இறைச்சி ஈரட்டி!

இறைச்சி

றைச்சியைப் பதப்படுத்தல் மற்றும் பையகம் செய்வதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், எளிமையான மற்றும் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், உடனே உண்ணும் இறைச்சிப் பொருள்கள், உடனே சமைத்து உண்ணும் இறைச்சிப் பொருள்கள், நெடுநாட்கள் சேமிப்பில் இருக்கும் இறைச்சிப் பொருள்கள் என, சமைக்கும் வேலையை எளிதாக்கும் உணவுப் பொருள்களை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறது.

மேலும், தற்போதுள்ள குடும்ப அமைப்பு, வேலைப்பளு, வாழ்க்கை முறை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், சரியான நேரத்தில் சத்துள்ள உணவை போதியளவில் எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

இதனால், உடனே உண்ணத்தக்க சத்துமிகு பொருள்களுக்கான வரவேற்பு அதிகமாகி வருகிறது. இவ்வகையில், இங்கே நொறுக்குத் தீனியான இறைச்சி ஈரட்டியைப் பற்றிப் பார்க்கலாம்.

இறைச்சி ஈரட்டி

நொறுக்குத்தீனி என்பது, உணவுக்கு இடைவேளையில் உண்ணும் பண்டம். அதிலும் பிஸ்கட் என்னும் ஈரட்டி, உலகம் முழுதுமுள்ள அனைவரும் விரும்பி உண்ணும் பொருளாகும்.

மேலும் ஈரட்டி, தானியங்களைச் சார்ந்திருப்பதால் இருப்பதால், அதில் முக்கியப் புரதங்கள் மற்றும் திரியோனின், டிரிப்டோஃபேன், லைசின் போன்ற அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன. எனவே, ஈரட்டியில் இறைச்சியைச் சேர்த்தால், சத்தாக, மணமாக, சுவையாக இருக்கும்.

தயாரிப்பு முறை: இறைச்சி மூலம் தயாரித்தல்

தேவையான பொருள்கள்: கோழி அல்லது ஆடு அல்லது மாட்டிறைச்சி 1.5 கிலோ,

வெண்ணெய் 225 கிராம்,

கலக்கிய முட்டை 105 கிராம்,

மிளகாய்த் தூள் 1.5 கிராம்,

மிளகுப்பொடி 7.5 கிராம்,

கோதுமை மாவு 600 கிராம்,

சமையல் சோடா 1.5 கிராம்,

உப்பு 9 கிராம்,

மஞ்சள் தூள் 1.65 கிராம்,

சர்க்கரை தேவைப்படின் சேர்க்கலாம்.

செய்முறை: இறைச்சியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு உப்பு, மசாலாத்தூள் மற்றும் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, இறைச்சியைப் பாதியளவில் வேக வைத்து, அரையும் குறையுமாக அரைக்க வேண்டும். வெண்ணெய்யுடன் மீதமுள்ள உப்பு மற்றும் மசாலாத் தூளைக் கலந்து பசையாக அரைக்க வேண்டும்.

பிறகு, கோதுமை மாவுடன், இறைச்சி, முட்டை, சமையல் சோடா மற்றும் வெண்ணெய்க் கலவையைக் கலந்து உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு, அதை 3 மி.மீ. கனம் மற்றும் 5 செ.மீ. விட்ட அளவில் வெட்டி மைக்ரோவேவ் ஓவன் என்னும் நுண்ணலை அடுப்புத் தட்டில் அடுக்கி, 180 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில், 20 நிமிடம் வைக்க வேண்டும். பிறகு, 30 டிகிரி வெப்பத்தில் குளிர்வித்து எடுக்க வேண்டும்.

இறைச்சித்தூள் மூலம் தயாரித்தல்

இறைச்சியைத் தட்டையான துண்டுகளாக நறுக்கி, நன்கு அரைத்து 70-75 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில், 20-22 மணி நேரம் நன்கு உலர்த்திப் பொடியாக்க வேண்டும்.

பிறகு, சல்லடையில் சலித்து, காற்றுப் புகாத புட்டியில் சேமித்து வைக்க வேண்டும். மேலே கூறியுள்ள பொருள்கள் மற்றும் 500-600 கிராம் கோதுமை மாவுடன், 500-400 கிராம் இறைச்சித் தூளைச் சேர்த்து ஈரட்டியாகத் தயாரிக்கலாம்.

நூறு கிராம் ஈரட்டியில், 25 சதம் புரதம், 20 சதம் கொழுப்பு, 5 சதம் நீர், 44 சதம் கார்போஹைட்ரேட், 4 சதம் சாம்பல் சத்து, 456-500 கி.கலோரி ஆற்றலும் உள்ளன. சத்துமிகு தீனியாகவும், நெடுநாட்கள் கெடாத உணவுப் பொருளாகவும் உள்ளது.

இறைச்சியின் மூலப் பொருள்கள் விகிதத்தில் உப்பு, நார்ச்சத்து, கொழுப்பு, அமினோ அமிலங்கள், புரதம் மற்றும் கனிமங்களை, சரியான அளவில் சேர்த்துச் செயல்மிகு ஈரட்டிகளாகவும் தயாரிக்கலாம்.


JEYANTHI

இரா.ஜெயந்தி, வே.அப்பாராவ், இர.நரேந்திரபாபு, சு.எழில்வேலன், கால்நடை உற்பத்திப் பொருள்கள் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!