அரோவனா மீன் வளர்ப்பு!

அரோவனா மீன்

லகிலேயே விலை உயர்ந்த மற்றும் பிரபலமான வண்ண மீன்களுள் ஒன்று ஆசிய அரோவனா. கிழக்காசிய வெப்ப மண்டல நன்னீர்ப் பகுதியில் மிகுந்து வாழும் இம்மீன், சீன டிராகன் மீனைப் போல இருப்பதால், டிராகன் மீன் எனவும் அழைக்கப்படுகிறது.

ஒளிரும் நிறம், பெரிய காசைப் போன்ற செதில்கள், அழகாக நீந்தும் திறன் மற்றும் இந்த மீன்கள் யோகத்தையும் செல்வச் செழிப்பையும் தரும் என்னும் சீனர்களின் நம்பிக்கையால், இம்மீன், மீன் வளர்ப்போர் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து உள்ளது.

இம்மீன், தான் வளரும் வீட்டில் நிகழப் போகும் துயரத்தை உணர்ந்து, அதைத் தனக்கானதாக எண்ணி, தொட்டியில் இருந்து வெளியே குதித்து உயிரை விடும் தன்மை மிக்கதாகக் கருதப்படுகிறது.

ஆழமான மற்றும் மெதுவாகப் பாயும் ஆறு, நன்னீர்க் குளம், ஆழமான குட்டை போன்றவற்றில் வாழும் இம்மீன்கள், 1840 ஆம் ஆண்டு Osteoglossum formosum என்னும் பெயரில், மிகப் பழமையான மீனினங்ளைக் கொண்ட Osteog lossidae குடும்பத்தில் சேர்க்கப்பட்டு, Sclerophagus formosum என்னும் அறிவியல் பெயரால் உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

உலகளவில் அழகு மீன் வளர்ப்புக்குப் பெருமளவில் பிடிக்கப்படுவதால், அரோவனா மீனினம் அழிந்து வருகிறது. எனவே, இதைப் பாதுகாக்கும் பொருட்டு CITES என்னும், அருகி வரும் உயிரினங்கள் சார்ந்த வணிகங்களை நெறிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு மற்றும் IUCN என்னும் இயற்கையைப் பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியம், இம்மீனினத்தைச் சிவப்புப் பட்டியலில் சேர்த்துப் பாதுகாத்து வருகின்றன.

பண்புகள்

பெரிய செதில்களால் சூழப்பட்ட இம்மீன், நீந்துவதற்கு ஏற்ற நீளமான உடலைக் கொண்டது. செதிலின் குறுக்களவு 2 செ.மீ. ஆகும். இயற்கை வாழிடங்களில் வாழும் இம்மீன்கள், முரட்டுத்தனமாக வேட்டையாடும். தனியாகவோ, சிறு கூட்டமாகவோ வாழும்.

கீழ்த்தாடையில் உள்ள மீசையைப் போன்ற இரு அமைப்புகள், குறைந்த ஒளியிலும் இரையைக் கண்டறிய உதவும். மேல் தாடையில் உள்ள கூர்மையான பற்கள் இரையைக் கடித்துண்ண உதவும். இம்மீன்கள், அதிகளவாக 7 கிலோ எடையும், 120 செ.மீ. நீளமும் வளரும்.

அரோவனா மீன்

உணவு

அரோவனா மீனினம் மாமிச உண்ணி வகையில் அடங்கும். நீரை விட்டு மேலே குதித்து, கரையோரத் தாவரங்களில் இருக்கும் புழு, பூச்சிகளை வேட்டையாடி உண்ணும். நீர் நிலைகளில் இருக்கும், இறால், தவளை, பூரானையும் விரும்பி உண்ணும். செயற்கை உணவைவிட இயற்கை உணவையே விரும்பும்.

வகைகள்

ஆசிய அரோவனா வண்ண மீனில் பல வகைகள் உள்ளன. பச்சை அரோவனா தென்கிழக்கு ஆசியாவிலும், பொன்னிறக் குறுக்குவரி அரோவனா மேற்கு மலேசியாவிலும், சிவப்புவால் பொன்னிற அரோவனா இந்தோனேசிய வடக்குச் சுமத்திராவிலும் உள்ளன.

நிறங்களைப் பொறுத்தே அரோவனா மீன்களின் விலை அமையும். இந்தோனேசிய மேற்குக் களிமடன் பகுதியில் வாழும் சிவப்பு அரோவனாவின் விலை அதிகமாகும். பச்சை இனத்தை விட, சிவப்பு அல்லது பொன்னிற மீன்களின் விலை 5-10 மடங்கு கூடுதலாகும்.

உருவவியல் மற்றும் மைட்டோ கான்ட்ரியா DNA-இன் இன வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில், பொயாய்டு மற்றும் அவரது குழுவினர் 2003- இல், அரோவனாவை, நான்கு வகையாகப் பிரித்தனர்.

அதன்படி, பச்சை அரோவனா மற்றும் பொன்னிறக் குறுக்குவரி அரோவனா S.formosus இனத்திலும், வெள்ளி ஆசிய அரோவனா S.macrocephalus இனத்திலும், சிவப்பு வால் பொன்னிற அரோவனா S.aureus இனத்திலும், சூப்பர்ரெட் அரோவனா S.legendri இனத்திலும் அடங்கும்.

ஆசிய அரோவனாவின் விலை சில நூறில் இருந்து 3 இலட்சம் அமெரிக்க டாலர்கள் வரை உள்ளது. 2009-இல் பத்து அரிய வகை அல்பினோ அரோவனாக்கள், சிங்கப்பூரில் நடைபெற்ற அக்குவாரமா பன்னாட்டு மீன் போட்டிக்கு, துப்பாக்கிப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த அல்பினோ அரோவனா மீன்களை உருவாக்கிய மலேசியாவின் ஆலன்டே, திடீர் மாற்றமடைந்த இந்த அல்பினோ அரோவனாவை, சீனாவின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் மூன்று இலட்சம் டாலர்களுக்கு வாங்கி இருப்பது, இம்மீனின் பெருமையைப் பறை சாட்டுகிறது என்று கூறியுள்ளார்.

பாலின வேறுபாடு்

சிறிய அரோவனா மீன்களில் பாலின வேறுபாடுகளை அறிய இயலாது. 3-4 ஆண்டுக்குப் பிறகு தான் பாலின வேறுபாடுகள் தெரியும். இவை, உடலமைப்பு மற்றும் வாயின் அளவைக் கொண்டு அறியப்படுகின்றன.

ஆண் பெண்

ஆண் மீனுக்கு, பெரிய தலை மற்றும் வாய், ஒளிரும் மற்றும் சிறப்பான நிறம், குறுகிய மற்றும் நீண்ட உடல், அதிக முரட்டுக் குணம் இருக்கும்.

பெண் மீனுக்கு, சிறிய தலை மற்றும் வாய், வெளிர் நிறம், அடர்த்தியான உடல், குறைந்த முரட்டுக் குணம் இருக்கும்.

ஆண் அரோவனாவின் பெரிய வாய் மற்றும் கீழ்த்தாடை, முட்டைகளை அடை காக்க ஏதுவாக இருக்கும்.

சினைமீன் வளர்ப்பு

சினை மீன்களைப் பொறுத்தே மீன் குஞ்சுகளின் தரம் இருக்கும். எனவே, அரோவனா இனப்பெருக்க மீன்கள், வெவ்வேறு பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்ந்திருக்க வேண்டும்.

நீண்ட வாழ்நாளைக் கொண்ட அரோவனா மீன்கள் 3-4 வயதில் பருவத்தை அடையும். இயற்கையாக வாழும் இம்மீன்கள், ஜுலை மற்றும் நவம்பரில் இனப்பெருக்கம் செய்யும். பண்ணைகளில் நன்கு உண்டு வளரும் மீன்கள், ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும்.

பண்ணைகளில் வளர்ந்த அரோவனா மீன்கள், 1981-இல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் முதன் முதலில் செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயற்கை இனப்பெருக்கம் பெருமளவில் தொடங்கியது. 20x20x1 மீட்டர் அளவுள்ள மண் குளங்கள் சினை மீன்களை வளர்க்கத் தேவை.

குளத்து நீர், மென்மையான மற்றும் 6.5-7.5 கார அமிலத் தன்மையில் இருக்க வேண்டும். நீரின் வெப்பநிலை 28-31 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.

இறால், மீன் இறைச்சி, பூச்சிகள் போன்ற இயற்கை உணவுகளைச் சினை மீன்களுக்குத் தர வேண்டும். செயற்கை உணவுகள், அரோவனா மீன்களின் வளர்ச்சி மற்றும் பிழைப்புத் திறனைக் குறைக்கும்.

அரோவனா மீன்

இனப்பெருக்கம்

3-4 வயதான அரோவனா மீன்கள் தமது வாழிடங்களில் இயற்கையாக இணையும். இதற்கு, விரலளவு ஆண் மற்றும் பெண் மீன்களை 3-4 ஆண்டுக்கு ஒன்றாக வளர்க்க வேண்டும்.

முரட்டுத்தனமான இந்த மீன்களைச் செயற்கை முறையில் இணைய வைக்க முடியாது. சிறந்த முட்டை ஈனுதல் மற்றும் கருத்தரிப்புக்கு, நன்கு பருவமடைந்த ஆண், பெண் மீன்கள் 1:1-2 வீதம் இருக்க வேண்டும்.

அரோவனா மீன்களின் இனப்பெருக்கம் தனித்தன்மை வாய்ந்தது. இவை, சூரியன் மறையும் போது அல்லது இரவு நேரத்தில் முட்டைகளை இடும். பெண் மீனுக்கு மிக அருகில் ஆண் மீன் நீந்துவதும், மற்ற மீன்களைத் துரத்துவதும், இனப்பெருக்க நேரத்தின் அறிகுறிகள் ஆகும்.

இனப்பெருக்கம் நிகழும் போது ஆண் மீனின் மலப்புழைத் துடுப்பு, பெண் மீனுடன் தொடர்பில் இருக்கும். மேலும், இதன் தொடர் அசைவு, பெண் மீன் முட்டை இடுவதை ஊக்கப்படுத்தும்.

இந்நிகழ்வு, இரண்டு வாரம் வரையில் நீடிக்கும். இணை சேர்ந்த ஆணும் பெண்ணும், முட்டைகளை இடுவதற்கு, குளத்தின் அமைதி மற்றும் ஆழமான பகுதிக்குச் செல்லும்.

ஒரு பெண் மீன் 30-90 முட்டைகளை இடும். முட்டையின் குறுக்களவு 2 செ.மீ. இருக்கும். ஆண் அரோவனா விந்தை வெளியிட்டு முட்டைகளைக் கருத்தரிக்கச் செய்யும்.

ஆண் மீனானது, நீருக்கு மேலே வந்து காற்றைச் சுவாசித்துக் கொண்டு, மீண்டும் குளத்தின் அடிப்பகுதிக்குச் சென்று, கருத்தரித்த முட்டைகளை தனது வாயில் சேகரித்து அடை காக்கும்.

ஆண் மீனின் இந்தச் செயல், மேம்பட்ட பெற்றோரின் பண்பை ஒத்துள்ளது. இப்படி, 7-8 வாரம் அடை காத்து, சுயமாக நீந்தத் தெரிந்த 8-10 செ.மீ. அளவுள்ள குட்டிகளை வாயிலிருந்து வெளிவிடும்.

முட்டைப் பொரிப்பும் குஞ்சு வளர்ப்பும்

முட்டையிட்டுக் கருத்தரித்த ஆண், பெண் மீன்களை வலையில் பிடித்து, வாயில் முட்டைகளை வைத்துள்ள ஆண் மீன்களைப் பிரித்தெடுக்க வேண்டும்.

சேகரித்த மீன்களை 9x45x45 செ.மீ. அளவுள்ள மீன் குஞ்சுப் பொரிப்புத் தொட்டிகளில் விட வேண்டும். தொட்டியில் 27-29 டிகிரி செல்சியஸ் வெப்பம், 6 மி.கி./லிட்டர் அளவில் காற்றோட்டம் இருக்க வேண்டும், ஆண் மீனின் வாயிலிருந்து மீன் குஞ்சுகளை எடுத்தும் வளர்க்கலாம்.

1-2 மி.கி./லிட்டர் வீதம் அக்ரிஃபளெவின் கிருமிநாசினியை எடுத்து, மீன் குஞ்சுகளை வளர்க்கும் தொட்டிகளில் இட்டு, நோய்த் தொற்றைத் தடுக்கலாம்.

மீன் குஞ்சுப் பொரிப்பு மற்றும் பிழைப்பு வீதத்தை அதிகரிக்க, 2-5 மி.கி./லிட்டர் வீதம் தைராக்சினை, முதல் இருபது நாட்களுக்கு மீன் குஞ்சுப் பொரிப்புத் தொட்டிகளில் இடலாம்.

வளர்ப்பு முறை

குஞ்சுகள் பொரித்து 7-8 வாரங்களில் கரு உணவு முழுதும் உறிஞ்சப்படும். அப்போது குஞ்சுகள் 8-10 செ.மீ. நீளத்தில் வளர்ந்து, தாமாக நீந்தும் திறனில் இருக்கும்.

போதிய உணவைத் தராத நிலையில், அவை தங்களுக்குள் அடித்துக் கொள்ளும். இந்தக் காலத்தில் சிறிய மற்றும் உயிருள்ள இறால், மீன்களை உணவாக அளித்துப் பழக்கப்படுத்த வேண்டும்.

மேலும், இந்தக் குஞ்சுகள் 10-12 செ.மீ. வளரும் வரை, சிறிய இறால்கள், சிறிதாக வெட்டப்பட்ட மீன் இறைச்சியை உணவாக இட வேண்டும். மாமிச உண்ணியான அரோவனா மீன்களின் கழிவால், நைட்ரஜன் அதிகமாக வெளியேறும். இதனால், மீன் தொட்டியில் அம்மோனியா நைட்ரைட் மற்றும் நைட்ரேட் பெருகி, மீனின் நலம் பாதிக்கப்படும்.

எனவே, நீரின் தரத்தை மேம்படுத்த, 2-3 நாட்களுக்கு ஒருமுறை 40-60 சத நீரை மாற்ற வேண்டும். வெப்பநிலை மற்றும் அமில கார நிலையைச் சரியாகப் பேண வேண்டும். வளர்ப்புத் தொட்டிகளில் தினமும் 10-12 மணி நேரம் செயற்கை ஒளியைத் தர வேண்டும்.

இது, மீன்களின் உடலிலுள்ள வண்ண நிறமிகள் நன்கு உற்பத்தியாகி மீன்களின் வண்ணம் நன்றாக இருக்க உதவும். மீன் குஞ்சுகள் 6-7 மாதங்களில் 20-25 செ.மீ. வளர்ந்து விற்பனைக்குத் தயாராகி விடும்.

வணிக நிலை

1981-இல், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் அரோவனாவில் செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யப்பட்டது. 2012 முதல் அரோவனா வணிகம் உலகளவில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் நடந்து வருகிறது.

அரோவனா உற்பத்தியில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. மலேசியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியளவில் அரோவனா மீன்கள் இறக்குமதி மற்றும் உற்பத்தியில் கேரளம் முன்னிலையில் உள்ளது. ஒரு அரோவனா மீன், சில ஆயிரத்தில் இருந்து 2.5 இலட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.


ம.கீதா, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, பொன்னேரி. ச.சுதர்சன், மத்திய மீன்வளக் கல்வி நிலையம். மும்பை. முனைவர் சா.ஆனந்த், ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு நிலையம், ஈரோடு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!