவைப்படுபவை என இருவகைப் படுத்தலாம். இவற்றில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம் ஆகியவை அதிகமாகத் தேவைப்படுவதால், இவை பேரூட்டத் தாதுகள் எனப்படும்.

இரும்பு, தாமிரம், கோபால்ட், மாங்கனீசு, துத்தநாகம், அயோடின், செலீனியம், மாலிப்டினம் ஆகியன மிகக் குறைவாகத் தேவைப்படுவதால், இவை நுண்ணூட்டத் தாதுகள் எனப்படும். தாதுப்புக் குறையுள்ள மண்ணில் விளையும் பசுந்தீவனம் மற்றும் தீவனத் தானியங்களில் தாதுப்புக் குறை ஏற்படும்.

கால்நடைகளுக்கு அளிக்கும் சத்துகளை, எரிசக்தி, புரதம், கொழுப்பு, தாதுப்பு, குடிநீர் எனவும் வகைப் படுத்தலாம். இவற்றில் எரிசக்தியான மாவுச்சத்து, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் மிகுந்துள்ளது.

புரதம், பயறுவகைத் தீவனங்களான, கடலை, காராமணி, அவரை, உளுந்து, வேலிமசால் மற்றும் அடர் தீவனம் மூலம் கிடைக்கிறது. கொழுப்பு, அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் மூலம் கிடைக்கிறது. உயிர்ச் சத்துகள், பசுந்தீவனம் மூலம் கிடைக்கின்றன.

பற்றாக்குறை ஏற்பட்டால் அடர் தீவனத்தில், உயிர்ச்சத்து மருந்துக் கலவையைச் சேர்த்து, தயாரித்துக் கொள்ளலாம்.

உடலியக்கத்தில் தாதுப்புகளின் பங்கு

தசை வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்துக்குத் தேவை. ரோமம், கால் குளம்புகள் மற்றும் கொம்பு வளர்ச்சிக்குத் தேவை. தீவனப் பொருள்களை உண்ணவும், அவை செரிக்கவும் தேவை.

தசைகளில் மற்றும் உடலின் இரசாயன நீர்களில், கார அமிலத் தன்மையை நிலை நிறுத்தத் தேவை. நொதிநீர் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் உற்பத்திக்கு அவசியம். நிணநீர் மற்றும் இரத்தத்தின் நடுநிலைத் தன்மையைக் காப்பதற்கு அவசியம். இரத்த உறைவதற்குத் தேவை. சினைப்பருவச் சுழற்சிக்கும் விந்து உற்பத்திக்கும் தாதுப்புகள் தேவை.

தாதுப்புக் குறையால் ஏற்படும் சிக்கல்கள்

கால்சியம் என்னும் சுண்ணாம்புக் குறைந்தால், ஈன முடியாமை, நஞ்சுக் கொடி தங்குதல், கருப்பைப் பிதுக்கம், பால் காய்ச்சல் போன்றவை ஏற்படும். கருப்பை சுருங்கத் தாமதமாகும்.

பாஸ்பரஸ் குறைந்தால், மலட்டுத் தன்மை, பசியின்மை, கண்டதை உண்ணுதல் போன்றவை நிகழும். துத்தநாகம், செங்கந்தகம், மங்கனம், மென்வெள்ளி ஆகியன குறைந்தால், மலட்டுத் தன்மை, வளர்ச்சிக் குறை, எதிர்ப்புச்சக்திக் குறை, கருச்சிதைவு, எடை குறைந்த கன்று பிறத்தல் ஆகியன ஏற்படும்.

இரும்பு, தாமிரம் ஆகியன குறைந்தால், பசியின்மை, இரத்தச்சோகை, நோயெதிர்ப்புச் சக்திக்குறை போன்றவை உண்டாகும். மெக்னீசியம் குறைந்தால், விறைப்பு நோய், வலிப்பு நோய் ஏற்படும். சோடியம் குறைந்தால், பசியின்மை, மண்ணை நக்குதல் ஏற்படும்.

தாதுப்புக் குறையின் அறிகுறிகள்

சினைக்காலம் முடியும் வரை, குட்டிகளைத் தாங்கும் சக்தி குறைவதால், சினையாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். பெட்டை ஆடுகள் சீரான இடைவெளியில் சினைக்கு வருவதில் மற்றும் சினைத் தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.

குட்டிகள், கொட்டகை மண்ணையும் சுவரையும் நக்கும். உடல் வளர்ச்சிப் பாதிப்பதால் ஆடுகளின் எடை குறைவாக இருக்கும். ஈன்ற ஆடுகளில் பாலுற்பத்திக் குறையும். வலிமையற்ற குட்டிகள் பிறக்கும். குட்டிகள் இறந்த நிலையில் பிறக்கும்.

கறவை மாடுகளில் மலட்டுத் தன்மை ஏற்படும். மாடுகள் பருவத்துக்கு வராதிருத்தல், காலங்கடந்து பருவத்துக்கு வருதல், சீரற்ற பருவம், ஊமைப் பருவம், சூலகத்தில் நீர்க்கட்டி, சினைப் பிடிக்கும் திறன் குறைதல், கருச்சிதைவு, ஈனலில் சிக்கல், ஈன்ற பிறகு கருப்பைச் சுருங்க தாமதமாதல், நஞ்சுக்கொடி தங்குதல், கருப்பைப் பிதுக்கம் ஆகியன ஏற்படும்.

அளவும் முறைகளும்

தாதுப்புகள் உடலில் அதிகளவில் சேமிக்கப் படுவதில்லை என்பதால், சீரான அளவில் தாதுப்புகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும். இவற்றை அடர் தீவனத்தில் கலந்து அளிப்பதே சிறந்தது.

சில தாதுப்புகள் அதிகமானால் மற்ற தாதுப்புகளின் ஆற்றல் குறையும். சான்றாக, தாதுப்புக் கலவையில் சுண்ணாம்பு அதிகமானால், குடலில் பாஸ்பரஸ் உட்கரிக்கும் அளவு குறையும். எனவே, கால்நடைகளின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, தாதுப்புகளை அளிக்க வேண்டும்.

இளங்குட்டிகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதால், அனைத்துத் தாதுப்புகள் கலந்த தாதுப்புக் கட்டிகளை, போதியளவில் கொட்டகையில் தொங்கவிட வேண்டும்.

குட்டிகள் இவற்றை நக்கி, தங்களுக்குத் தேவையான தாதுப்புகளைப் பெற்றுக் கொள்ளும். சினைக்குத் தயாராகும் காலத்தில் இருந்து, சினைத்தரித்து ஈன்று பால் கொடுக்கும் வரையில், தாதுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

கால்நடைகளுக்குச் சரியான அளவில், உரிய காலத்தில் தாதுப்புகளை அளித்தால், தாதுப்புக்குறை நோய்கள் தவிர்க்கப்படும். ஒட்டுண்ணிகளால் ஏற்படும் சிக்கல்கள் கட்டுப்படும். தீவனத்தில் உள்ள சத்துகள் நல்ல முறையில் பயன்படும். இனப்பெருக்கத் திறன் மேம்படும்.

கொடுக்க வேண்டிய அளவு

கன்று: 5 கிராம்

கிடேரி: 15-20 கிராம்

கறவைமாடு:30-40 கிராம்

சினைமாடு: 30-40 கிராம்

காளை: 30-40 கிராம்

எருது: 25-30 கிராம்

ஆடு: 15-20 கிராம்

கிடைக்குமிடம்

கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் தயாரிக்கும், தானுவாசு தாதுப்புக் கலவை, அனைத்து மாவட்டப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் உழவர் பயிற்சி நிலையங்களில் விற்பனைக்கு உள்ளது.


கால்நடை INIYAH

க.இனியா, ந.பாரதி, இரா.சக்திவடிவு, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!