கரும்பில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம்!

களை sugarcane white

ரும்புக்குக் கிடைக்க வேண்டிய சூரியவொளி, உரம் மற்றும் நீரை, களைகள் பங்கிடுவதால், கரும்பு மகசூல் 33 சதம் வரை குறைகிறது. இவ்வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் களைகளால் ஏற்படும் பொருளாதாரச் சேதம் சுமார் 1,980 கோடி ரூபாயாகும்.

இந்தக் களைகள், பூச்சி மற்றும் நோய்களின் வாழிடமாக அமைவதால், எளிதில் இவற்றின் தாக்குதல்களுக்குக் கரும்புப் பயிர் உள்ளாகிறது. இப்படி, பூச்சிகளால் 20 சதம், நோய்களால் 26 சதம், எலிகளால் 6 சதம் அளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

சில களைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் பொருள்கள், பயிரின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், இவற்றின் மகரந்தம் மூலம், மனிதர்களுக்கு ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள் வருகின்றன. அறுகு, கோரை, கண்டங்கத்திரி போன்றவை, நிலத்தின் மதிப்பை வெகுவாகக் குறைக்கின்றன.

கரும்பில் களைகள் பெருகக் காரணம்

சுமார் 80 செ.மீ. இடைவெளியில் கரும்பு பயிரிடப்படுகிறது. மேலும், பிற பயிர்களைக் காட்டிலும், பாசனமும் உரமும் இதற்குக் கூடுதலாகத் தரப்படுவதால், அவற்றைக் களைகளும் தாராளமாக எடுத்துக் கொள்கின்றன.

இத்துடன், நட்டு 30 நாட்கள் வரை, கரும்பின் முளைப்புப் பருவ வளர்ச்சி, மந்தமாக இருப்பதால், இடம், உணவு, நீர் மற்றும் வெய்யிலை, களைகள் மிகுதியாக எடுத்துக் கொண்டு வளர்கின்றன.

கரும்பில் தோன்றும் களைகள்

களைகளின் வெளிப்புற அமைப்பைக் கொண்டு, புல் வகை, கோரை வகை, அகன்ற இலையுள்ள பூண்டு வகை, கொடி வகை மற்றும் ஒட்டுண்ணி வகை என ஐந்தாகப் பிரிக்கலாம். இவற்றின் வாழ்நாளைப் பொறுத்து, ஒரு பருவ, இரு பருவ மற்றும் பல பருவ அல்லது நிரந்தரக் களைகள் எனவும் பிரிக்கலாம்.

ஒரு பருவக் களைகளின் ஆயுட்காலம் ஒரு மாதம் முதல் ஓராண்டு வரையாகும். மெல்லிய தண்டு மற்றும் வேர்களைக் கொண்ட இவ்வகைக் களைகள், விரைவாக வளர்ந்து அதிகமான விதைகளை உற்பத்தி செய்துவிட்டு மடிந்து விடும். ஆகவே, பூப்பதற்கு முன் இவற்றை அழிக்க வேண்டும்.

இரு பருவக் களைகள், முதல் பருவத்தில் நன்கு வளர்ந்து, இரண்டாம் பருவத்தில் விதைகளை உற்பத்தி செய்யும். இவற்றையும் பூக்கும் முன்பே அழிக்க வேண்டும்.

பல பருவ அல்லது நிரந்தரக் களைகளின் ஆயுட்காலம், ஓராண்டுக்கு மேலாகும். சிக்கலான சூழலிலும் நன்கு வளரும் இவை, வளர்ச்சி நிலை, பூக்கும் நிலை, காய்க்கும் நிலை, உறக்க நிலை என, நான்கு நிலைகளைக் கொண்டுள்ளன. விதை, தண்டு, வேர் மற்றும் கிழங்குகள் மூலம் பெருகும். ஆகவே, வளர்ச்சி நிலையிலேயே இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வகையில், புல்லினத்தைச் சேர்ந்த அறுகு, இஞ்சிப்புல், மயில் கொண்டைப் புல், காக்கைக்கால் புல்; அகன்ற இலைக் களைகளான, சாரணை, பருப்புக்கீரை, குப்பைக்கீரை, அம்மான் பச்சரிசி, கரிசலாங் கண்ணி, மேலாநல்லி, கீழாநெல்லி, புண்ணாக்குப் பூண்டு, மஞ்சக்கடுகு, காட்டு வெண்டை, கீரைகள்; கோரை வகைக் களையான கோரைக்கிழங்கு; ஒட்டுண்ணி இனமான சுடுமல்லி; கொடியினத்தைச் சேர்ந்த கோவைக்கொடி, தாலிக்கொடி, முசுமுசுக்கை போன்றவை, கரும்பில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அறுகும் கோரையும்

அறுகும் கோரையும் நிரந்தரக் களைகள் ஆகும். அறுகானது, விதை மற்றும் வேர்த்தண்டு மூலமும், கோரையானது, கிழங்கு மற்றும் விதைகள் மூலமும் பரவும். கோரைக் கிழங்கு நூலைப் போன்ற வேர்களால் இணைந்து வலையைப் போல் காணப்படும்.

புதிய கிழங்குகள் தாய்ச் செடியில் இருந்து நான்கே வாரங்களில் உற்பத்தியாகி விடும். கோரை விதைகளில் உயிர்ப்புத் தன்மை குறைவாக இருப்பதால், இவற்றின் மூலம் பரவுவது குறைவு. இக்களைகள் மிகுதியாக இருந்தால், 88 சதம் வரை கரும்பு விளைச்சல் குறையும் வாய்ப்புள்ளது.

கொடிவகைக் களைகள்

தாலிக்கொடி, கோவைக்கொடி, முசுமுசுக்கை, சித்தவரை போன்றவை, கரும்பை அதிகளவில் பாதிக்கின்றன. இவை, விதை, வேர்த்தண்டு மற்றும் கிழங்குகள் மூலம் பரவும். கரும்பு மூன்று மாதப் பயிராக இருக்கும் போது முளைக்கும் இக்களைகள், கரும்பில் பின்னிப் பிணைந்து வளர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுக்கும். இதனால், 20-25 சதம் மகசூல் பாதிக்கும்.

சுடுமல்லி

இது, ஒட்டுண்ணி வகைக் களையாகும். திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இக்களை, கரும்பு வேருக்குள் தனது வேரைச் செலுத்தி, கரும்புக்கான நீர் மற்றும் சத்துகளை எடுத்துக் கொள்வதால், கரும்பின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படும். இதை, பூப்பதற்கு முன்பே அழிக்க வேண்டும்.

களைகளால் பாதிக்கப்படும் கரும்புப் பருவம்

கரும்பில், முளைப்புப் பருவம் முடிய 25-30 நாட்களாகும். இக்காலத்தில் விரைந்து வளரும் களைகளின் ஆதிக்கம், கரும்பு நட்டதிலிருந்து 90 நாட்கள் வரை இருக்கும். பிறகு, கரும்பின் வளர்ச்சி அதிகமாகி விடுவதால், போதிய சூரியவொளியை இழக்கும் களைகள் பெருமளவில் கட்டுப்படும்.

களைக் கட்டுப்பாடு

ஆட்கள் மூலம்: இம்முறையில் களைக்கொத்தி மற்றும் மண்வெட்டி மூலம், கரும்பு வரிசை மற்றும் பார்களில் தோன்றும் களைகளை எளிதாக நீக்கலாம். ஆனால், செலவு அதிகமாகும். வேலையாட்கள் கிடைப்பதும் சிரமம். மேலும், பயிரின் முளைப்புக் காலத்தில் இம்முறையில் களையெடுப்பதால் முளைத்து வரும் பயிர்கள் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

உழவியல் முறை: கோடையுழவு மற்றும் கரும்புப் பார்களை அமைப்பதற்கு முன், சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். இதனால், நிலத்துக்குள் புதைந்துள்ள களை விதைகள் மற்றும் வேர்கள் மேலே வந்து வெய்யிலில் காய்ந்து முளைப்புத் திறனை இழக்கும்.

கரும்பு நடவுக்குப் பின், மணல் சார்ந்த நிலத்தில் 3-4 நாட்கள் கழித்தும், களிமண் நிலத்தில் 21 நாட்கள் கழித்தும், கரும்புப் பார்களின் மேல் சுமார் 10 செ.மீ. கனத்தில், ஒரே சீராக, காய்ந்த கரும்புத் தோகைகளைப் பரப்பிக் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கரையான், எலி, நரிகள் நிறைந்த பகுதிகளில் இதைத் தவிர்க்க வேண்டும்.

கரும்பு வரிசை இடைவெளியில், உளுந்து, பச்சைப்பயறு மற்றும் சோயா மொச்சையை ஊடுபயிராக இடலாம். ஊடுபயிர்கள் களைகளுடன் போட்டியிட்டு வளர்வதால், களைகள் வளர்வதற்கான இடம், நீர், சூரியவொளி மற்றும் சத்துகள் குறைந்து விடுவதால், களைகளின் ஆதிக்கம் வெகுவாகக் குறையும்.

தேவையான உரத்தை, சரியான அளவில், கரும்புத் தூர்களுக்கு அருகில், குழி முறையில் இட்டால், உரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும் கரும்பு நன்கு வளரும். களைகளின் வளர்ச்சிக் கட்டுப்படும்.

கரும்பையே தொடர்ந்து பயிரிடாமல், சுழற்சி முறையில் ஈராண்டுக்கு ஒருமுறை மாற்றுப் பயிரைப் பயிரிட்டால், நிரந்தரக் களைகளின் ஆதிக்கம் வெகுவாகக் குறையும். சேடை ஒட்டி நெல்லைப் பயிரிட்டால் கோரை, அறுகு போன்ற களைகள் வெகுவாகக் குறையும்.

மேலும், சுடுமல்லி போன்ற ஒட்டுண்ணிக் களைகள் உள்ள இடங்களில், சோயா மொச்சை, தட்டைப்பயறு, பருத்தி, மணிலா, உளுந்து, மிளகாய் போன்றவற்றைப் பயிரிட்டால், இக்களையின் ஆதிக்கம் குறையும். எனினும், இந்த உழவியல் முறைகள் மூலம் 15-25 சத அளவில் தான் களைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

இயந்திரக் கருவிகள்: நாட்டுக் கலப்பை, விக்டரி கலப்பை, ஜுனியர் கலப்பை, பவர் டில்லர் போன்றவற்றின் மூலம், குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பில் களைகளை நீக்கலாம்.

ஆனால், இம்முறையில், கரும்பு வரிசைகளில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த இயலாது. மேலும், அறுபது நாட்களுக்கு மேலான கரும்புக்குள் இக்கருவிகளைப் பயன்படுத்துவது சிரமம்.

களைக்கொல்லிகள்

கரும்பு நட்ட 25-30 நாட்களில், ஆட்கள் மூலம் களையெடுப்பது பரவலாக உள்ள வழக்கம். ஆனால், அதற்குள் களைகள் நன்கு வளர்ந்து விடும். எனவே, களைக் கொல்லியைத் தெளித்தால், களைகளை முளைக்க விடாமல் தடுக்கலாம்.

கரும்பு நடவின் போதே களைகளைக் கட்டுப்படுத்தி விடுவதால், போட்டியின்றி, பயிர்கள் நன்கு வளரும். வேலைக்கு ஆட்கள் கிடைக்காத இடங்களில், அதிகமாகக் கூலி கேட்கும் இடங்களில், களைக்கொல்லிப் பயன்பாடு சிக்கன வழியாகும்.

அட்ரசின் (அட்ரடாப்), ஆலக்லோர்(லேசோ), பென்டிமித்தலின் (ஸ்டோம்ப்), புளு குளோரலின்(பேசாலின்), மெட்ரிபூசின்(சென்கர்), ஆக்ஸிபுளோர்பென் (கோல்) போன்ற தேர்வுத் திறனுள்ள மற்றும் கிளைபோசேட் போன்ற தேர்வுத் திறனற்ற களைக்கொல்லிகள் பயனில் உள்ளன.

ஒருங்கிணைந்த களை நிர்வாகம்: இதுவரை கூறிய முறைகளில் சிலவகை நன்மைகள் இருந்தாலும், பலவகை இடர்களும் உள்ளன. அதனால், கரும்பு சாகுபடி நிலத்தில் முளைக்கும் களைகளுக்கு ஏற்ற, கரும்பின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ற மற்றும் முன் சொன்ன களைக் கட்டுப்பாட்டு முறைகளுள், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற முறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த களை நிர்வாகமே சிறந்தது.

தனிப்பயிர்: கரும்பைத் தனியாகப் பயிரிடும் போது, அகன்ற இலை அல்லது பூண்டுக் களைகள் நிறைந்த நிலத்தில், அட்ரடாப் களைக் கொல்லியை, எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து, 650 லிட்டர் நீரில் கலந்து, கரும்பு நடவு முடிந்து 3-4 நாட்களில், கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பிறகு, 60 நாள் கழித்து ஆட்கள் மூலம் களைகளை அகற்ற வேண்டும்.

கோரையும் அறுகும் நிறைந்த இடங்களில் அட்ரடாப் மருந்தை, முன்னே கூறியுள்ள அளவில் 3-4 நாட்களில் தெளித்து விட்டு, 45 ஆம் நாள் ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி ரவுண்டப் களைக்கொல்லி, 10 கிராம் அமோனியம் சல்பேட் உரம் வீதம் கலந்து, கோரையிலும் அறுகிலும் மட்டும் படுமாறு தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானில் மறைப்பானைப் பொருத்தி, பயிரில் படாமல் அடிக்க வேண்டும்.

இந்த முறையைக் கடைப்பிடிக்க இயலாத நிலையில், கரும்பு நடவுக்கு ஒரு மாதம் முன், நிலத்தில் நீரைப் பாய்ச்சி, கோரையை முளைக்க விட வேண்டும். கோரை 3-4 இலைகளை விட்டதும், ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி கிளைபோசெட் களைக்கொல்லி, 10 கிராம் அமோனியம் சல்பேட் வீதம் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மருந்து அடித்த 15-20 நாட்களில் கோரையின் தாய்க் கிழங்கும் வேர்த் தண்டும் முழுதாகக் காய்ந்து விடும்.

இருப்பினும் மண்ணிலுள்ள கோரைக்கிழங்கு மற்றும் அறுகுத் தண்டுகளை வளர விட்டு, மீண்டும் ஒருமுறை இந்தக் களைக் கொல்லியைத் தெளித்தால், எளிதாக அழித்து விடலாம்.

சுடுமல்லி போன்ற ஒட்டுண்ணிகள் நிறைந்த இடங்களில் அட்ரடாப் மருந்தை முன்னே கூறியுள்ள முறையில் அடித்து விட்டு, 45 ஆம் நாள் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பெர்னாக்ஸோன் (2,4-டி சோடியம் உப்பு) களைக்கொல்லி, 10 கிராம் யூரியா அல்லது 20 சதம் சாப்பாட்டு உப்பைச் சேர்த்து, ஒட்டுண்ணிச் செடிகளில் மட்டும் படுமாறு கைத்தெளிப்பானில் தெளிக்க வேண்டும்.


களை THIRUVARASAN 2

முனைவர் செ.திருவரசன், முனைவர் கா.பரமேஸ்வரி, எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம், விழுப்புரம் – 604 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!