ஆட்டுக்கொல்லி நோய்க்கான மூலிகை மருத்துவம்!

ஆட்டுக்கொல்லி

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச்.

ட்டுக்கொல்லி நோய், கோடைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கி, பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் முக்கிய நச்சுயிரி நோய். இதற்கான தடுப்பூசி மருந்துகள் இருந்தாலும், எல்லா விவசாயிகளும் தங்களின் ஆடுகளுக்குத் தடுப்பூசியைப் போடுவதில்லை.

சில நேரங்களில் தடுப்பூசி போடப்பட்ட ஆடுகளைக் கூட அதிக வீரியமுள்ள நச்சுயிரி தாக்குவதால், 80 சத ஆடுகள், இறந்து போகும் சூழல் உண்டாகும்.

நோய் தாக்கிய ஆடுகளைப் பிரித்து, ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் மூலிகை சிகிச்சையையும் அளித்தால் இறப்பைக் கட்டுப்படுத்த முடியும். இந்த நச்சுயிரி நோய், காற்றின் மூலம் மற்ற ஆடுகளுக்கும் பரவும் தன்மை.

ஆட்டுக்கொல்லி நோய் அறிகுறிகள்

நோயால் தாக்கப்பட்ட ஆடுகளின் முகம் வீங்கிக் காணப்படும். கண்கள் சிவந்த நிலையில் அதிக நீர்க் கசிவுடன் இருக்கும். அதிகப்படியான சளி, இருமல், மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும்.

சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுவதால், பொருளாதார இழப்பு உண்டாகும். முதலுதவி மருத்துவ சிகிச்சையுடன், மூலிகை சிகிச்சையையும் சேர்த்துச் செய்தால், நோயுற்ற ஆடுகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

முதலில், நோயுற்ற ஆடுகளைத் தனியாகப் பிரித்து வைத்து, சிகிச்சை தர வேண்டும். நோயற்ற ஆடுகளுக்கும் நோயுற்ற ஆடுகளுக்கும் சேர்த்து, மூலிகை சிகிச்சையை அளிப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டலாம்.

ஐம்பது ஆடுகளுக்கான மூலிகைக் கலவை

தேவையான பொருள்கள்: மருதாணி இலை 2 கிலோ,

சின்ன வெங்காயம் 2 கிலோ,

வேப்பிலை 2 கிலோ,

கறிவேப்பிலை 2 கிலோ,

மஞ்சள் 250 கிராம்,

சீரகம் 250 கிராம்,

வெந்தயம் 250 கிராம்,

தேங்காய் இரண்டு மூடி,

ஆமணக்கு எண்ணெய் 250 மில்லி,

வெல்லம் 250 கிராம்.

செய்முறை: இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து, சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி மூன்று வேளைக்கு என, மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும்.

மேலும், வெளிப்புற வாய்ப் புண்களுக்கு, மஞ்சள், கற்றாழை, வேப்பிலையை அரைத்து, வாய், உதடுகள் மற்றும் நாக்குப் பகுதியில் பூசி விட்டால், புண்கள் ஆறி, ஆடுகள் மீண்டும் உணவை உண்ணத் தொடங்கும்.

இராகிக் கூழைக் காய்ச்சி இரவில் புளிக்கச் செய்து அடுத்த நாள் ஆடுகளுக்குக் கொடுக்கலாம். இதன் மூலம் ஆடுகளுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். இதனால் மற்ற நுண்ணுயிரிகளின் தாக்குதல் இல்லாமல் ஆடுகள் நலமாக இருக்கும்.

மருந்து மற்றும் தடுப்பூசிச் செலவு இல்லாமல், வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு, இயற்கை முறையில் கால்நடைச் செல்வங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


ஆட்டுக்கொல்லி DR.G.KALAISELVI e1616350379131

மரு.கோ.கலைச்செல்வி, மரு.க.விஜயராணி, மரு.சக்திப்பிரியா, மைய ஆராய்ச்சி நிலையம், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!