உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

ந்தியாவில் வேளாண்மை உற்பத்தி நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. பசுமைப் புரட்சி மற்றும் அதன் கூறுகளான, கூடுதல் விளைச்சலைத் தரும் பயிர் வகைகள், பயிர் மேலாண்மை, செயற்கை உரங்கள் ஆகியவற்றால் உற்பத்திப் பெருகியுள்ளது.

எனினும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, விளைச்சலை இன்னும் கூட்ட வேண்டிய நிலையே உள்ளது. பயிரிழப்பைக் குறைப்பதும், மகசூலைக் கூட்டுவதற்கான காரணியாகும்.

பயிரிழப்பு என்பது, நோய்கள், பூச்சிகள், களைகளால் ஏற்படுகிறது. இவற்றைத் தடுப்பதற்கு, நிறைய இரசாயன மருந்துகளைத் தெளிக்கிறோம். இவற்றிலுள்ள நஞ்சு, சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய தீங்கைச் செய்கிறது.

இதனால், அங்கக விவசாயத்தின் மீது மக்களின் பார்வை திரும்பிள்ளது. இந்த முறையில், பயிர்களைக் காப்பதில் உயிரியல் நுட்பம் முக்கியப் பங்கை வகிக்கிறது.

பூச்சிக் கட்டுப்பாடு

உயிரியல் முறையில், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் மற்றும் பூச்சிகளைத் தாக்கும் நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தி, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஒட்டுண்ணிகள்: பொதுவாக, ஓர் இனத்துக்கு எதிர் உயிரினம் இருப்பது இயற்கையின் விதி. அவ்வகையில், ஒருவகைப் பூச்சிகளை அழிக்க, இன்னொரு வகைப் பூச்சிகள் உள்ளன. அத்தகைய பூச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பரிந்துரை அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

ஒட்டுண்ணிகளில், முட்டை ஒட்டுண்ணி, புழு ஒட்டுண்ணி என இருவகை உண்டு. முட்டை ஒட்டுண்ணி தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகளை அழிக்கும். எடுத்துக்காட்டு டிரைக்கோகிரமா. இதைக் கரும்புத் தண்டுப்புழு, நெல் குருத்துப்புழு முட்டைகளை அழிக்கப் பயன்படுத்தலாம்.

புழு ஒட்டுண்ணிகள், தீமை செய்யும் பூச்சிகளின் புழுக்களை, நேரடியாகத் தாக்கும். எடுத்துக்காட்டு பிராகானிட், பெத்திலிட். தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுவைக் கட்டுப்படுத்த, இந்தப் புழு ஒட்டுண்ணிகள் உதவுகின்றன.

இரை விழுங்கிகள்: இவ்வகைப் பூச்சிகள் பெரிதாக இருக்கும். இவை, தீமை செய்யும் பூச்சி மற்றும் புழுக்களை நேரடியாகத் தாக்கி அழிக்கும். எடுத்துக்காட்டு: கிரைசோபா. அவரை, பருத்தி போன்றவற்றைத் தாக்கும் அசுவினியை, இந்தப் பூச்சிகள் விரும்பி உண்ணும். இவற்றை எக்டருக்கு 20,000 முட்டைகள்/ புழுக்கள் வீதம் பயன்படுத்த வேண்டும்.

நோய்க் கிருமிகள்: வைரஸ், பாக்டீரியா, பூசணம் போன்றவை, தீமை செய்யும் பூச்சிகளில் நோய்களை உண்டாக்கும். எடுத்துக்காட்டாக, பருத்தியைத் தாக்கும் பச்சைக் காய்ப் புழுவைக் கட்டுப்படுத்த, 3X1d2 நச்சுயிரிகளும், புரொட்டீனியா புழுவைக் கட்டுப்படுத்த, 1.5X10 12 நச்சுயிரிகளும் பயன்படுகின்றன.

பாக்டீரியாவைப் பயன்படுத்தி, பருத்தியைத் தாக்கும், பச்சைக் காய்ப்புழு, இளஞ் சிவப்புக் காய்ப்புழு, ஆமணக்குக் காவடிப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும். பாசிலஸ் துரிஞ்சியாசிஸ் என்னும் பாக்ட்டீரியம் இதற்குப் பயன்படுகிறது.

பூசண நோய்க் கிருமியும் பூச்சிகளைத் தாக்கி அழிக்கிறது. இந்தப் பூசணம் பூச்சிகளின் உடலின் மேல் வளர்ந்து, அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. காஃபி பச்சைச் செதில் பூச்சி, தென்னைக் காண்டாமிருக வண்டு, அசுவினி, கரும்பு பைரில்லாப் பூச்சி ஆகியவற்றை, இந்தப் பூசணம் கட்டுப்படுத்தும்.

இப்படி, உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால் குறைந்த செலவில் நிறைய வருமானத்தைப் பெறலாம்.


உயிரியல் SUGANTHI e1629915824578

முனைவர் மு.சுகந்தி, முனைவர் இளங்கோ, முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!