கரும்பைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கரும்பை HEADING PIC 78276359fe5a53574bcfc3814ef32769

கரும்பை, இளம் குருத்துப் புழுக்கள், இடைக்கணுப் புழுக்கள், நுனிக் குருத்துப் புழுக்கள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், வெள்ளை அசுவினி, பைரில்லா இலைத்தத்துப் பூச்சிகள் என, பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

மிழகத்தில் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பை, இளம் குருத்துப் புழுக்கள், இடைக்கணுப் புழுக்கள், நுனிக் குருத்துப் புழுக்கள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், வெள்ளை அசுவினி, பைரில்லா இலைத்தத்துப் பூச்சிகள் என, பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.

இந்தப் பூச்சிகளால், கரும்பின் வளர்ச்சிக் குன்றிச் சர்க்கரை அளவு குறைகிறது. எனவே, கரும்பில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

இளம் குருத்துப் புழுக்கள்

இளம் பயிரை, முதல் மூன்று மாதங்கள் வரை தாக்கி, பெருத்த சேதத்தை விளைவிக்கும். இளந்தண்டுகள் தோகை சேரும் இடத்தில் துளைத்துச் சென்று சேதத்தை விளைவிப்பதால், நடுக்குருத்து காய்ந்து அழுகி விடும். அழுகிய இடத்திலிருந்து துர்நாற்றம் வீசும். அதிக வெப்பம், குறைந்த ஈரப்பதம் இருக்கும் போது, இவற்றின் தாக்குதல் மிகுதியாகும். பழுப்புத் தலை, உடலின் மேலும் பக்கவாட்டிலும் 5 கரு ஊதாக் கோடுகளுடன் புழுக்கள் இருக்கும்.

இடைக்கணுப் புழுக்கள்

கரும்பின் பின் வளர்ச்சிப் பருவத்தில் தோன்றி, அறுவடை வரையிலும் காணப்படும். குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் போது, தாக்குதல் தீவிரமாக இருக்கும். கரும்பின் இரண்டு கணுக்களுக்கு இடையில் துளைத்து, தண்டுக்குள் சென்று திசுக்களைக் குடைந்து தின்று சேதத்தை ஏற்படுத்துவதால் திசுப்பகுதி இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இந்தப் புழுக்கள் வெள்ளையாக, பழுப்புத் தலையுடன் இருக்கும்.

நுனிக்குருத்துப் புழுக்கள்

கரும்பின் பின் வளர்ச்சிப் பருவத்தில் தோன்றி, அறுவடை வரை சேதத்தை ஏற்படுத்தும். குருத்து இலையின் நடுநரம்பைத் துளைத்துச் சென்று தாக்குவதால் புதிதாக வெளிவரும் இலையின் நடுநரம்புக்கு இருபுறம் துளைகள் இருப்பதுடன் குருத்துக் காய்ந்து விடும். இதனால் நுனித்தண்டின் வளர்ச்சிப் பாதிப்பதால், மொட்டுகளில் சிம்புகள் வளர்ந்து பக்கக் கிளைகள் தோன்றும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

காய்ந்து போன குருத்துகளைப் பிடுங்கி அழித்துவிட வேண்டும். கரணைகளை நட்ட மூன்றாம் நாளில், கரணைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் காய்ந்த தோகைகளை 10-15 செ.மீ உயரம் பரப்பி, பூச்சிகள் முட்டையிடுவதை, புழுக்களின் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

நடவு முடிந்த ஒரு மாதத்துக்குப் பிறகும், அதைத் தொடர்ந்து இரண்டாம் மாதமும், மண்ணை அணைத்து, புழுக்கள் தண்டைத் துளைக்காமல் பாதுகாக்க வேண்டும்.

உளுந்து, பச்சைப்பயறு, தக்கைப்பூண்டு போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டு, புழுக்களின் தாக்கத்தில் இருந்து கரும்பைப் பாதுகாக்க வேண்டும். 150, 210 ஆகிய நாட்களில் காய்ந்த தோகைகளை உரித்து, புழு முட்டைகளையும், புழுக்கள் தண்டைத் துளைப்பதையும் தடுக்க வேண்டும்.

டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை 15 நாட்களுக்கு ஒருமுறை என, நான்காம் மாதத்தில் இருந்து பத்தாம் மாதம் வரை, ஏக்கருக்கு 6 சிசி வீதம் வெளியிட்டு இடைக்கணுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஏக்கருக்குப் பத்து இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழித்து, இடைக்கணுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும் போது, 5 சத வேப்பங் கொட்டைச் சாறு சரைசலைத் தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு, கார்போபியுரான் 3 சதக் குருணை 12 கிலோ அல்லது குளோர் பைரிபாஸ் 10 சதக் குருணை 12.5 கிலோ வீதம் எடுத்து, சம அளவு மணலில் கலந்து, நடுக்குருத்திலும் மண்ணிலும் இட வேண்டும்.

ஏக்கருக்கு, மோனோ குரோட்டோபாஸ் 400 மில்லி அல்லது குளோர் பைரிபாஸ் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 500 மில்லி வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்

வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள், மாவுப் பூச்சிகள், வெள்ளை அசுவினி, பைரில்லா இலைத்தத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தோகைகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறிக் காய்ந்து விடும்.

இவை சாற்றை மிகுதியாக உறிஞ்சி, தேன் போன்ற கழிவை மிகுதியாக வெளியிடும். இந்தக் கழிவில் வளரும் பூசணம், தோகையில் பிசிபிசுப்பான கரும் பூசணமாக மாறும். இதனால், ஒளிச்சேர்க்கை பாதிப்பதுடன், பயிரின் வளர்ச்சியும் குன்றுவதால், கரும்பில் சர்க்கரைச் சத்தும் குறைந்து விடும். வளர்ந்த கரும்புகள் தாக்கப்பட்டால், எடையை விட, சர்க்கரை இழப்பு மிகுதியாகும்.

வெண்பஞ்சு அசுவினி

கம்பளிப் போர்வையைப் போல, உடலில் அடர்ந்த வெண்பஞ்சு படர்ந்திருக்கும். இதனால், இப்பூச்சியை விவசாயிகள், வெண்மாவு படர்ந்த மாவுப்பூச்சிகள் எனத் தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பூச்சி தாக்காத நிலத்தில் இருந்து கரணைகளை எடுத்து நட வேண்டும். இரசாயன உரங்களையும் தழைச்சத்தையும் கூடுதலாக இடக்கூடாது. விளக்குப் பொறிகளை வைத்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

உயிரியல் முறையில் இரை விழுங்கி வண்டுகள் மற்றும் முட்டைப்புழு ஒட்டுண்ணியான எப்ரிகிரேனியா மெனோலூகாவைக் கொண்டு பைரில்லா தத்துப் பூச்சிகளை அழிக்க வேண்டும். அசுவினிகளை டைஃபாக்கள் விரைவாக உண்டு அழிக்கும். சிர்பிட் மற்றும் பொறி வண்டுகளும் அசுவினியை அழிக்கும்.

நிலத்தில் இரை விழுங்கிகள் இருக்கும் போது, பூச்சிக்கொல்லி மருந்தை அடிக்கக் கூடாது. தாக்குதலின் ஆரம்பத்தில் ஒரு லிட்டர் நீருக்கு மீன் எண்ணெய் ரெசின் சோப்பு 25 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி குளோர் பைரிபாஸ் அல்லது 2 கிராம் அசிபேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

வேரைத் தாக்கும் பூச்சிகள்

வேர்ப் புழுக்கள்: மண்ணின் அடியில் இருந்து கொண்டு வேர்களைக் கடித்துச் சேதம் விளைவிக்கும். அதிகமாகத் தாக்கப்பட்ட கரும்பை மெதுவாக இழுத்தாலே கையோடு வந்து விடும். இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த, கோடையில் ஆழமாக உழ வேண்டும். மண்ணில் ஈரத்தைக் கூட்ட வேண்டும்.

மண்ணில் ஈரம் குறைந்தால் வேர்ப்பகுதியில் புழுக்கள் தோன்றும். எனவே, பயிருக்குப் போதியளவில் பாசனம் கொடுக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் லின்டேன் 10 சதத் தூள் 5 கிலோ வீதம் எடுத்து, மணலில் கலந்து இட வேண்டும்.

கரையான்

நட்ட கரணைகளைத் தாக்கி அரிப்பதால், முளைப்புத் திறன் பாதிக்கும். உட்திசுக்களைச் சாப்பிட்டு விடுவதால், வளர்ந்த கரும்புக்குள் கரையான் மண் காணப்படும். 40-50 சதம் சேதத்தை உண்டாக்கும். மணற்சாரி நிலத்தில் கரையான்கள் மிகுதியாகத் தாக்கும்.

இவற்றைக் கட்டுப்படுத்த, நடவின் போது சாலில் நன்கு நீரைக் கட்ட வேண்டும். இமிடா குளோபிரிட் 0.1 சதம் அல்லது குளோர்பைரிபாஸ் 0.04 சதம் மருந்தில் கரணைகளை 5 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும். நட்ட பின் லின்டேன் தூளை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் மண்ணில் மற்றும் கரணைகளின் மேல் பரவலாகத் தூவ வேண்டும்.


முனைவர் க.விசயலட்சுமி, உதவிப் பேராசிரியர், இமயம் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, துறையூர், திருச்சி – 621 206.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!